தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05"B" கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் &தாயத்து

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.


இன்னும் ஒரு  திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும்  கூறப்படுகின்றது..

 "திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே."
[திருவருட்பா]

திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால் அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்;பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்;கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா,

ஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது 

"அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர்கொலோ அதுவே".

உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில்
தாயத்தைக்கட்டி,முருகனின் கோபத்தை தணிப் பதற்கான சடங்குகளைச்  செய்ய,உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?
இப்படி "தாயத்து" பற்றிய செய்தியையும் சங்க பாடல் ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது. 

வேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள் பேசுகின்றன.தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும்[foster-mother,வளர்த்த தாய்] தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல்.இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன.அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது.அதை முன்னின்று நடத்தியவள் தாய்.

முன்னர் பௌர்ணமி நாளன்று நடு இரவில் வெறியாட்டு நிகழும்.முருகாற்றுப்படுத்த வேண்டி களத்தில் நின்று வேலன்,முருகனை தன் மீது வரும்படி அழைப்பான்.இவ்வாறு வேலன் அழைக்கையில் அச்சம் தருகின்ற முறையில் முருகன் அவன்மீது வந்திறங்குவான். அவ்வாற்றலால் வேலன் வருங்காலம் உணர்த்துவான் என்று சங்க பாடல்கள் கூறுகின்றன. 

ஐங்குறுநூறு 241 – கபிலர், குறிஞ்சி திணை -  தோழி தலைவியிடம் சொன்னது 

"நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன்  தந்தாள் ஆயின் அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே."


நான் படும்  துயரத்தை நோக்கி என் தாய்,வேலனை அழைத்தாள்,ஆனால் அந்த வேலன் மிகுந்த நறுமணம் கமழும் நாடனுடைய,நட்பு அறிவானா இல்லையா?திருத்தமான பற்கள் உடையோளே! என்று இப்பாடல் கூறுகிறது.இப்படி பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம்.


பழைய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதாவது ஒன்றை நாம் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில்,அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை கைவிடாமல் இருக்கின்றோம்.அவை தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் நாம் கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும்.அப்படி என்றால் காலத்தின் தேவைக்கு ஏற்றவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.மற்றவை கைவிடப்படும்.  

பகுதி/Part 06:"பயணமும் நல்ல நாளும்" அடுத்தவாரம் தொடரும் 

1 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete