பொங்கல் தந்த விடியல் [சிறு கதை]

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறைய தொடங்குகிறது. ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை.

 

இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில் சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தது. அப்படித்தான் ஒவ்வொரு ஆண்டாக விடியல் [வெற்றி] என்னை விட்டு விலகிக்கொண்டே இருந்தது. கொஞ்சம் வித்தியாசம். நான் திறமையாகத்தான் தொடர்ந்து செயற்படுகிறேன், அதில் எந்த ஐயப்பாடும் இல்லை, ஆனால் முற்றும் நேர்மையாக. அது தான் என்னைத் தடுத்துக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொய்யும் புரட்டும் கலந்து இருந்தால், எப்பவோ எனக்கு விடியல் வந்திருக்கும்!

 

நான், தொடர்மாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ள என் அறையின் ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப் பார்க்கிறேன். தொங்கிய தோள்களுடனும் வாடிய முகங்களுடனும் அசையும் மக்களை காண்கிறேன். அவர்களின் நம்பிக்கை இழப்பையும் பரிதாபகரமான விதியையும் நினைக்கிறன். நான் மட்டும் அல்ல, என்னுடன் ஒரு கூட்டமே விடியலுக்காக அலைவதைக் காண்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல். இதை பார்க்க பார்க்க என் மனதில் வெறுமையும் வெறுப்பும் கூடுவது போல இருந்தது. இந்த பொங்கலில் ஆவது ஒரு விடியல் வருமா என்று என் மனம் தவித்துக்கொண்டு இருந்தது.

 

நான் என் படுக்கை அறையை பார்த்தேன். அது வெறிச்சோடி இருந்தது. நான் கல்யாணம் கட்டி ஒரு ஆண்டுமட்டும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. மிகச் சீராக மகிழ்வாக அது நகர்ந்தது. அதன் பலன் எமக்கு அழகான மகள் பிறந்தாள். இருவருக்குமே அது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. நாம் வாடகைக்கு இருந்த வீடு ஒரு அறை வீடு. தலை நகரில், வாடகை மிக மிக அதிகம் என்பதால் கல்யாணம் கட்டிய புதிசில் அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால் மகள் பிறந்தபின், அவளுக்கு என ஒரு தனி அறை தேவை பட்டது. அது மட்டும் அல்ல, வருங்காலத்தையும் எண்ணி மூன்று அறை வீடு தேவை என்று மனைவி கேட்கத் தொடங்கினார். 

 

உண்மையில் என் படிப்பு மற்றும் வேலை திறமை அடிப்படையில் நோக்கின் எனக்கு எப்பவோ பதவி, சம்பள உயர்வு வந்திருக்கவேண்டும். இப்ப நான் எடுக்கும் சம்பளத்தை விட குறைந்தது மூன்று மடங்காவது இன்று நான் எடுத்திருப்பேன். ஆனால் என் படிப்பு தந்த திமிர், என் உயர் அதிகாரிகளுக்கு சலாம் போட மறுத்துவிட்டது. என் எல்லா உயர் அதிகாரிகளும் என்னை விட படிப்பில் குறைந்தவர்கள், ஆனால் நிறைய சுற்றுமாற்றாக, நேரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும்  தகுந்தவாறு அமைச்சருடன் அல்லது அவரின் அதிகாரியுடன் கதைப்பதுடன், அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய, வேலைக்கு புறம்பான வசதிகளை, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில் வல்லவர்கள். நான் இவைகளுக்கு எதிர்மாறு மற்றும் நேருக்கு நேராக பிழையான செயல்களை கேட்டும் விடுவேன்.

 

என் மனைவி, 'நீங்க வாழத் தெரியாதவர், நீங்கள் நேர்மையாக ஒழுங்காக வேலை செய்யுங்கள், அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களையும் கட்டுப்படுத்துக்கள். அதில் தவறு இல்லை. உங்களுக்கு மேலே உள்ளவர்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட தேவையில்லை. அது அமைச்சரின் பொறுப்பு. மற்றது நீங்கள் மதிப்பு கொடுப்பது அவர்களின் பதவிக்கு மட்டுமே, அவர்களின் உண்மையான தகுதி என்ன என்று யோசிக்காதீர்கள் , அப்ப தான் நாம், பிள்ளைகளுக்கும் ஏற்ற, தகுந்த வசதிகளுடன் வாழ முடியும்' இப்படி பலதடவை என்னிடம் கெஞ்சி, பின் வாதாடி, கடைசியாக 'குறைந்தது மூன்று அறை வீடு எடுத்தால் தான் நான் இனி உங்களுடன் இங்கு இருப்பேன்'  என்று சொல்லிவிட்டு என் மகளுடன் தன் தாய் வீட்டுக்கு, தன் கிராமத்துக்கு போய்விட்டார். 

 

நான் என் நம்பிக்கையை என்றும் இழக்கவில்லை, உண்மை , நேர்மை ஒருநாள் வெல்லும், அவர்களின் பொய் புரட்டுகள் அம்பலத்துக்கு வரும் அல்லது வரவைப்பேன் என்ற துணிவு மட்டும் மாறவில்லை. நாளை, ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும்,  அமைச்சர் மற்றும் அவரின் அதிகாரிகள் எம் பணிமனைக்கு தைப்பொங்கல் தினத்தை ஒட்டி வருகிறார்கள்.  ஒக்டோபர் 6, 2022 இல் உலக வங்கியின் அறிக்கையின் படி, மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதமாகவும், 2023ல் மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. அது தான் எனக்கு இவர்களின் பித்தலாட்டத்தை,  ஏமாற்று வேலையை வெளிக்கொணரவும். இம்முறை கட்டாயம் அமைச்சர் அதை ஏற்று விசாரணை நடத்துவார் என்ற துணிவையும் தந்தது. அதன் படி பல அத்தாட்சிகளுடன்  நவம்பர் முதலாம் திகதி, என் பிறந்த நாளில், அமைச்சரிடம் ஒரு நீண்ட அறிக்கை சமர்பித்தேன், அது என் உயர் அதிகாரிகளுக்கு தெரியா. அமைச்சர் தை முதலாம் திகதி, புத்தாண்டு வாழ்த்துடன், தான் தைப்பொங்கலுக்கு பணிமனை வருவதாகவும், அதில் தன் முடிவு பகிரங்கமாக அறிவிக்கப் படும் என்றும், தான் தன் தேவையான அனைத்து விசாரணையையும் முடித்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

 

நான் முன்பும் இரு தடவை அவ்வற்றை சுட்டிக்காட்டினாலும், அந்த கோப்புகள் எல்லாம், தேடுவார் அற்று போனது தான் மிச்சம். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. 'ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்க ஆழமான சீர்திருத்தங்களை இலங்கை விரைவாகக் கடைப்பிடிக்கவேண்டும்' என்ற உலகவங்கியின் கோரிக்கை அரசை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது.  இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில் 10 லட்சம் பேர் திறனுடன் செயற்படுவதில்லை என, அண்மையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியதும் மற்றும் இன்று இலங்கையில் இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் இந்த தைப்பொங்கல் ஒரு விடிவை தரலாம் என்று எனக்கு சொல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தன.  

 

இந்த விடயங்கள் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊபிடம் பிபிசி தமிழ் அண்மையில் [18 செப்டெம்பர் 2022] பேசிய போது "இலங்கையில் பொருத்தமான வேலைக்கு பொருத்தமான நபர்கள் அநேகமாக உள்வாங்கப்படுவதில்லை" என்றும், "அரசியல் நோக்கங்களுக்காகவே அதிகமானவர்ளுக்கு அரச தொழில்கள் வழங்கப்பட்டன" எனவும் குறிப்பிட்டார். அது தான் எம் பணிமனையிலும் பிரச்சனை. அந்த பொருத்தமற்ற உயர் அதிகாரிகளுக்கு, பொருத்தமான, உண்மையாக வேலை செய்பவர்களை கண்டால் உள்ளுக்குள் ஒரு பயம், அதனால் தான் அவர்களை மேலே வரவிடாமல் ஏதேதோ காரணங்கள் கூறி தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வால் பிடிப்பவர்கள், கட்டாயம் மேல் பதவிக்கு போவார்கள், ஆனால் நாட்டுக்கு, மக்களுக்கு உண்மையான சேவை அங்கு இருக்காது, அது தான் நான் அதை, அந்த நேர்மையற்ற வழிகளை வெறுக்கிறேன். இதை மனைவி எனோ புரியவில்லை. அவரில் குறையில்லை. பிள்ளைகளில், குடும்பத்தில் உள்ள பாசம் தான்!  

 

இன்று தை 15, 2023 ஞாயிற்று கிழமை, தை பொங்கல் நாள், அமைச்சரும் அவரின் அதிகாரிகள் எல்லோரும் எம் பணிமனைக்கு வந்து, கலகலப்பாக பொங்கல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள், அதன் பின் என்னையும் என் உயர் அதிகாரிகளையும், மூடிய அறையில் சந்திக்க ஏற்பாடும் செய்தார். எனக்கு எந்த பயமும் இல்லை. தேவையான அத்தாட்சிகள் எல்லாம் வரிசை கிரமப்படி ஏற்கனவே சமர்பித்துவிட்டேன். ஆனால் என் உயர் அதிகாரிகள் கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டனர், அது ஒன்றே இம்முறை, இந்த தைப்பொங்கல் விடியலைத் தரும் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறு ஒன்று. நான் திகைத்தே விட்டேன், என்னால் இன்னும் நம்பமுடியவில்லை, ஆமாம், நான் அந்த முழு பணிமனைக்கும் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக, ஆறு மடங்கு சம்பளத்தில், உடனடியாக, பாராட்டுடன் நியமிக்கப் பட்டேன்.

 

ஆனால் நான் மிகவும் பணிவாக முதலில் என் முன்னைய உயர் அதிகாரிகளிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் கேட்டதுடன், அதன் பின்புதான் அமைச்சரின் ஆசீர்வாதத்தை கேட்டேன். அது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், என் அந்த நடைமுறையை அமைச்சர் மிகவும் போற்றினார். அவர்கள் எல்லோரும் போன கையுடன் நான் என் மனைவிக்கும், மகளுக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன். என் மனைவி மிக கோபமாக இருந்தார். 'இன்று தமிழர் பொங்கல் விழா, எங்கே போனீர்கள் ?, ஒரு வாழ்த்து மகளுக்கு கூட சொல்லவில்லையே?' கொஞ்சம் கோபமாக கேட்டார். நான் முதல் மகளை கூப்பிடு என்றேன். மனைவி இன்னும் கோபமாக ' இந்தா உன் அப்பா' என்று தொலைபேசியை அவளிடம் தூக்கி எறிவதை  கண்டேன். 

 

நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனக்கு என் மனைவியைப் பற்றி நன்றாகத் தெரியும். ' அப்பா, இனி வரும் பொழுது எனக்கு என்ன வாங்கி வருகிறீங்க?', மகள் நான் தை பொங்கல் வாழ்த்து கூறமுன் தானே கதைக்க தொடங்கிவிட்டார். நான் வாழ்த்து கூறிவிட்டு, அம்மாவிடம் கொடு வாழ்த்து கூற என்றேன், ஆனால் மகள் 'சொல்லுங்க அப்பா , முதலில், என்ன வாங்கி வருவீங்க' திருப்பவும் கேட்டார். நான் உடனே 'இனி ஒன்றுமே இல்லை' என்று பொய்க்கி கூறியது தான் தாமதம், மனைவி தொலை பேசியை பறித்து நிறுத்தியே விட்டார். நான் இதை எதிர் பார்க்கவில்லை. ஆகவே வேறுவழி இன்றி, மனைவியின் தங்கைக்கு உடனே எடுத்து, மகள் அல்லது மனைவியிடம் கொடுக்கும் படி கூறினேன். மனைவி வாங்க மறுத்துவிட்டார், மகள் தான் அழுதுகொண்டு எடுத்தார்.

 

'என் செல்லமே, இனி அப்பா வரத் தேவையில்லை, நீ என்னுடனேயே இருந்து படிக்கப் போறாய், அது தான்'  என்றேன். சொல்லி முடிக்க முன்பே. மனைவி, மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து 'என்ன, என்ன, எப்போ?' அவசரம் அவசரமாக கேட்டார். நான் இன்றில் இருந்து எனக்கு பதவி உயர்வு வந்துள்ளதாகவும், அதனுடன் சேர்ந்து, தனி வீடும் தந்துள்ளார்கள் என்றும் சுருக்கமாக சாதாரணமாக எடுத்து சொன்னேன். மனைவியின், மகளின் மகிழ்ச்சி என்னால் உணரக் கூடியதாக இருந்தது. என் வாழ்வும் மீண்டும் முன்போல் இந்த தைப்பொங்கலில் இருந்து மலரப்போகிறது என்று எண்ணும் பொழுது, 'விடியலைத் தந்த பொங்கல்' ஆக இந்த 2023 , என் வாழ்க்கை வரலாற்றில் அமைய போவது உண்மையே!

இன்னும் ஒரு கிழமையில் என் மனைவியும் மகளும் வந்துவிடுவார்கள். என்னதான் வசதி வந்தாலும் நான் கட்டாயம் உண்மை நேர்மையில் இருந்து என்றுமே விலகமாட்டேன். இது  சத்தியம்!

-நன்றி-

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

மனிதி-குறும்படம் /14 minutes

 

அழுகை நீ அதைத் துடைத்தெறிந்தால் ஆடவர் திமிரும் அடங்கிவிடும்.வழியது மட்டுமே பிழைத்திருக்கும்.விதியென்று தேங்கிவிடாமல், வீரம் கொண்டு வெளி வா பெண்ணே! மாற்றம் காண்போம்!

பதிவு:செ.மனுவேந்தன் 

பெண்கள் எப்படி சிந்திப்பார்கள்? மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?

மாதவிடாய், கர்ப்பம், மெனோபாஸ் காலங்களில் பெண்கள் எப்படி சிந்திப்பார்கள்? மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?

'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்றால், பெண்களின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தவர் நியூயார்க்கின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை இணை பேராசிரியர் லிசா மாஸ்கோனி.

 

வெய்ல் கார்னெல் மருத்துவ மையத்தின் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் தடுப்பு திட்டத்தின் இயக்குநருமான இவர், மனித மூளை குறித்த தமது 20 ஆண்டுகால நீண்ட ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளவை குறித்தும், 'The XX Brain' என்ற தனது புத்தகம் பற்றியும் பிபிசி முண்டோ சேவைக்கு (BBC Mundo) அளித்த பேட்டி பின்வருமாறு:

 

பெண்களின் மூளை குறித்த 20 வருட ஆராய்ச்சியில் நீங்கள் கண்டறிந்தவை என்ன?

 

ஆண் பெண் என இருபாலரையும் பல்வேறு நரம்பியல் மற்றும் மனரீதியான நோய்கள் பல்வேறு விதத்தில், வெவ்வேறு விகிதாசாரங்களில் பாதித்து வருகின்றன. ஆயினும் மூளையின் அமைப்பு, வயது உள்ளிட்ட காரணிகளால் ஆண்களைவிட பெண்களுக்கு மூளையின் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுகிறது. இது ஏன், எதனால் என்பதை எனது ஆராய்ச்சிகள் முக்கியமாக சுட்டிக்காட்டுகின்றன.

 

உதாரணமாக, மனக்கவலை அல்லது மனச்சோர்வு ஆண்களைவிட பெண்களுக்கு இரண்டு மடங்கும், உடல் எதிர்ப்புசக்தி குறைபாடு ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும் வர வாய்ப்புள்ளது. இவற்றின் விளைவாக multiple sclerosis போன்ற மூளை தொடர்பான நோய்க்கு பெண்கள் ஆளாகின்றனர்.

 

உங்கள் ஆராய்ச்சியில் பெண்களின் மூளை செயல்பாடு குறித்து நீங்கள் கண்டறிந்த வியக்கத்தக்க விஷயங்கள் என்று ஏதேனும் சொல்ல முடியுமா?

 

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வரும் வாய்ப்பு பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகம். மேலும் மூளையில் meningiomas எனப்படும் கட்டியும், கடுமையான பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிகம். டிமென்ஷியா எனப்படும் மனச்சோர்வால் ஏற்படும் நோய்க்கு முக்கிய காரணமான அல்சைமர் எனும் மறதி நோயால் உலக அளவில் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்கள் என்பது மற்றுமொரு அதிர்ச்சியான தகவல். அதாவது மூன்று அல்சைமர் நோயாளிகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் இரண்டு பேர் பெண்களாக உள்ளனர். ஆனாலும், அல்சைமர் உள்ளிட்ட மூளை தொடர்பான நோய்கள் பெண்களின் உடல்நலன் சார்ந்த பிரச்னையாக இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லை. 60 வயதை நெருங்கும் ஒரு பெண்மணிக்கு பிற்காலத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைவிட அல்சைமர் எனப்படும் மறதி நோய் உண்டாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம்.

 

ஆனால், மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னையாக கருதப்படும் அளவுக்கு அல்சைமர் போன்ற நோய்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களின் மூளை பற்றியும், அதுதொடர்பான நோய்கள் குறித்துமான ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகளுக்கு மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. பெண்களின் உடல் ஆரோக்கியம் என வரும்போது அவர்களின் மூளை சார்ந்த நோய்களை களைவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

 

மனிதனுக்கு உண்டாகும் உடல்நிலை குறைபாடு, உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அவனது வயதுடன் தொடர்புப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நேரியல் தொடர்பு பெண்ணின் மூளைக்கு பொருந்தாது. பருவமடைதல், கர்ப்ப காலம் மற்றும் மெனோபாஸ் காலம் என மூன்று முக்கிய காலகட்டங்களில், பெண்ணின் மூளையானது பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதனை நான் '3 Ps' என்று குறிப்பிடுவேன் ( Puberty, Pregnancy, Perimenopause).

 

இந்த மூன்று முக்கிய நிலைகளில் பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலம் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையவை. இதன் விளைவாக, பெண்ணுக்கு உடல்ரீதியாக எந்த அளவு மாற்றம் ஏற்படுகிறதோ அதே அளவு மூளையிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பூப்பெய்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்ணின் சமூக அறிவாற்றல் சார்ந்த மூளையின் சில பகுதிகள் சுருங்கிவிடுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

பெண் பருவமடைந்ததற்கு பின் இளமைப் பருவத்தை எய்தவும், அதன் தொடர்ச்சியாக தாய்மை அடைவதற்கும் ஏதுவாக தேவையற்ற நியூரான்களை அகற்றி, புதிய இடைவெளியை ஏற்படுத்தும் மூளையின் வழிமுறையாக விஞ்ஞானிகள் இதனை பார்க்கின்றனர். இதன் விளைவாக, பூப்பெய்தல், பேறுகாலம் போன்ற முக்கிய தருணங்களில் பெண்ணின் மூளை சிறியதாகிறது. ஆனால் அதேசமயம் அது அதிக செயல்திறன் மிக்கதாகவும் உள்ளது. மூளையின் இதேபோன்ற செயல்திறன், மெனோபாஸ் காலத்திலும் ஏற்படும் என்று நாம் நம்பலாம்.

 

பெரிய உடலமைப்பு கொண்டுள்ளதால் ஆண்களுக்கு மூளையின் அளவு பெரிதாக இருப்பதாகவும், அதேசமயம் பெண்களின் பெருமூளை பகுதியில் கனமான செரிபிரல் கார்டெக்ஸ் (thicker cerebral cortex) உள்ளதாகவும் 'The XX Brain' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் பொருள் என்ன?

 

நோய், செல்களின் சேதம் மற்றும் வயோதிக்கத்தை தடுப்பதற்கான மூளையின் செயல்திறனே அதன் இருப்பு (Brain Reserve) எனப்படுகிறது. இந்த காரணியும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதன் பயனாக, வயோதிகம் அல்லது நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் செய்கை மாறுபாடுகள் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

 

உதாரணமாக ஒத்த வயதுடைய ஆண், பெண் இருவருக்கும் நினைவாற்றல் சோதனை மேற்கொண்டால், அதில் பெண்களே அதிகம் வெற்றிப் பெறுகின்றனர். டிமென்ஷியாவுக்கு பெண்கள் ஆளான பின்பும் அவர்களின் நினைவாற்றல் ஆண்களைவிட நன்றாகவே உள்ளது. ஆனால் இதன் எதிர்விளைவாக, பெண்களது மூளையின் அதிக செயல்திறன், டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.

 

இதனால் சில பெண்களுக்கு டிமென்ஷியா இருப்பது தாமதமாகவே தெரியவந்து, அவர்களுக்கு அதன்பின்பே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. டிமென்ஷியா போன்ற மனநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

மூளை ஆரோக்கியத்தில் பெண்களுக்கான ஹார்மோன்களின் பங்கு மற்றும் பெண்களை ஆண்களிடமிருந்து வேறுபடுத்தும் X குரோமோசோம்களால் மூளையில் ஏற்படும் பாதிப்பு என்ன?

 

பெண்களின் மூளையானது முழுக்க முழுக்க ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனை கொண்டு இயங்குகிறது. மூளைக்குள் இயற்கையாக செலுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன், தங்களுக்கான ஏற்பிகளை (Receptors) தேடி அடைகின்றன.

 

ஈஸ்ட்ரோஜனும், அதற்கு சரியான வடிவம் தரும் ரெசிப்டார்களும் இணைந்து செல்களை தூண்டி மூளையை செயல்பட வைக்கின்றன. இதனை நாம் புரிந்து கொள்வதன் மூலம், மெனோபாஸ் எப்படி பெண்ணின் மூளையை பாதிக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

 

மெனோபாஸ் காலத்தில் பெண்ணின் இனப்பெருக்க திறன் முடிவுக்கு வருவதுடன், மூளையின் செயல்பாட்டிலும் பெருமளவில் தாக்கம் ஏற்படுகிறது என்கிறீர்கள், இது ஏன்? அத்துடன் மெனோபாஸ் அறிகுறிகள் மூளையில் இருந்துதான் தொடங்குகிறது எனவும், கருப்பையில் அல்ல என்றும் நீங்கள் கூறுவது எப்படி?

 

மெனோபாஸ் நேரத்தில் கருப்பையானது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால் பெண்ணின் இனப்பெருக்க திறன் அனேகமாக முடிவுக்கு வருகிறது. இருப்பினும், மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதிலும் இந்த ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மெனோபாஸ் என்பது இனப்பெருக்கச் செயல்முறை மட்டுமல்ல; நரம்பியல் நடைமுறையுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

மனக்கவலை, சோர்வு, பதற்றம், நினைவாற்றல் குறைதல் போன்ற மெனோபாஸ் அறிகுறிகள் கருப்பையில் அல்லாமல், மூளையில் இருந்தே உருவாகின்றன. இதனால் இவற்றை நரம்பியல் சார்ந்த அறிகுறிகளாகவே கருத இயலும். பெண்ணின் மூளையில் மெனோபாஸ் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, அதுதொடர்பாக யாரும் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே மெனோபாஸுக்கும், மூளைக்கும் இடையேயான தொடர்பு குறித்து அறிந்திருந்தனர். தற்போது இதுதொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருவதை கண்டு நான் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

 

மெனோபாஸ் நேரத்தில் சிரமங்களை சந்திக்கும் பெண்களுக்கு உங்களின் அறிவுரை என்னவாக இருக்கும்?

 

நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் இப்போதும் சரியாகதான் இருக்கிறீர்கள் என்றும், மெனோபாஸ் காரணமாக உங்கள் மனநிலையில் எதுவும் பாதிப்பு வராது எனவும் அவர்களுக்கு கூறுவேன். மெனோபாஸ் காலத்தில் யாரும் கஷ்டப்பட தேவையில்லை என்பதையும் அவர்களுக்கு சொல்வேன். மெனோபாஸ் அறிகுறிகள் சற்று குழப்பமாகவும், கவலை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், இவை எல்லாவற்றுக்கும் நம்மிடம் மருத்துவரீதியான தீர்வுகள் உள்ளன என்பதை பெண்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்.

 

மெனோபாஸுக்கு பிந்தைய ஹார்மோன் மாற்று சிகிச்சையில் (HRT) தற்போது பலர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த சிகிச்சை முறை அல்லாத மருத்துவத்திலும், இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

நன்றி- பி.பி.சி தமிழ்