''மீண்டும் நான் குழந்தையாக வேண்டும்!'' & 'அக்கினியானவளே'


''மீண்டும் நான் குழந்தையாக வேண்டும்!''



மீண்டும் நான் குழந்தையாக வேண்டும் – 

மிரட்டும் இவ்வுலகை அறியாது

நான் மகிழ்ந்து வாழ வேண்டும்!

 

சுமக்கத் தெரியா என் தோள்களிலே

சுமத்தப்பட்ட பொறுப்புகள் அறியாது,

விடியும் பொழுதுகளின் வினாக்கள் அறியாது,

விளையாடித் திரியும் பிள்ளையாக

நான் வாழ வேண்டும்!

 

பணத்தின் பின்னே ஓடும் உலகமிதுஅதன்

பசித் துயரத்தின் கோரம் அறியாது,

வரவு செலவுகளின் கணக்குகள் அறியாது,

வண்ணத்துப் பூச்சியின் பின்னே ஓடி

நான் வாழ வேண்டும்!

 

வட்டி மேல் வட்டியாய்

கழுத்தை நெரிக்கும்இந்தவாழ்க்கைக்

கடனின் பாரங்கள் அறியாது,

நெஞ்சை அழுத்தும்

நிம்மதியற்ற இரவுகள் அறியாது,

அம்மாவின் மடியில்

தலைசாய்த்துஉறங்கும் மழலையாய்

நான் வாழ வேண்டும்!

 

உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் சுயநலமும்

நெஞ்சில் உறுத்தும் வஞ்சகத்தின்

வேடங்களும் அறியாது,

புன்னகையின் பின்னே உள்ள

பொய்கள் அறியாது,

புதிதாய் மலர்ந்த பூவின் புன்னகையோடு

நான் வாழ வேண்டும்!

 

மனிதனை மனிதன் பிரித்து வைக்கும்

கொடியசாதி வேறுபாட்டின்

நச்சுக் கிருமிகள் அறியாது,

உயர்வு தாழ்வு கற்பிக்கும்

வக்கிரங்கள் அறியாது,

சாதி மதம் கடந்து

சக பிள்ளையோடுகை கோர்த்து

நான் வாழ வேண்டும்!

 

மரியாதை, அந்தஸ்து எனும் மாயைகளும்

என்னை

முடக்கிப் போடும் சமூக விதிகளும் அறியாது,

ஏற்றத்தாழ்வுகள் கற்பித்த பிரிவுகள் அறியாது,

எல்லோரையும் அள்ளி அணைக்கும் அன்போடு

நான் வாழ வேண்டும்!

 

நாளை என்றொரு நாள் தருமே கவலைஅதை

நாடித் துடிக்கும் மனித மனங்கள் அறியாது,

கடந்துபோன காலத்தின் காயங்கள் அறியாது,

இந்த நொடியின் சுகத்தில் திளைத்து

நான் வாழ வேண்டும்!

 

தோல்வியின் பயமும், ஏமாற்றத்தின் வலியும்

தினம்

துரத்திப் பிடிக்கும் துயரங்கள் அறியாது,

கண்ணீரின் பின்னுள்ள காரணங்கள் அறியாது,

அழுகையும்

அடுத்த நிமிடம் மறக்கும் மழலையாக

நான் வாழ வேண்டும்!

 

மீண்டும் நான் குழந்தையாக வேண்டும் – 

மிரட்டும் இவ்வுலகை அறியாது

நான் மகிழ்ந்து வாழ வேண்டும்!

-மனுவேந்தன்-செ



 

'அக்கினியானவளே'

 

செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ

செல்லம் கொட்டிய என் தங்கையே!

செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ

செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ

செங்கோல் மடிந்த நாள் இதுவோ?

 

அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள்

அண்ணன் அங்கே காத்துக்  கிடக்கிறானே!

அன்பு போதித்த புத்தரும் மௌனம்

அறிவு தொலைத்த படையினர் பிடியில்

அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே?


கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம் 


0 comments:

Post a Comment