தூக்கத்தில் மாரடைப்பு- 'சைலன்ட் அட்டாக்' எப்படி ஏற்படும்?


தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுமா, அதனை தடுப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் மூத்த இதயநல மருத்துவர் சொக்கலிங்கம்.

 

தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? இது திடீரென நிகழுமா அல்லது படிநிலைகள் உள்ளதா?

 

மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம் எல்லாவற்றிலும் இந்தியா தலைநகரமாக மாறிவிட்டது. இந்தியாவில் 20-30 சதவீதத்தினர் மாரடைப்பால் 30 வயதுக்குள்ளாக இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 90 பேர் ஒவ்வொரு மணிநேரமும் மாரடைப்பால் இறக்கின்றனர்.

 

இந்த உயிர்க்கொல்லி நோய் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை வாழ்க்கை முறைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக உள்ளது.

 

உறக்கத்தில் ஏற்படும் இந்த மாரடைப்பை 'சைலண்ட் அட்டாக்' (Silent Attack) என்கிறோம். இவர்கள் பெரும்பாலும் மன உளைச்சல், கவலை, ஏமாற்றம், கோபம், பதற்றம், அனைத்திலும் அவசரம் உள்ளிட்ட உணர்வுகளுடனேயே இருப்பார்கள். இந்த உணர்வுகளால், அட்ரினலின், கார்ட்டிசால் உள்ளிட்ட இரு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்போது உணர் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு இந்த இரு ஹார்மோன்களின் சுரப்பும் அதிகமாகி ரத்தத்தில் கலந்துவிடும். இதனால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் உள்ளிட்டவை அதிகமாகும். 2-3 விட்டம் கொண்டது இதய ரத்தக் குழாய். இந்த ரத்தக்குழாய்தான் இதயத்திற்கு தேவையான ரத்தத்தைக் கொடுக்கும். தேவையான ரத்தத்தை இது இதயதசைகளுக்குக் கொடுக்கவில்லை என்றால், ரத்த ஓட்டம் குறைவதன் ஆரம்பகட்டத்தை அஞ்ஜைனா Angina) என்கிறோம். அதன் முதிர்வான நிலைதான் மாரடைப்பு.

 

ரத்தத்தில் கொலஸ்டிரால் இருப்பதால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை எடுத்துவிட்டால் அடுத்த நொடியே நம் உயிர் பிரிந்துவிடும். ஆனால், இந்த இரு ஹார்மோன்களும் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பிரித்து ரத்தக் குழாயில் சென்று படிகிறது. இந்த நிலைதான் அத்ரோ ஸ்கிளிரோசிஸ். ரத்தக்குழாயில் கொலஸ்டிரால் படிவதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு கொலஸ்டிரால் 70 சதவீதம் படிய வேண்டும். அந்த நிலையில்தான் நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும்.

 

ஆனால், அந்த அடைப்பில் உள்ள எண்டோதீலியத்தில் அரிப்பு மாதிரி உண்டாகி அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதனால், அடைப்பு சிறிதளவில் இருந்தாலும், ரத்தம் உறைவதால், ரத்தக் குழாய் சுருங்குவது என மூன்றும் நிகழ்வது, உடனடியாக உயிரிழப்பு ஏற்படும் வகையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

 

இந்த உடனடியாக நிகழக்கூடிய 'சைலண்ட் அட்டாக்' ஏன் உறக்கத்திலேயே வருகிறது?

 

'சைலண்ட் அட்டாக்' பெரும்பாலும் நாம் உணர்வில் இருக்கும்போதுதான் வரும். சிலருக்கு ஏன் தூக்கத்தில் வருகிறதென்றால், அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு உடனே உறங்குவது, பதட்டத்துடன் உறங்குவது, நிம்மதியற்ற தூக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனாலும் அட்ரினலின் அதிகமாகி இறப்பு நிகழ்கிறது. இதனால்தான் சைலண்ட் அட்டாக் வருகிறது.

 

'சைலண்ட் அட்டாக்' யாருக்கெல்லாம் வரும்?

 

இது 70-80 வயதை தாண்டியவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும். ஆனால், இப்போது 30-35 வயதுடையவர்களுக்கும் வருகிறது. மனநலனை காப்பதே இதற்கு சிறந்த வழி.

 

நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 20 வயதைக் கடந்தவர்கள் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம், நீரிழிவு, ஈசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். பரிசோதனைகள் முடிவின்படி உடல்நிலையை சரிசெய்துகொள்ள வேண்டும்.

 

உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம் கொண்டவர்களுக்கும் இது ஏற்படுவது ஏன்?

 

உடல் எடையை குறைக்க வேண்டும், ஜிம்முக்கு சென்று உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இளைஞர்கள் பதட்டத்துடன் தான் செய்கின்றனர். சீரான உணவுப்பழக்கம், சீரான உடற்பயிற்ச்சி, நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மூன்றையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடும்போது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். உறங்குவதற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். பரம்பரையாக வருவது குறைந்த சதவீதமே, தடுப்பு வழிமுறைகளை எடுத்துக்கொண்டாலே இவற்றை தடுக்கலாம்.

 

மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?

 

என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கணேசன்.

 

நான் 160 பேருக்கு ரேண்டமாக Lipid Profile பரிசோதனைகளை செய்தேன். அவர்களுள் 152 பேருக்கு Lipid Profile அசாதாரணமாக இருந்தது. அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் கிடையாது. இவர்களுக்கு கொலஸ்டிராலை குறைக்கும் மாத்திரைகளை 30 நாட்களுக்கு நான் பரிந்துரைத்தேன். அதன் பிறகு மீண்டும் பரிசோதித்ததில், அந்த அளவுகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. coagulation Profile, Lipid profile, electrolyte profile உள்ளிட்ட பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் உள்ளிட்டவை ரத்தத்தில் ஒரு அளவுகோலில் இருக்கும். இவற்றில் மாற்றங்கள் ஏற்படும்போதும் மாரடைப்பு ஏற்படுகிறது. 30 வயதைத் தாண்டினால் எகோஸ்பிரின் மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

நந்தினி வெள்ளைச்சாமி-/-பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment