முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?


Image may contain: 1 person, text
நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது.கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம்.அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு.என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்னவென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல .இருவரும் தனி அறையில் ,தனி இடத்தில் ,தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து,நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை ,இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது.

சிலர் எனது வாதத்தை மறுக்கலாம்.அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்??நான் இங்கு பாலியலைப் பற்றி கூறவில்லை,ஆனால்,மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை ,நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை," 

சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:
Image result for online dating

"எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514]

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா??????

முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ?காதலியை காதலனை மெய்தொட்டுப் பேசவும் முடியாது?அவளின் கூந்தல் மணமும் தெரியாது?

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே" 
[குறுந்தொகை-2]

பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? 


சேயாறு சென்று, துனைபரி அசாவாது,

உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல

வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்

நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.
[குறுந்தொகை-269]

சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி  தூது விடுகிறாள். அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள்,கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் ,தாயும் நெல்லுடன் வந்து விடுவாள்.இது தான் அந்த காலம்.ஆனால் இன்று  கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி ,அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால்  கணினி உதவலாம்? 

காதலில் விழுவதென்றால்,ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும்.கட்டாயம் முன் திட்ட மிட்ட ,நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல்  சந்திப்பு அல்ல.அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க் கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்?  காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும் .அப்பதான் உண்மை காதல்!    
  
ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் நேரடியாக  கதைத்தல்[online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாடலுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். 


உதாரணமாக,ஒருவர் குறுந்தகவல் [ text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம்.நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை .ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம் .அதே போல, ஃபேஸ் டைமிங்கில், வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம்.மேலும்  தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால்,ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம் .அப்படியே,தழும்பு,வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம்.இவை நேரடியாக செய்ய முடியுமா?முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம்.அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை,ஆனால்,மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் .அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை.மேலும்  "மின்னுவதெல்லாம் பொன்னல்ல.மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல",ஆகவே:


"சந்திப்போமா இன்று சந்திப்போமா 
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா 
எதிர் காலம் இன்ப மயமாக என்றும் 
இளமையும் இனிமையும் துணையாக 
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக 
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment