பழகத் தெரிய வேணும் – 59

குறையேதும் உண்டோ?

இந்த நாகரிக யுகத்தில் யூ டியூபைப் பார்ப்பவர்கள் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது எந்த நடிகை எப்படியெல்லாம் கெட்ட வழியில் போனாள், எந்த நடிகர் எத்தனைப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார், மனைவியுடன் சண்டை போட்டார் போன்ற செய்திகள்தாம்.

 

இவை அடிக்கடி வெளியிடப்படுவது எதனால்?

 

பிறரிடம் குற்றம் கண்டுபிடித்தால் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோம் என்ற அற்ப திருப்தியைப் பிறருக்கு உண்டாக்குவதற்காக.

 

பிறரை வருத்துவது எதற்காக?

தன்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று நினைப்பவரே அந்த வருத்தத்தைப் போக்க, அல்லது அதை மறைக்கவென பிறரது மகிழ்ச்சியைக் குலைக்கத் திட்டம் போடுவார்.

 

இப்போது நல்ல நிலையில் இருப்பவர் ஒருவர் என்றோ தவறு செய்திருந்தால், இயன்றவரை அதைப் பரப்பி, அவருடைய மதிப்பைக் குறைக்க எண்ணுவார்.

 

தம்மைப் போல் இல்லாத பிறரெல்லாம் `அசடு,’ `முட்டாள்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இவர்களுக்கு. தம்மால் இயலாததை, அல்லது புரியாததைச் செய்பவர்களைக் கண்டனத்துக்கு உரியவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். (இத்தகைய தாக்குதலுக்குப் பயந்தே பலரும் தமது ஆக்கப்பூர்வமான இயல்பை மறைத்து, பிறரைத் தொடர்ந்து நடக்கிறார்கள்).

 

வெற்றி பெற்றவர்கள்தாம் மதிக்கத்தக்கவர்கள் என்பதில்லை. நற்பண்பு முக்கியமில்லையா?

 

நற்குணம் என்பது மதம், இனம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் கடந்தது.

 

::கதை::

மலேசியாவிலிருந்த அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலாவின் நாட்டியம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், அவள் ஒருத்திதான் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்றிருந்தாள்.

 

அது போதாதா, சக மாணவிகளின் பொறாமையைத் தூண்டிவிடுவதற்கு!

 

அவளுடன் படித்த யோக் மூய் (Yoke Mui) என்ற சீனப்பெண், “உன் தாய்க்கு உன்மேல் அன்பே கிடையாது,” என்று ஆரம்பிக்க, கலா விழித்தாள்.

 

பின் என்ன! உன் படிப்பைக் கெடுக்கிறார்களே! ஆடுவதற்கு விரயமாக்கும் நேரத்தில் நீ படிப்பில் கவனம் செலுத்தினால், பரீட்சைகளில் இன்னும் சிறப்பாக மதிப்பெண்கள் வாங்கலாமே!” என்று தூபம் போட்டாள்.

 

யோக் மூய்க்கு அவளுடைய தாய் தன்னிடம் போதிய அன்பு காட்டவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் இன்னொரு தாயைப் பழித்து, ஆறுதல் தேட நினைக்கிறாள்.

 

`பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று பயந்தே அவளைப் போன்ற பலரும் தம்மை அடக்கிக்கொள்கிறார்கள். இதனால் நிம்மதியை இழந்துவிடுவோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

 

கலா அதிரவில்லை. “படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று உன்னிடம் சொன்னேனா?” என்று அவள் வாயை அடைத்தாள்.

 

பிறர் புகழ வாழ்கிறவர்கள்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்க நேரிடும்.

 

பிறரைக் குறைகூறும் ஒருவர் தன்னையுமறியாது தன்னைப் பற்றித் தெரிவிக்கிறார். இது புரிந்தால், குறை தேட மாட்டார்கள்

 

ஒரு பிரபல நடிகர் ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்து, ஒருசில படங்களுக்குப் பின்னர் மிகவும் பருமனாக ஆனார்.

 

பத்திரிகைக்காரர்கள், விசிறிகள் என்று பலரும், `ஏன் இப்படி குண்டாகிக்கொண்டே இருக்கிறீர்கள்? உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்களேன்!” என்று வற்புறுத்தினார்கள். அவர்களால் அவருடைய நடிப்பினால் மட்டும் திருப்தி அடைய முடியவில்லை.

 

ஒருவர் தன் வாழ்நாளில் அனுபவித்தது, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்த விதம், கடந்தகால நினைவுகள் — இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் மட்டுமே அவரைப் பற்றி முழுமையாக அறியமுடியும்.

 

அந்த நடிகர் அளித்த மறுமொழி: “என் இளமைக் காலத்தில் நான் ஒரு இட்லிகூட கிடைக்காமல் பசியில் வாடி இருக்கிறேன். இப்போதுதான் போதிய வசதி கிடைத்திருக்கிறது. இனியும் வயிற்றைக் காயப் போடச் சொல்கிறீர்களே!”

 

`எதற்காவது குறை கண்டுபிடிக்காது, என் நடிப்பை மட்டும் கவனியுங்களேன்!’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்!

 

பிறர் நம்மைக் குறைகூறுகிறார்களே என்று மனம் உடைந்துவிடாமல், `யாரிடம்தான் குறையில்லை?’ என்று மனத்தைத் தேற்றிக்கொண்டதால் அவர் நிலைத்து நிற்கிறார்.

 

பிறர் ஒருவரைக் குறைகூறுவது, தவறாக எடைபோடுவது—இதெல்லாம் அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

 

::கதை::

இந்த லீலா ஆண்களுடன் எப்படிச் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்!” என்று நடுத்தர வயதுப் பெண்கள் பலர் தமக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

 

`சிரித்துச் சிரித்து’ பேசிய லீலாவுக்கும் அவர்கள் வயதுதான். ஆனால், அவள் சிறு வயதிலிருந்தே ஆண்களுடன் சேர்ந்து பள்ளியில் பயின்று, அவர்களுடன் நன்கு பழகியவள். அயல்நாட்டில், நாகரிகமாக வளர்க்கப்பட்டவள்.

 

இதில் தவறு யார்மேல்?

 

தம்மையும் இவ்வாறு சுதந்திரமாகப் பழக விடவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதான் வம்புப் பேச்சு.

 

ஆண்களுடன் பேசினாலே கற்பு போய்விடும் என்பதுபோல் இளவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டு, முதலில் கணவரைக் கண்டு பயந்து, பிறகு அவரையே அதிகாரம் செய்யும் துணிச்சலை வளர்த்துக்கொண்ட அப்பெண்கள் மேலானவர்களா, இல்லை, பலருடனும் சகஜமாகப் பழகிய லீலா மேலானவளா?

 

விடுமுறையில் பழகுவது

பிறரது இல்லத்திற்கு குறுகிய காலம் விருந்தினராகப் போகிறவர்கள் வேடிக்கையாகப் பேசி அங்குள்ளவர்களைக் கவர நினைப்பார்கள். மிகுந்த கலகலப்புடன் இருப்பார்கள்.

 

எவ்வளவு நன்றாகப் பழகுகிறார்!” என்று வீட்டினர் மகிழ்வார்கள்.

 

இது சரியான தீர்ப்புதானா என்று யோசிக்க வேண்டும்.

 

அவருடைய குடும்பத்தினரிடமோ, அலுவலகத்திலோ அப்படியே இருப்பார் என்று சொல்ல முடியாது.

 

வந்த இடத்தில் பிறர் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்று பலரும் நாடகம் போடுகிறார்கள். அவ்வளவுதான்.

 

`நான் இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்,’ என்று பிறரிடம் எதற்காகச் சொல்லவேண்டும்?

 

ஒரு மேற்பயிற்சியின்போது, ஆசிரியை ஒருத்தி என்னிடம் கேட்டாள்: “ராமச்சந்திரனின் மனைவி சீனப் பெண்ணா?”

 

குறிப்பிட்டவர், எங்களுடன் படித்தவர்.

 

நான் சிரித்தேன். “நீ தவறானவளிடம் வந்து கேட்கிறாய்!”

 

யார் எவளை மணந்திருந்தால் என்ன? அவருக்குப் பிடித்ததைச் செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு என்ன வந்தது?

 

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அவரிடமிருக்கும் குறைகள் அல்லது வித்தியாசங்கள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதற்காக விரயம் செய்யும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறலாம் என்று ஆழமாக யோசித்தாலாவது பிரயோசனம் உண்டு.

 

பார்ப்பவர்களைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது சாமானியர்களின் குணம். ஆனால், அவர்களைப் பற்றிப் புரிந்தும், எதுவும் கூறாது இருப்பது நற்குணம்.

 

ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு அவர்களைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் குற்றம் காண்பதை நம்புவதும் காரணமாகிறது.

 

நாம் பிறரைக் குறைகூறுவதால் அவர்கள் எந்தப் பாதிப்பும் அடையப் போவதில்லை. மாறாக, நம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்கிறோம்.

 

::கதை::

கலைஞர் பட்டுசாமி அடிக்கடி பிற கலைஞர்களைக் குறை சொல்வார். கேட்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் கூறும் குறைகளை சிரித்து ரசிப்பது அவருக்கு அருமருந்தாகியது. ஓயாமல் அப்படியே பேசத் தொடங்கினார்.

 

ஒரு முறை நான், “எனக்கு இந்த சுருதிப் பெட்டியை இயக்கத் தெரியாது. அவர் சொல்லிக் கொடுத்தார்,” என்று வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

 

பட்டுசாமி அதிர்ந்து, “அப்போது, என்னைப் பற்றிக்கூடப் பேசுவீர்களா?” என்று கேட்டார்.

 

ஆமாம். நீங்க மற்றவர்களைப் பத்திப் பேசலியா?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்க, அவர் வாய் அடைத்துப் போயிற்று. (இத்தனைக்கும், நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே!)

 

அவர் பிற கலைஞர்களைப் பற்றித் தாறுமாறாகப் பேசியது அவர்கள் குற்றமில்லை. தனக்கு எத்தனையோ திறமை இருந்தும், தான் அவர்களைப்போல் புகழ் பெறாமல் முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் அவருக்கு. அவர்களைப் பழித்து, தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார்.

 

அவர்களிடம் குறை இருந்தாலும்தான் என்ன!

 

யாரிடம்தான் குறை இல்லை?

நாம் பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாவிட்டால், நம்மைப் பற்றி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நம் கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம்.

::-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment