நான்மணிக்கடிகை/09/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்...

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 


தொடர்ச்சி..

 

41:👇👇👇

போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த

வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்

மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்

மன்னர் சீர் வாடிவிடும்.

போரில்லாவிடின் வீரர் சிறப்புக் கெடும். வேரற்றுவிடின் மரங்கள் பட்டுப் போகும். நீரற்றுவிடின் நெய்தல் உலரும். படை இல்லாவிடின் வேந்தனது புகழ் அழியும்.

 

42:👇👇👇

ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்

காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க

தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்

முந்து தான் செய்த வினை.

ஒருவனுக்கு, நல்லியல்பு இல்லாதவர்கள் அயலார். பிறரைப் பாதுகாக்கும் நல்லியல்புடையோர் அன்பர். மேலான தந்தை எனப்படுபவன் ஆசிரியன். தாயெனப் படுபவள் முன் செய்த நல்வினையாகும்.

 

43:👇👇👇

பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட

ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா

நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,

நண்பினார் நண்பு கெடும்.  

ஒருவனுக்கு நாணம் நீங்கினால் செல்வம் கெடும். ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் தீவினை கெடும். நீரற்றால் பசும்பயிர்களின் விளைவு கெடும். நண்பனின் நல்லியல்பு மாறினால் நட்புக் கெடும்.

 

44:👇👇👇

நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற

விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்

பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்

ஊடல் உணராரகத்து.

பிறர் செய்யும் நன்மைகளை நன்மையெனத் தெரிந்துகொள்ளாதவர்பால் செய்ந்நன்றி கெடும். அன்பில்லாதவரிடத்துச் செல்லும் விருந்தினர் வாடுவர். பண்ணிசையை யறியாதாரிடத்தில் அரிய இசை நிரவல்களையுடைய பாட்டுக்கள் கெடும்.  ஊடுதல்  இனிமையைத் தெரிதலில்லாத கணவரிடத்தில், ஊடுதல் கெடும்.

   

45: 👇👇👇

நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய

மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,

அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்

முகம் போல முன் உரைப்பது இல். 

மலரிருக்கும் இடத்தை அதன் மணம் உணர்த்தும். ஒருவன் செயல்திறனை அவனது சொற்கள் உணர்த்திவிடும். ஆராய்ந்து பார்த்தால் மனதில் பொதிந்த தீமையை அவன் மனம் அறிவிக்கும் முன்பே முகம் அறிவிப்பது போல் வேறு எதுவும் அறிவிக்காது.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, கெடும், இலக்கியங்கள், அறின், சாம், நான்மணிக்கடிகை, வினை, முன், நலம், உரைக்கும், வாடும், கீழ்க்கணக்கு, பதினெண், முகம், மனம், அறியாதார், பொதிந்த, ஊடல், முன்னர், அற்ற, செய்த, நீர், சீர், சங்க, நெய்தல், போகும், ஒருவனுக்கு, தந்தை, என்பார், நல்லியல்பு

0 comments:

Post a Comment