எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22

தென் இந்தியாவின் மிக முக்கிய இலக்கிய மொழியாக தமிழ் உள்ளது. இது சுமேரிய மொழியுடனும், சிந்து வெளி மொழியுடனும் தொடர்பு பட்டு இருந்தாலும், அது தமிழாக முதலில் எழுதப் பட்டது தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்திலேயே ஆகும். அதன் பின் அது இன்றைய நிலைக்கு வளர்ந்தது எனலாம். மேலும் தமிழ் குறியீட்டை, பிராமி எழுத்தில் இருந்து பிறந்த மற்றைய மொழி குறியீடுகளுடன் ஒப்பிடும் பொழுது, அதன் சிறப்பு நிலை தெரிய வருகிறது. உதாரணமாக, பிராமி எழுத்து . முப்பத்தி ஆறு அடிப்படை குறியீடுகளையும், அதில் இருந்து பிறந்த வட மொழி எழுத்துக்களான பெங்காலி, சிந்தி, காஷ்மீரி, ஒரியா மற்றும் தேவநாகரி போன்றவை முப்பத்தி ஒன்பது அடிப்படை குறியீடுகளையும் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் முப்பது அடிப்படை குறியீடுகளை மட்டும் கொண்டுள்ளது ["உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"-நன்னூல்,]. அது மட்டும் அல்ல, முந்தைய வடிவத்தில் அது இருபத்து ஒரு குறியீடுகளையே கொண்டிருந்தது. மேலும் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர நிகண்டு நான்கு வெவ்வேறு எழுத்து முறைமைகள் பற்றி குறிப்பிடுகிறது. அவைகள்: 

1.வடிவெழுத்து [Pictograph /உருவெழுத்து] / சித்திரக் குறிகள் / "செவிப்புல ஒலியைக்
கண்களுக்குப் புலப்பட எழுதும் எழுத்து"  /காது என்கிற சொல்லை எழுதாமல் காதின்  உருவத்தை வரைவது போலும், மரம், சூரியன் இச்சொற்களை எழுதுவதற்குப் பதில் அவற்றின் உருவத்தை வரைந்து விடுவது போலும் அமைந்தவை உருவ எழுத்துகளாகும்.

2.பெயர் எழுத்து [Logograph /சங்கேதக்குறி]  /குறியினாலுணரப்படும் ஒருவகை யெழுத்து / "வடிவெழுத்து முதலாக வழங்கும் எழுத்துக்களுக்கு இடும் பெயர்"  /மனிதனை மனிதனின் உருவத்தையேனும் அவனின் பாகமாகிய தலையையேனும் சித்திரித்துக் காட்டல் பெயரெழுத் தென்றது 

3.முடிவெழுத்து [SYLLABARY ] / தன்மையெழுத்து பெயரெழுத்து வடிவெழுத்து முதலாகவுள்ள எழுத்தினை மனத்தாற் றுணிவது” /விவேகத்துக்குக் கண், வெற்றிக்குக் கருடன் முதலியன வரைதல். முடிவெழுத் தென்றது 

4.தன்மை எழுத்து [Phonetic] /குணம், சத்தி முதலியவற்றைக் காட்ட வரையும் அடையாளங்கள். / "செவிப்புலனாகிய ஒலியெழுத்து" / போரைக் குறிக்க மனிதனின் புயங்களைக் காட்டுவது. தன்மை யெழுத்தென்றது 

"வடிவெழுத்து பெயரெழுத்து, முடிவெழுத்து தன்மை எழுத்தென எழுத்தின் பெயர்இயம் பினரே" அதையே இன்று தொல்லியல் அறிஞர்களால் வறையறுக்கப்பட்டுள்ள படவுருவன்(PICTO GRAPH),சொல்லுருவன்(LOGO GRAPH), உயிர்மெய்யன்(SYLLABARY), ஒலியெழுத்து(PHONETIC) என்று குறிப்பிடுவதுடன் ஒப்பிட்டு நாம் பார்க்கலாம்?  

இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது. மேலும் ‘நிகண்டு' எனும் பிரிவில் திவாகரம் முதலில் தோன்றிய நூல் ஆகும்.ஆங்கிலத்தில் உள்ள, ‘Dictionary', ‘Thesauras' என்ற இரண்டும் நிகண்டை ஒத்தவை ஆகும். பிங்கலந்தை நிகண்டும் இந்த மேலே கூறிய நான்கு எழுத்து முறைகளை குறித்து உறுதி செய்கிறது. ஒப்பு நோக்கும்போது தமிழின் எழுத்துவகைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும் நாம் அறிய முடிகிறது .எனவே தமிழர்கள் பண்டைய காலத்தில், இந்த நான்கு வகை எழுத்துக்களையும் தமது செய்திகளை பகிர,கல்லிலும், மட்பாண்டங்களிலும் பாவித்தார்கள் என அறிய முடிகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு 2006ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன. இவை கி மு 3 ஆம் ,கி மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமை யானவை என்ற பெருமையை இந்நடுகற்கள் தட்டிச் செல்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சங்ககால நடுகற்களின் கல்வெட்டுப் பொறிப்பு இதுவரை தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாகும். மூன்றடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்நடுகற்கள் நிலத்தில் ஓர் அடி ஆழத்தில் நடப்பட்டிருந்தன. இந்நடுகற்கள் சங்க காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளை உட்கொண்ட ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாக நடப்பட்டிருந் ததால் தமிழக வரலாற்றா ய்விலும் சங்ககால ஆய்விலும் சிறப்பான இடத்தை பெற்றுத் திகழ்கின்றன. கிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் “கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்” என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, “கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல் எனப் பொருள் கொள்ளப்பட்டு உள்ளது. அடுத்த நடுகல்லின் முன்பகுதி உடைந்து போய் உள்ளது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழந்தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் எழுதப் பெற்ற இந்நடுகல்லில் இரு வரிகள் காணப் பெறுகின்றன. முதல் வரி ‘அன் ஊர் அதன்’ என்றும் இரண்டாவது வரியில் ‘....ன் அன் கல்’ என்றும் காணப் பெறுகின்றன. அடுத்த நடு கல்லில் ‘வேள் ஊர் பதவன்’ எனக் காணப் பெறுகிறது. இதற்கு ‘வேள் ஊரைச் சார்ந்த பதவன்’ அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்பெற்ற நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.

அதே போல தத்தப்பட்டி கிராமத்திலும் ,மற்றும் ஆதிச்சநல்லூர், கொடு மணல், பொருந்தல், கீழடி  போன்ற இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் பெருங் கற்படைக் கால மக்கள் வாழ்விடங்களிலும், இவர்கள் எற்படுத்திய நினைவுச் சின்னங்களில் காணப்படும் மட்கலன் களிலும் குறியீடுகள் (Graffiti Marks)  அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன. இக்குறியீடுகளை சிந்து சமவெளி எழுத்துகளோடு ஒப்பிட்டும், சிலர் சிந்து சமவெளி எழுத்துகளுக்கு அடுத்த நிலையிலும் வைத்தும் ஆய்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இவை எல்லாம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் சமூகம் ஒரு ஒரு கல்வி அறிவு பெற்ற சமூகம் என்பதை எடுத்து காட்டுகிறது.


தமிழ் சங்க பாடல்கள் பல இறுதி ஊர்வல சடங்குகளைப் பற்றி கூறுகின்றன, அவற்றில் நடு கல் எழும்புதல் பற்றியும் பாடல்கள் உண்டு. உதாரணமாக... ' ஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான். அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் புறநானுறு 264  பாடல் மூலம் கேட்க்கிறார்.

"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே ."

இதுவும் எழுத்து பொறிக்கப் பட்ட நடு கற்கள் 2000 -2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை உறுதி செய்கிறது.  

கி மு 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி அல்லது தமிழ் பிராமி ,கி பி 2 ஆம் -3 ஆம்  நூற்றாண்டு அளவில் வட்ட  வடிவத்தை ,ஓலையில் எழுது வதற்கு இலகுவாக,  எடுக்கத் தொடங்கியது என கருதலாம். இந்த மாற்றம் கி பி ஐந்தாம்  நூற்றாண்டு அளவில் வட்டெழுத்து உருவாக வழி சமைத்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு ,அது  தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்த நிலையில், இந்த பண்டைய எழுத்து கிரந்த எழுத்துடன் ஒன்று சேர்ந்து ,கி பி 7 ஆம் -8 ஆம்  நூற்றாண்டு அளவில், இன்றைய தமிழ் எழுத்துக்கள் உருவாக்கியதாக கருதலாம். அதாவது,தமிழ் மொழியும் தமிழ் எழுத்தும் சமூக-கலாச்சார மாற்றங்களை உள்வாங்கி, படிப் படியாக ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:23  தொடரும்

0 comments:

Post a Comment