ஆடம்பரம் என்றதோர் அழிவுப்பாதை


அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது. அளவிற்கதிகமாக செல்வம் இருப்பதால் ஆடம்பரம் செய்யும் பணக்காரர்கள் மத்தியில் அடுத்தவேளை உணவிற்கு லாட்டரி அடித்துக் கொண்டு இருக்கும் ஏழைகூட தன்னால் முடிந்தவரை ஆடம்பரம் செய்ய நினைக்கிறான். குழந்தைபிறந்தநாள்? காது குத்துதல் எனதொடங்கி திருமணம்? நிச்சயதார்த்தம் வரை அனைத்திலும் முடிந்தவரை ஆடம்பரம் செய்கின்றனர்.

ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களைவிட அதனால் அழிந்து போனவர்கள்தான் அதிகம்.

ஓவ்வொரு விசயமும் மனித வாழ்க்கையில் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பதில் எந்த தடையுமில்லை. அது சற்று ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற போதுதான் அழிவுப்பாதை ஆரம்பமாகின்றது. ஆடம்பரத்தின் விளைவால் அரசாட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தப்புகிறார்களோ இல்லையோ குடிமக்களெல்லாம் குப்பை மேட்டுக்கு வந்துவிடுகிறார்கள். சங்கு சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல எந்த பொருளாதார நெருக்கடியும் மேன்மக்களை பாதிப்பதில்லை ஆனால் அவர்கள் செய்யும் ஆடம்பரத்தின் விளைவு பொதுமக்களின் வயிற்றில் அடித்துவிடுகிறது. உலகின் தூங்கா நகரம் துபை. பல நாடுகளிலிருந்தும் தொழிலாளிகள்?பணியாளர்கள் என பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு இரவு பகலாக வேலையளித்துவந்தது. ஆனால் இன்று பொருளாதார நெருக்கடியால் வேலையாட்கள் குறைக்கப்பட்டதால் பலரின் வாழ்க்கை கேள்விக்குரியதாக போய்விட்டது.பொருளாதார வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உண்டு. என்றாலும் அனைத்து வசதிகளும் கொண்ட உலகில் உயரமான கட்டிடம்? கடலை தோண்டி அட்லாண்டிக் என்ற சொகுசு பங்களாக்கள் இன்னபிற ஆடம்பர இத்யாதிகள்; போன்றவைகளும் இதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். மேற்கத்திய உலகம் அழகு?நாகரிகம் என்ற பெயரில் இவ்வுலகிற்கு அறிமுக படுத்திய அநேக விசயங்கள் ஆடம்பரங்கள்தான்.


மேற்கத்திய உலகத்தின் ஆடம்பர மோகம் அரபுலகத்தை சற்று ஆழமாக தாக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். அரபுநாட்டு பெண்கள் ஆடம்பரத்திற்கும் அலங்காரத்திற்கும் செலவளிக்கும் தொகையில் ஆப்பிரிக்கநாடுகளின் வறுமையையே போக்கமுடியும். பன்னாடுகளைபற்றி பல விசயங்களை கூறிக்கொண்டே செல்லலாம். இதை விடுங்கள் நம்முடைய ஊர்களில் செய்யும் ஆடம்பர செலவுகள் பற்றி சொல்லியாகவேண்டும்.

ஆம் திருமணத்தின் போது நாம் மனசாட்சியே இல்லாமல் செய்யும்
ஆடம்பர செலவுகளை கொண்டு எத்தனை பேருடைய வயிற்று பசியை அடக்கமுடியும் சீரியல் லைட்டுகள் முதல் மேடை அலங்காரம் வரை எத்தனை தேவையற்ற செலவுகள்.
ஆடம்பரத்தால் ஏற்படும் பல விளைவுகளை பட்டியலிட முடியும். அவற்றில் மு்ன்று முக்கிய தீமைகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தற்பெருமை 

அடுத்தவர்களை இழிவாக நினைப்பதன் விளைவுதான் தற்பெருமை. ஒரு ஆடம்பர விரும்பியிடம் இதற்காகும் செலவுகளை ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்று சொன்னால் ? என்னிடம் இருக்கிறது என் பணம் நான் எப்படி வேண்டுமானாலும் செலவளிப்பேன் எதற்கு வேண்டுமானாலும் செலவளிப்பேன் ?அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது என்று கூறி வாயடைக்க வைத்துவிடுவான்.

நல்ல வணக்கசாலியாக இருந்தும் இதுபோன்று ஆடம்பர பிரியனாக இருப்பதால் அவனது உள்ளத்தில் தற்பெருமை குடிகொண்டு அவனது நல்லமல்களை நாசமாக்கிவிடுகிறது.

அதே போன்று ஏழைகளை கண்டால் ஆடம்பர பிரியனுக்கு பிடிக்காது.எளிமையும் பிடிக்காது.  தற்பெருமையே அவனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கும். யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் செல்ல முடியாது என்ற  அடிப்படையில் சுவனம் புக முடியாதவர்களின் வரிசையில் ஆடம்பரபிரியனும் வந்துவிடுவான்.

வீண்விரயம் 

ஆடம்பரவிரும்பி ஆடம்பரத்திற்காக செய்யப்படும் வீண்விரயங்கள் பற்றி
கவலைப் படவே மாட்டான். ஆம் அமெரிக்காவில் ஒரு பெண்மணி விருந்து சாப்பிட்டு விட்டு மீதமான உணவுகளையெல்லாம் ஒன்று சேர்த்து பார்த்தாராம் அதில் விருந்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முழுஉணவுகளில் பாதிக்குமேல் மீதியாக குப்பையில்தான் கிடந்தது என்று கவலையை வெளிபடுத்திய அவர்? விருந்து உபசரிப்பில் ஆடம்பரமாக பல வகைகளில் உணவுகளை பரிமாறுகிறார்கள் ? அதில் பலரின் உடலுக்கு ஒவ்வாத உணவுகள் வரும் போது அதை அப்படியே வைத்துவிடுகிறார்கள். சிலர் எல்லா உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்று ஒரு சில கவளங்கள் சாப்பிட்டுவிட்டு அப்படியே வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு மீதமாகும் ஆயிரக்காண டாலர்கள் மதிப்புள்ள உணவுகளைப்பற்றி இவர்கள் கவலைபடுவதில்லை என்று தன் ஆதாங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இது போன்று ஆடம்பரத்தால் ஏற்படும் வீண்விரயங்கள் ஏராளம்.

ஒரு தடவை ஒரு மனிதர் தங்க மோதிரம் அணிந்துகொண்டு நபியின்
சமு்கத்திற்கு வந்த போது நபியவர்கள் அவருடன் பேசவில்லை. ஆனால் அவருக்கோ காரணம் தெரியவில்லை. அருகிலிருந்த தோழர்களிடம் கேட்ட போது நீங்கள தங்கமோதிரம் அணிந்திருப்பது நபியவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறவே? உடனே அவர் அந்த மோதிரத்தை வீசியெறிந்தார் இதைகேள்விபட்ட நபியவர்கள் அதை வேறு ஏதாவது உபயோகத்திற்கு பயன்படுத்தியிருக்கலாமே என்று கூறினார்கள். எந்த வகையிலும் வீண்விரயம் செய்யக்கூடாது என்பதுதான் இந்த செய்தியின் கருத்தாகும்.

பாவசெயல்கள் 

ஆடம்பரம் நம்மையறியாமலே பாவத்தில் முழ்கடித்துவிடும் . ஒரு ஆடம்பர விரும்பி

• ஆடம்பரவாழ்விற்காக சிலசமயம் தவறான வழியில் சம்பாதிக்ககூட தயங்கமாட்டான்

• பிறரின் பொருளின் மீது ஆசை ஏற்பட்டு அதைபோன்று தம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று அதை தவறாக அடைய முயற்ச்சிப்பான்.

• தன்னை விட அதிகமாக ஆடம்பரம் செய்பவனை கண்டு பொறாமை கொள்வது மட்டுமின்றி அவனை பின்பற்றத்தொடங்குவான்

• உலக ஆசை மிகைத்து மரணத்தை வெறுக்ககூடியவனாக மாறிவிடுவான் .

அழகியல் என்பது ஆடம்பரமாக ஆகிவிடக்கூடாது. 

1. சாப்பிடுங்கள் குடியுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். உண்ண உணவு தேவைக்கும் சக்திக்கும் ஏற்ப இருந்தால் போதும். சத்தான சாதாரண உணவுகளைதான் சாப்பிடுங்கள் . எனவே சாப்பிடும் விஷயத்தில் ஆடம்பரத்தையும் வீண்விரயத்தையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. உடையும் அப்படித்தான்.  மானத்தை மறைக்கும்விதமாக கண்ணியமளிக்கும் ஆடையாக இருந்தால் போதுமானது. நவீனம் ஃபேஷன் என்ற பெயரில் ஆடம்பரமிக்க ஆடைகளையும் அணியக்கூடாது.

3. இருப்பிடமும் அப்படித்தான். வெயில்? மழை ?காற்று இன்னும் பனி போன்ற எல்லாவிதமான பாதிப்புகளிலிருந்து காக்கும் விதமாக அமைதிருப்பது அவசியம். அதே சமயம் தேவைக்குடி அதிகமான அறைகள்? ஆடம்பரமான உள் வெளி டிசைன்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

உணவு?உடை இன்னும் இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளில் கூட ஆடம்பரம் கூடாது என்கிற போது மற்ற விசயங்களில் ஆடம்பரம் காட்டுவது பற்றி என்ன சொல்வது.

என்னைபொறுத்தவரை ஆடம்பரம் என்பது ஒரு வெளிப்படையான அனுமதிக்கப்பட்ட மோசடி ? அழகாய் நினைக்கப்படுகிறபடுகின்ற மனிததன்மையற்ற செயல். கவர்ச்சியாக சித்தரிக்கப்படும் அழிவுப்பாதை.

ஆடம்பரசெலவுகளுக்காக செலவு செய்யும் பணங்களை வெகுஜன ஏழைகளுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஆதரவற்ற முதியோர்கள்? அனாதை குழந்தைகள்? வறுமையில் வாடும் மாற்றுதிறனாளிகளுக்கு கொடுக்கலாமே.

அந்த அளவிற்கு கூடவா மனம் வருவதில்லை. 

மனிதநேயம் என்பது பேசுவற்கும் எழுதுவதற்கும் இன்னும் கேட்பதற்கும் மட்டும் இல்லை என்பதை எப்போது நாம் உணருமோ அப்போதுதான் இது போன்ற ஆடம்பரங்கள் குறையும் என்பதில் ஐயமில்லை
 - திருச்சி ஏ.எம். அப்துல் காதிர் ஹஸனீ.

0 comments:

Post a Comment