தமிழரின் நம்பிக்கைகள் பகுதி/Part-03"A":‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam
மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்ட  அல்லது அதில் ஏற்படும் நோய் குணங்களை கொண்ட சில நம்பிக்கைகள் :  "தும்மல்/விக்கல்/கண் வெட்டசைவு/உள்ளங்கை அரித்தல்sneezing/hiccups//twitching of the eye/itching of palm:"
தும்மல் & விக்கல்ஒரு மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன என முகவுரையில் பார்த்தோம்.அது மட்டும் அல்ல இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு,வளமும் நலமும் பெறும் என்று மக்கள் நம்பினர்.நம்பிக்கைகள் பொதுவாக அனைத்து மக்களிடையும் எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.நம்பு என்பதற்கு ‘விருப்பம்,ஆவல்,ஆசை,நசை’ என்று அகராதிகள் பொருள் தருகின்றன.மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்டும் அல்லது அதில் ஏற்படும் நோய் குணங்களை கொண்டும் சில நம்பிக்கைகள் அக்கால மக்களிடையே இருந்து வந்துள்ளன.அவைகளில் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம்.

தும்மல்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ,திருவள்ளுவர் காலத்திலேயே,"எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்" என நம்பினார்கள். இப்படி தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும்  இருந்து வருகிறது.யாராவது வீட்டில் தும்மினால் "ஆயுள் நூறு" என்று வீட்டில் சொல்வார்கள்.அன்றைய நாளில் தும்முபவர்களை வாழ்த்துவது போலவே, இன்றும் மேலை நாடுகளில் எவராவது தும்மினால் அருகிலிருப்பவர் "bless you" என்று சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. தும்மலின் போது "ஆயிசு நூறு"/"தீர்க்க ஆயிசு" எனக் கூறுவது ஏனெனில் நம் இதயமானது ஒரு மில்லி செகன்ட் நின்று துடிக்கிறதாம்.

"[1]தும்முகையில் வாழ்த்துதல்", "[2]தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல்" என்று எண்ணுதல் ஆகிய இரு செய்திகளையும் சில குறள் தெளிவாக தெரிவிக்கிறது:  

1312 - "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து."

நான் அவரோடு  ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்தி நான் அவரோடு பேசுவேன் என்று நினைத்து.

1317 - "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று."

நான் தும்மினேன்;அவள் வழக்கப்படி என்னை வாழ்த்தினாள்.ஆனால்  உடனே என்ன சந்தேகம் வந்ததோ அவளுக்கு .எவள் உம்மை நினத்தமையால் இப்ப தும்மினீர் என கேட்டு அழத் தொடங்கிவிட்டாள்.
  
தும்மல் என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு.மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும்.ஒவ்வாமை[அலர்ஜி/allargy] காரணமாகவும்,வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும்,குழிச்சளி[சைனஸ்/sinus] பிரச்சினையாலும் தும்மல் வரும்.அவ்வளவுதான்.தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறதாம் 
அதனால் தான்  "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர் போலும். இப்படியான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உண்டு.

விக்கல் :


விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?என்பார்கள்.

தும்மலை பற்றிய நம்பிக்கைகளை  கூறிய திருக்குறள் ,விக்கலை பற்றிய எந்த நம்பிக்கைகளையும் கூறவில்லை .அதே போல  கலித்தொகை சங்க பாடலிலும் அப்படி ஒன்றையும் கூறவில்லை.இரண்டிலும் விக்கலை அறிவு பூர்வமாக எடுத்து கூறியுள்ளார்கள்.     

"நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்" (குறள் 335)

உயர்  பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51
".. மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே,
உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை
‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு
‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனோ
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்."

ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது "தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்றான்.
அம்மா ‘அழகான அணிகலன்களை அணிந்தவளே,தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடு’ என்றாள்.விவரம் புரியாமல் நானும் போனேன்.
அந்தப் பயல்  தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான்.அதிர்ச்சியடைந்த நான்  "அம்மா! இங்க வந்து பாரும்மா இவன் செயலை" என்று அலறினேன்.
அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள்.  "தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று  பொய் சொன்னேன்.
அம்மா நம்பிவிட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க,அவனின் தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள்.அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துப்  ஒரு புன்னகை செய்தான்!அது என் மனதைக் கொள்ளையடித்தன!!

விக்கல், யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று முதலில் நம் முன்னோர்கள் கூறியதை, இன்றும் எல்லோரும் நினைக்கிறார்கள்..ஆனால் உண்மையில் விக்கலானது(hiccup அல்லது hiccough), ஓர் அனிச்சை செயல்[reflex action] ஆகும்.இது ஒரு நிமிடத்தில் உதரவிதானம் (diaphragm/வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு; நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும் தசை)பலமுறை சுருங்குவதால் உண்டாகிறது.மனிதர்களில் திடீரென நுரையீரலுக்குள் காற்று புகும் போது எபிகிளாட்டிஸ் (Epiglottis) மூடிக் கொள்வதால் “ஹக்“ என்ற சத்தம் உண்டாகிறது. இந்த ஒருவித விநோத ஒலி  தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.அவ்வளவுதான்!


பகுதி/Part 03"B"[கண் வெட்டசைவு & உள்ளங்கை அரித்தல்] அடுத்தவாரம் தொடரும்

0 comments:

Post a Comment