தூக்கத்தில் மாரடைப்பு- 'சைலன்ட் அட்டாக்' எப்படி ஏற்படும்?


தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுமா, அதனை தடுப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் மூத்த இதயநல மருத்துவர் சொக்கலிங்கம்.

 

தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? இது திடீரென நிகழுமா அல்லது படிநிலைகள் உள்ளதா?

 

மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம் எல்லாவற்றிலும் இந்தியா தலைநகரமாக மாறிவிட்டது. இந்தியாவில் 20-30 சதவீதத்தினர் மாரடைப்பால் 30 வயதுக்குள்ளாக இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 90 பேர் ஒவ்வொரு மணிநேரமும் மாரடைப்பால் இறக்கின்றனர்.

 

இந்த உயிர்க்கொல்லி நோய் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை வாழ்க்கை முறைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக உள்ளது.

 

உறக்கத்தில் ஏற்படும் இந்த மாரடைப்பை 'சைலண்ட் அட்டாக்' (Silent Attack) என்கிறோம். இவர்கள் பெரும்பாலும் மன உளைச்சல், கவலை, ஏமாற்றம், கோபம், பதற்றம், அனைத்திலும் அவசரம் உள்ளிட்ட உணர்வுகளுடனேயே இருப்பார்கள். இந்த உணர்வுகளால், அட்ரினலின், கார்ட்டிசால் உள்ளிட்ட இரு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்போது உணர் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு இந்த இரு ஹார்மோன்களின் சுரப்பும் அதிகமாகி ரத்தத்தில் கலந்துவிடும். இதனால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் உள்ளிட்டவை அதிகமாகும். 2-3 விட்டம் கொண்டது இதய ரத்தக் குழாய். இந்த ரத்தக்குழாய்தான் இதயத்திற்கு தேவையான ரத்தத்தைக் கொடுக்கும். தேவையான ரத்தத்தை இது இதயதசைகளுக்குக் கொடுக்கவில்லை என்றால், ரத்த ஓட்டம் குறைவதன் ஆரம்பகட்டத்தை அஞ்ஜைனா Angina) என்கிறோம். அதன் முதிர்வான நிலைதான் மாரடைப்பு.

 

ரத்தத்தில் கொலஸ்டிரால் இருப்பதால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை எடுத்துவிட்டால் அடுத்த நொடியே நம் உயிர் பிரிந்துவிடும். ஆனால், இந்த இரு ஹார்மோன்களும் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பிரித்து ரத்தக் குழாயில் சென்று படிகிறது. இந்த நிலைதான் அத்ரோ ஸ்கிளிரோசிஸ். ரத்தக்குழாயில் கொலஸ்டிரால் படிவதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு கொலஸ்டிரால் 70 சதவீதம் படிய வேண்டும். அந்த நிலையில்தான் நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும்.

 

ஆனால், அந்த அடைப்பில் உள்ள எண்டோதீலியத்தில் அரிப்பு மாதிரி உண்டாகி அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதனால், அடைப்பு சிறிதளவில் இருந்தாலும், ரத்தம் உறைவதால், ரத்தக் குழாய் சுருங்குவது என மூன்றும் நிகழ்வது, உடனடியாக உயிரிழப்பு ஏற்படும் வகையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

 

இந்த உடனடியாக நிகழக்கூடிய 'சைலண்ட் அட்டாக்' ஏன் உறக்கத்திலேயே வருகிறது?

 

'சைலண்ட் அட்டாக்' பெரும்பாலும் நாம் உணர்வில் இருக்கும்போதுதான் வரும். சிலருக்கு ஏன் தூக்கத்தில் வருகிறதென்றால், அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு உடனே உறங்குவது, பதட்டத்துடன் உறங்குவது, நிம்மதியற்ற தூக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனாலும் அட்ரினலின் அதிகமாகி இறப்பு நிகழ்கிறது. இதனால்தான் சைலண்ட் அட்டாக் வருகிறது.

 

'சைலண்ட் அட்டாக்' யாருக்கெல்லாம் வரும்?

 

இது 70-80 வயதை தாண்டியவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும். ஆனால், இப்போது 30-35 வயதுடையவர்களுக்கும் வருகிறது. மனநலனை காப்பதே இதற்கு சிறந்த வழி.

 

நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 20 வயதைக் கடந்தவர்கள் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம், நீரிழிவு, ஈசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். பரிசோதனைகள் முடிவின்படி உடல்நிலையை சரிசெய்துகொள்ள வேண்டும்.

 

உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம் கொண்டவர்களுக்கும் இது ஏற்படுவது ஏன்?

 

உடல் எடையை குறைக்க வேண்டும், ஜிம்முக்கு சென்று உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இளைஞர்கள் பதட்டத்துடன் தான் செய்கின்றனர். சீரான உணவுப்பழக்கம், சீரான உடற்பயிற்ச்சி, நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மூன்றையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடும்போது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். உறங்குவதற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். பரம்பரையாக வருவது குறைந்த சதவீதமே, தடுப்பு வழிமுறைகளை எடுத்துக்கொண்டாலே இவற்றை தடுக்கலாம்.

 

மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?

 

என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கணேசன்.

 

நான் 160 பேருக்கு ரேண்டமாக Lipid Profile பரிசோதனைகளை செய்தேன். அவர்களுள் 152 பேருக்கு Lipid Profile அசாதாரணமாக இருந்தது. அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் கிடையாது. இவர்களுக்கு கொலஸ்டிராலை குறைக்கும் மாத்திரைகளை 30 நாட்களுக்கு நான் பரிந்துரைத்தேன். அதன் பிறகு மீண்டும் பரிசோதித்ததில், அந்த அளவுகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. coagulation Profile, Lipid profile, electrolyte profile உள்ளிட்ட பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் உள்ளிட்டவை ரத்தத்தில் ஒரு அளவுகோலில் இருக்கும். இவற்றில் மாற்றங்கள் ஏற்படும்போதும் மாரடைப்பு ஏற்படுகிறது. 30 வயதைத் தாண்டினால் எகோஸ்பிரின் மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

நந்தினி வெள்ளைச்சாமி-/-பிபிசி தமிழ்

திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../13/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....


பாடல் - 60

பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்

விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா

மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்

துக்கப் பிறப்பாய்விடும்.

 

விளக்கம்:

பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.

 

பாடல் - 61

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,

எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்

மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்

வீறு சால் பேர் அமைச்சர் கோள்.

 

விளக்கம்:

ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.

 

பாடல் - 62

நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்

மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி

வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்

எச்சம் இழந்து வாழ்வார்.

 

விளக்கம்:

நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

 

பாடல் - 63

நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும்

ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்

நன்மை பயத்தல் இல.

 

விளக்கம்:

துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும்.

 

பாடல் - 64

நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்

இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்

மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்

கற்புடையாள் பூண்ட கடன்.

 

விளக்கம்:

விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

 

பாடல் - 65

அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற

விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய

மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்

தம் நெய்யில் தாம் பொரியுமாறு.

 

விளக்கம்:

ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

"சத்தம் போடாதே"-சிறு கதை -


அன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer]  எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம்

 

என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்க்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன்,  ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது!

 

ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை!

 

1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து  பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும்  பின்பு தான் தெரிந்தது

 

ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும் 

 

மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம் . எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக  அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம்  வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்!

 

கேக் வடிவமைத்த என் மனைவி  உடலில் மட்டும்  அல்ல அறிவிலும் அழகானவள். அவள் ஒருவாறு காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு மெதுவாக கதைகள் சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்!

 

அவர்கள் தூங்கிய கையோடு, தான்  முன்பு  வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக  மாற்றி அமைத்து, ஓ!  அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! , நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக , கொண்டாட்டம் முடியும் வரை 'சத்தம் போடாதே' தான்!

 

1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. இவை 'சத்தம் போடாதே. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே '  நிறைவேறிக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.!

 

என் கதை வாசிப்பவர்களுக்கு என் ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த கதை பற்றி 'சத்தம் போடாதே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]