குத்த வைத்து அமர்வது (Deep Squat):{உடல்நலம்}

 நவீன வாழ்வில் நாம் தொலைத்த ஆரோக்கிய ரகசியம்!



அமர்வது என்பது மனித உடலின் மிக அடிப்படையான அசைவுகளில் ஒன்றாகும். ஆனால், இன்று நாம் அமரும் முறை முற்றிலும் மாறிவிட்டது. உடற்பயிற்சி உலகிலும் ஆரோக்கிய விவாதங்களிலும் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் 'ஏசியன் ஸ்குவாட்' (Asian Squating) என்று அழைக்கப்படும் குத்த வைத்து அமரும் முறை ஆகும். இது சாதாரண ஸ்குவாட் பயிற்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

பாதங்களை அகலமாக விரித்து, மார்பை நேராக வைத்து, தொடையின் பின்புறத்தைக் கெண்டைக்கால் தசைகளில் சாய்த்தவாறு, முழங்கால்களை முழுமையாக வளைத்து அமரும் இந்த முறை நம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

குழந்தைகள் எளிதாகச் செய்யும் 'டீப் ஸ்குவாட்'... பெரியவர்களால் ஏன் முடிவதில்லை?

குழந்தைகள் எந்தவொரு சிரமமும் இன்றி மிக இயற்கையாகக் குத்த வைத்து அமர்வதைக் நாம் பார்த்திருப்போம். அதற்கு அவர்களின் மூட்டுகளில் இருக்கும் அதிக நெகிழ்வுத்தன்மையும் (Flexibility), உடலின் மாறுபட்ட விகிதாச்சாரமும் முக்கியக் காரணங்கள் ஆகும். ஆனால், பெரியவர்கள் பலர் இந்தத் திறனை இழந்துவிடுகிறார்கள். அதற்கு உடற்கூறியல் மாற்றங்கள் மட்டும் காரணமல்ல; நம்முடைய நவீன வாழ்வியல் முறையே முக்கியக் காரணம்!

"நீங்கள் எதைப் பயன்படுத்தவில்லையோ, அதை இழந்துவிடுவீர்கள்" (Use it or lose it)

பவர்ஸ் (உடல் அசைவு மற்றும் முழங்கால் காயங்கள் குறித்த ஆய்வாளர்)

நாம் நாற்காலிகள் மற்றும் உயரமான மேற்கத்திய கழிவறைகளைப் (Western Toilets) பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து, அன்றாட வாழ்வில் குத்த வைத்து அமர வேண்டிய அவசியம் அரிதாகிவிட்டது. இந்த அமர்ந்தே இருக்கும் வாழ்வியல் முறை (Sedentary Lifestyle), காலப்போக்கில் நமது உடலின் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது.

ஆசிய கலாச்சாரமும் ஆரோக்கியமும்

ஜப்பான் போன்ற ஆசியாவின் சில பகுதிகளில் இந்த வாழ்வியல் மாற்றங்கள் இன்னும் உடலை முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை. அங்கு உணவகங்களுக்குச் சென்றால் கூட, காலணிகளைக் கழற்றிவிட்டு, 'டடாமி' (பாரம்பரிய ஜப்பானிய பாய்) மீது தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது.

ஆசியாவின் பல பகுதிகளில் குத்த வைத்து அமரும் பாரம்பரிய கழிவறைகளே (Indian/Asian Toilets) பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறை மலம் கழிக்கும்போதும் இந்த முறையில் அமர்வதால், அந்த உடற்திறன் அவர்களுக்கு இயல்பாகவே நீடிக்கிறது. இத்தகைய வாழ்வியல் முறைகள் இடுப்பு மற்றும் கால்களை வலுப்படுத்த உதவுகின்றன.

ஆய்வுகள் கூறும் நன்மைகள்:

🌰உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

🌰முதுகுவலி குறையும்.

🌰வயதான காலத்திலும் மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக வாழ வழிவகுக்கும்.

குத்த வைத்து அமர்வது எப்படி? (ஆரம்பக் காலப் பயிற்சிகள்)

"ஆரோக்கியத்திற்கு நல்லது" என்பதற்காகத் தயாரிப்பு ஏதுமின்றி உடனே தீவிரமாக முயல வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவசரப்பட்டு அடிமட்டம் வரை முழுமையாக அமர முயன்றால் காயங்கள் ஏற்படலாம்.

படிப்படியாகப் பழகும் முறை:

நாற்காலி அல்லது சமையலறை மேடை போன்ற உறுதியான ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஆதரவோடு செய்யத் தொடங்குங்கள்.

எவ்வளவு தூரம் உங்களால் வசதியாகக் கீழ்நோக்கிச் செல்ல முடிகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் செல்லுங்கள்.

இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில வாரங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நெகிழ்வுத்தன்மை கூடி, உங்களால் இன்னும் கொஞ்சம் ஆழமாக அமர முடிவதை நீங்களே உணரலாம்.

வயதானவர்களுக்கான சவால்களும் எச்சரிக்கைகளும்

வயது கூடும்போது மூட்டுகள், முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முக்கியமாகக் கணுக்கால்களில் உள்ள நெகிழ்வுத்தன்மை இயல்பாகவே குறைகிறது. இதனால் வயதானவர்களுக்கு இந்த 'டீப் ஸ்குவாட்' சவாலாக மாறலாம்.

வலி உள்ளவர்கள் தவிர்க்கவும்: ஏற்கனவே முழங்கால், இடுப்பு அல்லது முதுகு வலி உள்ளவர்கள் இதை ஒரு இலக்காக வைத்துக் கொண்டு கட்டாயம் செய்ய முயலக் கூடாது.

உடல்வாகு மாறுபாடு: ஒவ்வொரு நபரின் உடல் வடிவமும் வித்தியாசமானது. நீளமான தொடை எலும்புகள், குறைவான கணுக்கால் நெகிழ்வுத்தன்மை அல்லது மாறுபட்ட இடுப்பு அமைப்பைக் கொண்டவர்கள் தங்களது உடற்தகுதி நன்றாக இருந்தாலும், இதில் சமநிலையை இழக்க நேரிடலாம்.

 👉

நீண்ட காலத்திற்குத் தினமும் டீப் ஸ்குவாட் பயிற்சி செய்பவர்களின் உடலில் ஏற்படும் நீண்டகால நன்மைகளை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தற்போது இல்லை என்றாலும், இது உடலின் இயல்பான இயக்க மீட்டெடுப்பிற்குப் பெரிதும் உதவுகிறது.

ஒரு நபர் தரையிலிருந்து சில அங்குல தூரம் வரை முழுமையாக அமர முடிகிறதா என்பது முக்கியமல்ல; மாறாக, நவீன வாழ்க்கை முறை காரணமாக மக்களிடம் படிப்படியாகக் குறைந்து போன உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருவதும், வயதாகும்போது மற்றவர்களைச் சாராமல் தன்னிச்சையாக இயங்க முடிவதுமே மிக முக்கியமானது!

தீபம் உடல்நலம்

0 comments:

Post a Comment