வாழ்த்துங்கள்!நீங்களும் வாழலாம்!

வாழ்த்துவதால் நமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இன்றைய பழமொழிகள் பேசுகின்றன..


 01. மற்றவர்களின் துன்பங்களும், எதிர்மறைகளும் நம்மை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் வாழ்த்துவதை ஒரு கருவியாக பாவிக்க வேண்டும். வாழ்த்தும்போது அந்த எண்ணம் நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டும்.

02. வெறுப்பும் கோபமும் வேதனை தரும், அதைவிடுத்து வாழ்த்த ஆரம்பித்தால் வாழ்த்து பெறுபவர் நலமடைவார்கள் அது நமக்கு நன்மை பயக்கும். இருபது வருடங்களாக அறுந்து போன உறவுகள் கூட வாழ்த்துவதால் மறுபடியும் துளிர்த்து வளர்ந்துள்ளன.

03. இப்படி தினசரி வாழ்த்துங்கள்

 : வாழ்க வாழ்க என் வாழ்க்கைத் துணைவி ( துணைவர் )
வாழ்க வாழ்க என் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என் உடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்க என் தொழிற்துறை அன்பர்கள்
 வாழ்க பகைவர்கள் வளமோடு திருந்தி வாழ்க
இவ்வுலகில் வாழ் மக்கள் எல்லாம்
 வாழ்க வாழ்க இவ் வையகம்
வாழ்க வாழ்க அற நெறி,
வாழ்க மெய்ஞானம் அனைவரும்
 அருளாற்றல் பெற்று நலத்துடனும் நல்லறிவுடனும் வாழ்க..

 04. நாமறிந்து நமக்கு பகைவர்கள் இல்லாதிருக்கலாம் ஆனால் நமது செயல்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பகை கொள்ள வைத்திருக்கலாம், ஆகவே அவர்களை வாழ்த்தும்போதுதான் வெறுப்பின் அலைகளை வாழ்த்தின் அலைகள் எதிர் கொண்டு சமாதானப்படுத்தும்.

 05. வாழ்த்தி வாழ்ந்தால் அமைதி நிலவும், பொறாமை நீங்கி மரியாதை பிறக்கும், கோப வெங்கொடியன் ஓடி மரியாதை பிறக்கும், வெறுப்பென்னும் முட்கள் மறைய கருணை என்னும் மலர் விரியும், நமது ஜீவகாந்தம் பெருகும்.

06. வாழ்த்தி வாழ்த்தி எப்பேற்பட்ட தீயவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும், அவர்களின் செயலை திருத்திவிட முடியும், எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும், நல்வர்களாக மாற்றிவிட முடியும்இது உண்மை என்பதை வாழ்த்தி பலன் கண்டவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

 07. தினசரி இப்படி வாழ்த்துங்கள் :

நான் பெற்றிருக்கிற ஒவ்வொரு நல்லனவற்றையும் வாழ்த்துகிறேன்..
 எனது உடல் நலத்தை வாழ்த்துகிறேன்..
எனது அன்பை வாழ்த்துகிறேன்..
எனது மகிழ்ச்சியை வாழ்த்துகிறேன்..
எனது செல்வத்தை வாழ்த்துகிறேன்..
எனது வேலையை வாழ்த்துகிறேன்..
 எனது குடும்பத்தை வாழ்த்துகிறேன்..
எனது நண்பர்களை வாழ்த்துகிறேன்..
எனது உற்றாரையும் உறவினரையும் வாழ்த்துகிறேன்..
எனது சூழலை வாழ்த்துகிறேன்..
 எனது தெய்வீக உறைவிடத்தை வாழ்த்துகிறேன்..
எனது தூய்மையான மனப்பாங்கை வாழ்த்துகிறேன்
எனது சீரிய மனப்பக்குவத்தை வாழ்த்துகிறேன்
எனது திறமைகளை வாழ்த்துகிறேன்
என்னைச் சுற்றியுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய அனைத்தையும் வாழ்த்துகிறேன்.
 இத் தெய்வீகம் சூழ்ந்த உலகை வாழ்த்துகிறேன்
வளமுடைய பேரண்டத்தையும் வாழ்த்துகிறேன்
என நம்முடன் தொடர்புடைய எல்லாவற்றையும், எல்லோரையும் வாழ்த்த வேண்டும்.

09. ஒரு பேனாவை வாழ்த்தி உபயோகித்தால் அது நன்றாக எழுதும், அதிக நாள் உழைக்கும், ஒரு புத்தகத்தை வாழ்த்திப் படித்தால் கருத்துக்கள் விளங்கும், மனதில் ஆழப்பதியும், புதிய கருத்துக்கள் உருவாகும்.

10. கொடுக்கும் பணத்தை இந்தப்பணம் வளமையைப் பெருக்க வாழ்த்துகிறேன் என வாழ்த்தி மன நிறைவோடு கொடுக்க வேண்டும்.

11. வாங்கும் பணத்தை இந்தப் பணம் எனக்கு முடிவில்லா வளமையைத் தரவேண்டுமென வாழ்த்தி மன நிறைவோடு வாங்க வேண்டும். இதை அன்றாட பழக்கமாக்க வேண்டும்.

12. இந்தக் கைக்கடிகாரத்தை வாழ்த்துகிறேன், இது எனக்கு சரியான நேரத்தைக்காட்டி எனது கடமையை நான் நேரம் தவறாது செய்ய உதவுகிறது இது வாழ்க.. என வாழ்த்துங்கள், இதுபோல அனைத்து பொருட்களையும் வாழ்த்துங்கள்.

13. உயிரில்லாத பொருட்களை வாழ்த்தி என்ன பயன் என்று கருதிவிடாதீர்கள் உயிரில்லாதவற்றுக்கும் ஆன்மா உண்டு மறந்துவிடாதீர்கள்.

14. என்னைக் கடந்து போகும் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன், ஒருவரைப் பார்க்கப் போகும்போது அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு போவேன், எனக்கு உதவுபவர்கள் இதனால் அதிகம் கிடைக்கிறார்கள் என்கிறார் அந்த அன்பர்.

15. ஒருகாலமும் மற்றவரிடம் வெறுப்பு கொள்ளாதீர்கள், வெறுப்பு என்பது ஓர் எலியை வீழ்த்த தமது வீட்டையே கொழுத்துவது போன்ற செயல்.

16. துரியோதனனுக்கு உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தீயவர்களாக தெரிந்தார்கள், தர்மனுக்கோ நல்லவர்களாக தெரிந்தார்கள். இருவரும் எண்ணப்பாங்கின்படியே பலன்களை பெற்றார்கள். ஆகவேதான் ஒரு காலமும் வெறுப்பு, பொறாமை, பழிவாங்கல், பகிஷ்கரிப்பு போன்றவற்றை வளர்க்க வேண்டாம்.

16. மனவள பயிற்சி மனிதனுக்கு முக்கியம் :

a. எங்கெல்லாம் நான் இருக்கிறேனோ அங்கெல்லாம் இறையும், இறையருளும் இருப்பதால் என்னைச்சார்ந்த எல்லாமே நலமாக இருப்பதாக எண்ணுங்கள்.

b. மற்றவர்கள் மீதும், எனது சூழல் மீதும், நான் இருக்கும் இடம் மீதும் நான் கொள்ளும் கடும் சினமும், மனக்கசப்பும், எதிர்மறையான எண்ணங்களும் தெய்வீக ஒளியால் நீங்குகிறது.

c. தெய்வீக ஒளியும், நலமாக்கும் சக்தியும், இணக்கமும், அமைதியும் என்னிலிருந்து வெளிப்பட்டு, என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றின் மீதும் படர்கிறது.

d. இந்தத் தெய்வீகச் சூழல், இங்குள்ள எல்லாவற்றையும் வாழ்த்துகிறேன், நல்லதே என்னை வந்தடைகிறது.

17. பகிஷ்கரிப்பது, புறக்கணிப்பது போன்றவை சமுதாய நாசகார செயல்களாகும், இதை செய்தாலும், செய்வோருக்கு துணை போனாலும், கருத்தியல் ரீதியாக ஏற்றாலும் ஒரு நாள் நீங்களும் உலகத்தால் பகிஷ்கரிக்கப்பட்டவராக மாறுவீர்கள்.

 18. பகிஷ்கரிப்பு செய்தவர்களை உலகம் ஒன்று திரண்டு அழித்து, பகிஷ்கரிக்காதவர்களை வாழ வைப்பதே புராண, இதிகாச, உலக வரலாறாக இருப்பதை உணர்ந்து வாழ்த்துங்கள், வாழ விடுங்கள் பகிஷ்கரிக்காதீர்கள்.

 19. உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, நாம் நினைப்பதுதான் சரியென பிடிவாதம் பிடித்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நின்றால் காலம் உங்களை தூக்கி வீசிவிட்டு நடக்கும் இதை உணர்ந்து வாழ்த்தி வழிவிடுங்கள்.

20. நல்ல நிகழ்வுகள் நடைபெறுவதை பார்க்க வேண்டும், பங்கேற்க வேண்டும், அதைத் தடுத்தால் நல்ல நிகழ்வுகள் நடைபெறாத வாழ்வை நாமே வரவேற்றதாகப் போய்விடும், அதன் பிறகு இருளே நமது வாழ்விற்குள் தாமாக வந்து அடர்ந்துவிடும்.

21. உலகைக் குறைகூறக்கூடாது அதில் உள்ள குறைகளை களைந்து நிறைவாக்க வேண்டும், குறை சொல்லிக்கொண்டே இருந்தால் நிறைவு வராது. பகிஷ்கரிக்க சொல்வோரின் பேச்சுக்களை தொடர்ந்து அவதானித்தால் அவர்களுடைய பழக்கம் குறைகூறி வாழ்வதாகவே இருக்கக் காண்பீர்கள் ஆகவே அத்தகையோர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

22. இவ் அண்டத்தில் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத ஒவ்வொன்றும் எனக்கு நன்மைகளையும், வெற்றிகளையும் பெற்றுத் தருகின்றன என்று எண்ணுங்கள்.

23. என்னுள்ளே உறையும் இறைத்தன்மையை வெளிக் கொணர்கிறேன். அதனால் நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் என்னிடமிருந்து அன்பும், அருளும், தன்னம்பிக்கையும் சேர்கின்றன என நினையுங்கள்.

24. நான் தொடும் ஒவ்வொன்றையும், பார்க்கும் ஒவ்வொன்றையும் வாழ்த்துகிறேன், இதனால் இவ்வுலகில் அமைதி மகிழ்ச்சி ஆறுதல் ஆகியன நிறைகின்றதாகக் கருதுங்கள்.

25. அன்பு என்பது ஒரு ஜீவனின் மணி முடி, இதயத்தின் ஊற்று, உலகின் ஜீவ சக்தி, அன்பிலா உடம்பு என்பு தோல் போர்த்த வெற்றுடம்பு. அன்பிலா மனம் பாலைவனம், மன வறட்சிக்கு மாற்று மருந்து அன்பு. வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடும் அன்பு உயரிய தெய்வீகப் பண்பாகும்.


Video::உறவுகளே ஏமாற்றம்தானா?


அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' 

அன்று சொன்னதும், இன்று கேட்பதும்!

எமது பண்டைய இலக்கிய, சரித்திரக் கதைகளிலே, மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் பெரும் நோக்குடன், ஏராளமான உதாரண கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் செய்கைகளும், உரைகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகள் என்று அறிவுரைகள் கூறப்பட்டு வந்துள்ளன. இவை எல்லாவற்றையும் நம் ஆசிரியர்கள் கூற, நாமும் மறுப்பேதும் இன்றிச் செவிமடுத்து, வினாத்தாளில் சரியான விடையையும் எழுதி, முழு மதிப்பெண்ணையும் வாங்கிவிட்டோம்.
 என்றாலும், தற்கால பகுத்தாய்வு செய்யும் இளம் சமூகத்தினர், இக்கதைகள் பற்றித் துருவிக் கேட்கும் வினாக்களுக்கு திருப்தியான,தகுந்த பதில் கூறமுடியாது திணற வேண்டியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.

அப்படியான ஒரு சில சம்பவங்களைப் பார்ப்போமா?

1. பாரி - கொடை வள்ளல்:

அன்று:
முல்லைக் கொடி படருவதற்காகத் தன தேரையே தானமாகக்  கொடுத்தான் பாரி!. அப்படிப்பட்ட கொடை வள்ளல் பாரி மன்னன்!
இன்று:  
 மூடனே! இந்த உக்கிப் போ மரம் எதற்கு? இங்கு, நாம் படர நின்ற 100 மரங்களை வெட்டித்தானே நீ இந்தத் தேரினைச் செய்தாய்? அவற்றை முதலில் நீ வெட்டாமலேயே  இருந்திருந்தால், உயிருள்ள மரங்கள் எல்லாம், காலம் காலமாக எத்தனை கொடிகள் படர வசதியாக இருந்திருக்கும்!

2. கர்ணன் – தர்மவான்:

அன்று:
கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அள்ளி, அள்ளிப் பணம், பொருளென்று வாரி வழங்கினான்.
இன்று:
 உனக்கென்ன, நீ உழைத்த உன் பணமா? மக்கள் வரிப்பணத்தைத் துரியோதனன் கொடுக்க, நீ வாரி வழங்கிப் பெயர் வாங்குகின்றாய். இது வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடித்தது போல!

3. ஏகலைவன் - குரு பக்தி:

அன்று:
கீழ் ஜாதி என்பதால் துரோணர் விற்பயிற்சி
சொல்லிக்கொடுக்க மறுத்ததால், ஏகலைவன் அவரை மானசீகக் குருவாக எண்ணி, பயிற்சி செய்து மகா விற்பன்னன் ஆனான். பொறாமையடைந்த துரோணர், குரு தற்சனையாக  ஏகலைவனது கைக்கட்டை விரலைக் கேட்க, அதை அவன் வெட்டிக் கொடுத்தான். இதல்லவோ குரு பக்தி!
இன்று:
சாதி வெறி பிடித்த கிழவா! உனக்கு ஏன் குருதர்ச்சனை? துரோகியே, நீ என்ன, என்னுடன் வந்து அம்பெடுத்தாயா! நாண் ஏற்றினாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எங்குலப் .......! . மானம் கெட்டவனே, பொறாமையால், சூட்சகமாக, அம்பெய்ய முக்கியமான என பெருவிரலையெ வெட்டித் தருமாறு கேட்கின்றாயே! ஓடிப்போய்விடு! இல்லையேல்....!

4. கண்ணகி - கற்பரசி:

அன்று:
கண்ணகி கற்புக்கரசி என்பதால் அவள் சொன்ன வாக்கு அப்படியே பலித்தது! மதுராபுரி பற்றி எரிந்தது.
இன்று:
உந்தக் கற்பின் சக்தியால் அப்பாவிச் சனங்களை இனப்படுகொலை செய்யாமல், உன் கற்புக்கு முதன்மையான கோவலன் உயிரைக் காப்பாற்றி இருக்கலாமே!

5. நளாயினி - பத்தினிப் பெண்:

அன்று:
தனது நோயுள்ள முடக் கணவன், ஓர் அழகிய விலை மாதுவுடன்   கூட ஆசைப்பட்டார் என்று, அவனைக் கூடை ஒன்றில் வைத்துத் தலையில்  சுமந்து சென்று அவளிடம் கொண்டு போய் சேர்த்தாள், நளாயினி என்னும் பத்தினிப் பெண்!
இன்று:
அட, சீ!  அப்படி ஒருவனை உன் வீ ட்டில் இருக்கவே இடம் அளித்திருக்கக் கூடாது. இப்படிச் செய்த உன் அடிமைப் புத்திக்கு உன்னை முதலில் சுட்டுக் கொன்று இருக்கலாம்.

6. சீதை - பேரழகி:

அன்று:
சீதையைப் பிரிந்த இராமன் அவளின் சகல(!) அங்கங்களின் அழகான எடுப்புத் தோற்றங்களை, தன் தம்பிக்கு அக்கு வேறு ஆணி வேறாக வர்ணித்துக் கூறிக் கவலை கொண்டான்.
இன்று:
அட, விவஸ்தை கெட்டவனே, அதுவும் தம்பிக்கா? அவனை, அவன் புது மனைவியிடம் இருந்து 14 வருடம் பிரித்து வைத்துக்கொண்டு! சும்மா உன்பாட்டில் இருந்து யோசிக்க வேண்டியதுதானே!

7. தசரதர் - வாக்குத் தவறாதவர்:

அன்று:
அவரது 60,000 மனைவியரில் ஒருவருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றித் தன் உயிரையே விட்டார்.
இன்று:
உனது 60,000 மனைவியர்களுக்கு எப்படியான வாக்குகளையும், நீதியையும் கணவன் என்ற ரீதியில் வழங்கி இருப்பாய்? உன் வாழ் நாளில் ஒரு மனைவியை, ஒரே ஒரு தரம் அரை மணித்தியாலம் வீதம், நாளுக்கு 6 மனைவியரிடம் போனால்தான் எல்லோரையும் பார்க்க (மட்டும்) முடிந்திருக்கும். நாங்கள் ஒன்றோடையே.....

8. திருக்குறள்  - ஒரு பொது மறை:
அன்று:
சிறியோர் முதல் பெரியோர் வரை எவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டிய ஒரு பொது மறை திருக்குறள்.
இன்று:
சிறியோருக்குமா? எல்லாமுமா? அய்யய்யோ, திருக்குறளின் 20% மான குறள்கள் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'. சின்னவங்கள், சின்னவள்களுடன் அவற்றை அப்படியே பின்பற்ற அனுமதிப்பீர்களா?

9. நந்தனார் - தெய்வ பக்தி:

அன்று:
கீழ் சாதியினராகிய நந்தனார் கோவிலின் வெளியில் நின்று இறைவனைக் கும்பிடும்போது, நந்தி மறைக்கின்றதே என்று இறைவனிடம் முறையிட, இறைவன் நந்தியை சற்றுத் தள்ளி உட்காரச் சொல்ல, அதுவும் தள்ளி அமர, நந்தனாரும் நேரே பார்த்துத் தரிசனம் செய்தார். என்னே இறை அருள்!
இன்று:
அடப் பாவமே!  இறைவனும் சாதி பிரிததுப் பார்ப்பவரா? பேசாமல் 'உள்ளே வா நந்தா' என்று தனது அருகே அழைத்திருக்கலாமே?

10. கற்பரசிகள் – சக்தியுள்ளவர்கள்:

அன்று:
கற்புடை மாந்தர் நினைத்தால் சூரியனையே உதிக்காமல் நிற்பாட்டலாம்.
நளாயினி, கண்ணகி, தமயந்தி, சீதை, போன்ற பல கற்புடை பெண்கள் வாழ்ந்தனர்.
இன்று:
அப்போ, அன்றிலிருந்து இன்று வரை எந்தவொரு கற்புடைய பெண்களும் வாழவில்லையா? நம் அம்மாக்கள், மனைவிமார், அக்காமார், தங்கைமார் எல்லோருமே கற்பில்லாதவர்களா? இல்லைத்தான் போலும்; இருந்திருந்தால் நாம் தினமும் சூரியன் இல்லாமல் இருட்டில்தான் வாழ வேண்டி வந்திருக்கும்.

11. அரிச்சந்திரன்  - சத்தியவான்:
அன்று:
தன சொல்லைக் காப்பதற்காக, தனது மனைவி, பிள்ளைகளையே அடிமையாக விற்றவன் அரிச்சந்திரன் என்னும் சத்தியவான்.
இன்று:
அட கடவுளே! மனிதரை அடிமையாக, பண்ட பாத்திரங்கள் போல  விற்றுப் பணம் பெறுவதும் ஒரு பிழைப்பா? ஓகோ, உன்னிடம் இருந்துதான் மனித அடிமை வியாபாரமே மேற்கில் தொடங்கியதோ?

12. சிபிச்சக்கரவர்த்தி - ஜீவகாருண்யன்:

அன்று:
வேடன் உணவுக்காகப் பிடித்து வைந்த்திருந்த புறாவின்  உயிரைத் தப்பவைப்பதற்காக, எடைக்கெடை தன் தொடையிலிருந்து பெரும், பெரும் துண்டங்களாக இறைச்சியை வெட்டிக் கொடுத்த ஜீவகாருண்யன்.
இன்று:
அட, மூளைகெட்ட அரசா! நான் என்ன நரமாமிசம் தின்னும் அளவுக்குக் கேவலமான பிறப்பு என்றா நினைத்துக் கொண்டாய்? நீயும், உன்ரை இறைச்சியும்! நீயே வைத்துக்கொள்!

13. கண்ணன் - லீலாவிநோதன்:

அன்று:
கண்ணனின் அழகிலும், லீலைகளிலும் மயங்கி எல்லாப் பெண்களும் அவன் பின்னே சென்றார்கள். அவன் ஒரு லீலாவிநோதன்!
இன்று:
அடடே! அதிஸ்டக்காரன்! இன்றுமட்டும் ஏன் இப்படி நாமும், எல்லாப் பெண்களுடனும் திரிந்து அனுபவிக்க இந்தச் சமுதாயம் விடுகின்றது இல்லை! சில வேளை நாம் அழகில்லையோ? லீலைகள் புரியத் தெரியாதவர்களோ? எதற்கும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்!

இப்படியாக, தற்போது பதில் கூறமுடியாத ஏராளமான சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்

"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா"

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 74.
கடந்த சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த பாலு மகேந்திரா, இன்று காலை சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.
இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றவர்.
'கேமரா கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர்'
படங்கள், விருதுகள்
1970களில் வெளியான மலையாளப் படமான " நெல்லு"வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான "கோகிலா"வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் " அழியாத கோலங்கள்" படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' ' நீங்கள் கேட்டவை', 'ரெட்டைவால் குருவி', 'வீடு' ' மறுபடியும்' , 'சதி லீலாவதி' போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான 'மூன்றாம் பிறை' சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் 'சத்மா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கலைப்படங்களை நோக்கிய நேர்த்தியான படங்களை உருவாக்குபவர் என்று பெயர் பெற்றிருந்த பாலு மகேந்திராவின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியிலான முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவரது திரைப்படமான 'வீடு', அவருக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.
கடைசிப் படம்
'தலைமுறைகள்' என்ற சமீபத்தில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் ஆகும்.
இவரது மறைவிற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது திரைப்பட பள்ளிக்கூடமானசினிமா பட்டறைக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகின்றது.