இவ்வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

 சுருக்கமான பார்வை 



படம்:''டி எஸ் பி'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'D.S.P ' Review)

-பொன்ராம் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், புகழ், பிரபாகர் எனப்பலர் நடித்த நகைச்சுவை & அதிரடி திரைப்படம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க,  டி இமான் இசையமைத்துள்ளார்.

 

கதை:வெட்டியாக திரியும்  விஜய்சேதுபதிக்கும் ,கல்லூரி மாணவி அனுகீர்த்திக்கும் காதல்  மலர்கிறது. இந்த நிலையில்  தாதா பிரபாகருக்கும் விஜய்சேதுபதிக்கும் மோதல் வருகிறது. . இதனால் தலைமறைவாக இருக்கும் விஜய்சேதுபதியும் வில்லனை பழிதீர்க்க துடிக்கிறார்.   போலீஸ் அதிகாரியாகிவரும் விஜய்சேதுபதிக்கும்  எம்.எல்.ஏ.வாகி உயர்ந்து நிற்கும்  வில்லனை பழிவாங்க முடிந்ததா, இல்லையா என்பது மீதிக் கதை.

முடிவு: வழக்கமான சீண்டல்[2.25/5]

 

படம்:''கோல்டு'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'Gold ' Review) –

 அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், நயன்தாரா, அஜ்மல் அமிர் எனப்  பலர் நடித்திருக்கும் திரைப்படம். சுப்ரியா மேனன் தயாரிக்க,  ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

 

கதை:பிருத்விராஜ் புதிய கார் ஒன்றை ஆர்டர் செய்கிறார். அந்த கார் டெலிவரிக்கு வருவதற்கு முன்பே  அவர் வீட்டு வாசலில் பொலேரோ வாகனம் வந்து நின்றதால்  காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்கிறார்.இதனிடையே அந்த காரில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை எடுத்து பயன்படுத்துகிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதை பிருத்விராஜ் எப்படி கையாள்கிறார்? அந்த வண்டியை அங்கே நிறுத்தியது யார்? என்பதுதான் படத்தின் கதை.

முடிவு:  ஈர்க்கவில்லை.[2.5/5]

 

படம்: ''கட்டா குஸ்தி''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Gatta Kusthi ' Review) –

 செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் எனப்பலர்  நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளரும், இப்படத்தின் நாயகனுமான விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

 

கதை: வீரா (விஷ்ணு விஷால்), நீளமான கூந்தலுடன் இருக்கும் படிக்காத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். பட்டதாரியான கீர்த்திக்கு சவுரி முடி வைத்து, படிக்காதவர் என பொய் சொல்லி வீராவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்க, வீராவைக் கொல்ல வரும் எதிரிகளை, குஸ்தியால் வீழ்த்தி கீர்த்தி காப்பாற்ற, அவர் குறித்த உண்மைகள் தெரியவருகிறது. இதனால், அவரை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விடுகிறார் வீரா. அதோடு, குஸ்தி போட்டியில் கீர்த்தியை வெல்லவும் ஆயத்தமாகிறார். இறுதியில் வெல்வது யார்? வீராவும், கீர்த்தியும் இணைந்தார்களா? கட்டா குஸ்தியில் சாதிக்கும் கீர்த்தியின் கனவு என்ன ஆனது என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக் கதை.

 

முடிவு: ஆண் - பெண் சமத்துவத்தை அழகாகவும், அழுத்தமாகவும் பேசியிருக்கும் ‘கட்டா குஸ்தி’யை குறைகள் மறந்து வரவேற்கலாம் [3.5/5]

 

படம்: ''நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Naai Sekar Returns' Review)

-சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். சுபாஸ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

கதை:நாய்களைக் கடத்தி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் நாய் கடத்தல் காரனாக இருக்கிறார் நாய் சேகரான வடிவேலு. ஒரு நாள் 'நாய் மாற்றி', தாதாவான ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்துகிறார். வடிவேலுவைக் கொலை செய்யக் கிளம்புகிறார் ஆனந்த்ராஜ். ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா, திருடப்பட்ட தெய்வ நாய் என்ன ஆனது, அந்த நாயை வடிவேலு மீட்டாரா என்ற கதையைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது வடிவேலு - சுராஜ் கூட்டணி.

 

முடிவு: பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே!![2.5/5]

 

தொகுப்பு:செமனுவேந்தன்

சிரிக்க சில நிமிடம்

siri, kadi jokes, comedy, nakaichuvai 

நகைச்சுவை 


01.

ஒருவர் : கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?

மற்றவர் : பிளேடு கம்பெனியிலேங்க.....

 

02.

போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

 

03.

தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

 

04.

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?

டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

 

05.

வந்தவர் : என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்

டாக்டர் : அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க

வந்தவர் : பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல

டாக்டர் : ???

 

06.

ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம் புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!

மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?

ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!

 

07.

ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.

பாபு : சொத்தையோட போகணும்

 

08.

ஒருவர் : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?

மற்றவர் : நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

 

09.

இராமு : கோபம் வந்துட்டாஎன் மனைவி காளியாயிருவா….

நண்பன் : நீ என்னாவாய்???

இராமு : நான் காலியாயிடுவன்.

 

10.

காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!

 

11.

இராமு : அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?

நண்பன் : தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு!

 

12.

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!

 

13.

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.

 

14.

நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...

டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....

 

15.

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

 

16.

சர்தார் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன் : பி.எ.

சர்தார் : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

 

17.

நபர் 1 : ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...

நபர் 2 : ஏன் என்ன ஆச்சு?

நபர் 1 : காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார்ந்க. நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...

நபர் 2 : !!!!?????!!!!

 

18.

டாக்டர் : இனிமே....நீங்க குடியை ..சுத்தமா...நிறுத்தனும்....

நோயாளி : ஏன் ...டாக்டர், ரொம்பக்குடிச்சா, கிட்னி கெட்டுப் போயிடுமா?

டாக்டர் : ஆமா…எங்களுக்கு நல்ல ரேட் கிடைக்காது…!வாங்குரவனும்...நல்ல கிட்னியா குடுங்கன்னு...படுத்தி வெக்கிரானுங்க....

 

19.

ஒருவன் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மற்றவன் : பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.

 

20.

கோல்ட் : உங்க மூணாவது பையனுக்கு பொண்ணு பாக்குறிங்களாமே, மருமகள் எப்படி இருக்கனும் ?

மாமன்னர் : என்னோட கூட்டணி அமைத்து என்னோட மூத்த மருமகள்களை வீட்டை விட்டு ஓரங்கட்டணும்...!

தொகுப்பு:செ .மனுவேந்தன்


மகாவம்சத்தில் புதைந்துள்ள...( பகுதி 22)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [ A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country  to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை  நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது. மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும். எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க  பண்டாரம்’  [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977,1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]

 

உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டுவந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். 

 

வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது. 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 23 தொடரும்

  👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள..... [பகுதி 23]:  

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01: