மாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவைபெண்கள் ஆண்களுக்கு நிகராக அலுவலகங்களிலும் வெளியிடங்களிலும் அவர்களுக்கே உரித்தான முத்திரை பதித்து வரும் இந்நிலையில், மாதசுழற்சியும், அதையொட்டிய நாட்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை குறித்தும் நாம் இந்த கட்டுரையில் அறிய இருக்கிறோம்.

 

சமீபத்தில், ஒரு புதுமணத் தம்பதியை சந்தித்தேன். மனைவியின் சுபாவத்தில் சில நாட்கள் வித்தியாசத்தை உணர்வதாக கூறினார் அவர்.

 

சில வாரங்கள், அவள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சில நாட்கள் அதிக கோபம், வாக்குவாதங்கள், அழுகை என இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

 

இதன் பின்னணியில், அவர்களுக்கிடையே மனவிரிசல்களோ சிக்கல்களோ இல்லை என்பதை ஒரு மனநல மருத்துவராக உறுதிசெய்த பிறகு, இந்த சுபாவ வித்தியாசத்திற்கான மருத்துவ பின்னணியை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

 

ஹார்மோன்கள் பாதிப்பு

 

பெண்களுக்கு உடல் ரீதியாக, ஹார்மோன்களின் தாக்கம் அதிகம். பூப்படையும் சமயம் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல் ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள்.

 

தோராயமாக எழுபது சதவீத பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) அவர்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

 

ஹார்மோன்கள் நம் உடலின் இயக்கத்தையும், மனதின் தன்மையையும் மாற்ற வல்லவை என்பதை நாம் உணர வேண்டும்.

 

மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் ஈஸ்ட்ரோஜென் (Oestrogen) எனப்படும் ஹார்மோனின் பாதிப்பில் இருக்கிறார்கள்.

 

இந்த காலக்கட்டத்தில் (phase) பெண்களுக்கு அதிக உற்சாகமும் ஆர்வமும் ஏற்படும். ஆடித்தள்ளுபடியில் பொருட்களை வாங்குவதில் இருந்து , வீட்டு வேலைகளை பம்பரமாய் சுழன்று செய்வது வரை அனைத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள். புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஏற்படும் . குடும்பத்தில் உறவுநிலைகளை கச்சிதமாக சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள்.

 

மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் என்றால் என்ன?

 

மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள்.

 

வயிறு உப்புவது , மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி, உடல் அசதி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

 

மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை, வேலையிடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தனிமையாக உணர்வது, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவை பிஎம்எஸ்-இன் ('PMS') அறிகுறிகளே !

 

பசியின்மை, தூக்கமின்மை, நமக்கு பிடித்த விஷயங்களைக் கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ?

 

பிஎம்எஸ் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன் தொடங்கி, ரத்தப்போக்கு தொடங்கியபின் படிப்படியாக குறையும். எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.

 

வயதாக வயதாக இதன் தன்மையும் மாறுபடும். உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை.

 

அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை உண்பது, உடல் பருமன், ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது, போதிய தூக்கமின்மை, அதிக அழுத்தங்கள் போன்றவை பிஎம்எஸ் வீரியத்தை அதிகரிக்கும் .

 

பிஎம்எஸ் ('PMS') உள்ளதா என்பதை எப்படி அறிவது ?

 

உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் எப்போது ஏற்படுகிறது என்பதை ஒரு டைரியிலோ, நாள்காட்டியிலோ குறித்துவையுங்கள்.

 

மனதளவில் ஏற்படும் மாற்றங்களை நடுநிலையாக ஒரு மூன்றாவது நபராக இருந்து கவனியுங்கள். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை பட்டியலிடுங்கள் .

 

பிஎம்எஸ் என்பது நான்கில் மூன்று பெண்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் தாக்கம் குறைவாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

 

நூறில் ஐந்து பெண்களுக்கு பிஎம்எஸ்-இன் தன்மை மிகவும் அதிகமாகி அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தால், அது மாதவிடாய்க்கு முந்தைய பதற்ற மனநிலை [Pre Menstrual Dysphoric Disorder (PMDD) ] என சொல்லக்கூடிய மனநலம் சார்ந்த கோளாறாக இருக்கலாம் . அதற்கு நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிக முக்கியம்.

 

பிஎம்எஸ் - எப்படி சமாளிப்பது ?

 

ஹார்மோன்கள் உங்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை, உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும் .

 

ஒரே நேரம் அதிகமாக உண்பதைவிட, அடிக்கடி, அளவாக சாப்பிடுவது நல்லது. மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

 

நார்சத்து அதிகம் உள்ள காய்க்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக உண்ணவேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம் .

 

ஒரு நாளில் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது நடைபயிற்சியாகவோ, நடனமாகவோ, மிதி வண்டிஓட்டுதல், நீச்சல் போன்ற உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

பொதுவாக மாதவிலக்கு நாட்களில் உடற்பயிற்சியை பலர் நிறுத்திவிடுவோம். ஆனால், மிதமான உடற்பயிற்சி பிஎம்எஸ்- குறைப்பது மட்டுமின்றி தாளாத வலியை ஏற்படுத்தும் மாதவிடாய் பிடிப்புகளையும் (menstrual cramps) குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை .

 

பகலில் எத்தனை தூங்கினாலும், அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் திறன்பேசி, மடிக்கணினி போன்ற மின்னணுப் பொருட்களை தவிர்த்து (gadgets) தவிர்த்து புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் பேசி மகிழ்வது என மனதை இளைப்பாற்றி கொண்டால் உறக்கத்தின் தரம் மேம்படும் .

 

நினைவிருக்கட்டும் ! பிஎம்எஸ் ஒரு நோயல்ல. அதை நோயாக மாறாமல் இருப்பது, உங்கள் கையில் தான் இருக்கிறது. நம் உடலும் மனமும் இயங்கும் விதத்தை நாம் புரிந்துகொண்டால், எல்லாம் நலமே.

 

நன்றி: ரம்யா சம்பத்-மனநல மருத்துவர்-/- பி.பி.சி  தமிழ்

 

0 comments:

Post a Comment