எல்லாம் கடவுள் செயல்!:

''எல்லாம் அவன் செயல் '' என்று எல்லா மதத்தவரும் கூறிக்கொள்கிறார்கள் .  எல்லாம் அவன் செயல் என்பது எந்தளவில் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஆனால் உண்மையிலேயே அவர்கள் அப்படி எந்நேரமும் எண்ணுவது இல்லை. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறு செயலின் பொறுப்பின் பங்கினைத் தாங்களும் எடுத்துக் கொள்ளவார்கள். அப்படியான சம்பவங்கள் பலவற்றை நாளாந்தம் காண்கிறோம்.

அவ்வாறான சில செயலகள்:
* பிள்ளை பரீட்சையில் உயர் சித்தி அடைந்தது கடவுள் செயலால்! அது அப்பிள்ளையின் கடின உழைப்பால் அல்ல. ஆனால் ஒரு பாடம்சித்தியடையாது விட்டது அப்பிள்ளை படிக்காது விட்டதால்! இது கடவுளால் அல்ல.
* கோவில் செல்லும் வழியில் வண்டி பயங்கர விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தும் ஒருவர் உயிர் தப்பியது கடவுள் அருளால். ஆனால் விபத்து நடந்தது ஓடியவரின் கவனக்குறைவால்; இது கடவுளால் அல்ல.
* ஓர் ஆயிரம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒருகுழந்தை மட்டும் விழுந்து தலையில் அடிபட்டு மதியிறுக்க நோய்க்கு ஆட்பட்டு உயிரோடு இருப்பது, ஒரு மருத்துவ சாதனை! இறக்கவேண்டியது உயிரோடிருப்பது கடவுளின் கருணையால்! விழுந்து அடிபட்டது கடவுளால் அல்ல.
*கடவுளே கதியென்று நாள்தோறும் இருப்பவருக்கு வேலை பறிபோவது, பணக் கஷ்டம் வருவது, நோய் வாய்ப்படுவது, குழந்தை கிடைக்காதது, பிள்ளைகள் இவரது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதசெய்கைகள், திருமணங்கள், பழக்கவழக்கங்களுக்கு உள்ளாவது கடவுள் சித்தம். முன்வினைப் பயன்கள்! அதை மாற்ற இவருக்கு இயலாது! கடவுளாலும் முடியாது!
*தினம்தோறும் பிரார்த்தனை செய்தும், தொடர்ந்து பல இன்னல்களுக்கு உள்ளாகுவது, ஆயிரக்கணக்கில் மக்கள் கொலை செய்யப்படுவது, பட்டினியால் சாவது எல்லாம்  சாத்தான் செய்யும் வேலை! இது கடவுளால் அல்ல!
* கடவுளையே ஒருவர் நம்பாது விட்டாலும் கடவுள் எப்படியும் செய்யவேண்டிய நல்ல விடயங்களை அவருக்கும் செய்தே தீருவார். அதையும் மீறி அந்த நபர்தான் தேவை இல்லாத செயல்களை செய்து கஷ்டத்தினுள் போவார். இப்படி எண்ணத் தூண்டுவது கடவுளே அல்ல!
*ஒருவர் நீண்டகாலம் உயிருடன் இருந்தால் கடவுள் கிருபை. அவர் அற்ப வயதில் போய்விட்டால், கடவுள் எப்போதும் நல்லவர்களை விரைவில் தன்னோடு அழைத்து அருள் செய்வார்!
* கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, உணர்வற்று மாத, வருடக்கணக்காய் இருந்து, பல லட்சம் செலவு செய்து கடனாளி ஆனாலும், கடைசியில் அவர் கண் முழித்துப் பார்த்தது கடவுள் கருணையால்!

ஆக மொத்தத்தில் கடவுள் நல்லதையே செய்வார். கெட்டவைகள் எல்லாம் நடக்கக் காரணமாய் இருப்பது மனிதன், முன் வினை, சாத்தான் என்பனவாகும். இந்த மூன்று எதிரிகளையும் வென்று நல்வாழ்க்கையை அடைவதற்கும், இறந்தபின் நற்கதி பெறுவதற்கும்தான் பலர் கடவுள்பால் செல்கிறார்கள்.
ஆனால், இவர்கள் வணங்கும் இந்தக் கடவுள்மார் எல்லோருமே சக்தி கொஞ்சம் குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்களே; அதை எவராவது யோசித்துப் பார்க்கிறார்களா?

அவர் செயல்தான் எல்லாமே என்றால்:
அவர்தானே மனிதனை,
-கடவுளை நம்பாத தன்மையுடன் படைத்தார்.
-தீமை செய்யும் குணமுள்ள உள்ளத்தைத் தந்தார்.
-சக உயிர்களையும் கொன்று குவிக்கச் செய்தார்.
-ஊணும், இடமும் இன்றித் துடிக்க விட்டார்.
-நோயினாலும், பிணியினாலும் வருந்த வைத்தார்.

கஷ்டங்களுக்குக் காரணம் பழைய பிறப்பு வினை என்றால்,
அவர்தானே மனிதனை,
-முன் பிறப்பில் பாவம் செய்ய வைத்தார்.
-அப்பிறப்பில் தன் வாக்கை மறுக்க வைத்தார்.
-முன்-பின் பிறப்புகளை உணரவிடாது மறைத்தார்.
-அறியாத, தெரியாத குற்றத்திற்கு இப்பிறப்பில் தண்டித்தார்.
-இப்பிறப்பில் பாவம் செய்ய காரணியாய் இருந்தார்.

கஷ்டங்களுக்குக் காரணம் சாத்தான் தான் என்றால்,
அவர்தானே
-சக்தி வாய்ந்த சாத்தானை உருவாக்கினார்,
-மனிதனைச் சாத்தானிடம் விழ விட்டார்.
-சாத்தானைக் கட்டுப்படுத்த இயலாமல் போனார்.
-சாத்தானையும், மனிதனையும் ஒரே இடத்தில் விட்டு வைத்தார்.
-தன் தூதர்களையும், அவதாரங்களையும் கூடி, காப்பாற்றத் திராணி இல்லாமல் அவர்கள் எல்லோரும், நோய்வாய்ப்பட்டும், அடிபட்டும் இறக்க விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடவுள் நம்பிக்கை என்பது, நம்புபவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கவல்ல ஒரு வித மனோதத்துவ மருத்துவமே அன்றி வேறு ஒன்றும் இருப்பதாகக் காணவில்லை. கஷ்டங்கள் எல்லாவற்றையும்கடவுள் தீர்த்துவைப்பார் என்ற ஒரு நேரிய சிந்தனையே பல விடயங்களைச் சீர் செய்துவிடும்.

(கடவுள்) உலகைச் சிருஷ்டித்து, பொருட்களையும் படைத்து, மனிதனை   உருவாக்கி, ஐம்புலன்களையும் கொடுத்து, 'மனிதனே போய் அனுபவி' என்று அனுப்பி வைத்தால், இத்துடன் அவர்களின் ஆசை அடங்கமாட்டாது. அவர்கள்  இன்னும் அளப்பரிய பேராசை கொண்டு, கற்பனையில் சொல்லப்படும் 'நல்ல மறு பிறப்பு' , 'சுவர்க்கம்', 'பரலோகம்' என்று தேடி, நாளாந்தம் பிரார்த்தனைகள், ஆராதனைகள், கூட்டுத் திருப்பலிகள், நோன்புகள், தொடர் தொழுகைகள், பூசைகள், பாடல்கள், பிரசங்கங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மூலம் வழிபட்டுக் கொண்டே  திரிகிறார்கள். எங்கள் மெய் (உடம்பு) மெய் இல்லையாம்! பொய்யாம்! மெய் எங்கோ இருக்கிறதாம்! அதைத் தேடித்தான் இவ்வளவும்!
நீங்கள் கேட்டால் தருபவரும், கேளாவிட்டால் விடுபவரும்  என்று நினைத்தால் அவர் ஒருபோதும் கடவுளாய் இருக்கமுடியாது. கடவுளின் புகழ்களைத் திரும்பத் திரும்பக் கூறிச் சத்தமிட்டால் அவர் உச்சி குளிர்ந்து, ஓடிவந்து நல்லதை அள்ளித் தருவார் என்று எண்ணினால் அவர் ஒருபோதும் ஒரு கடவுளாய் இருக்க இலாயக்கு இல்லாதவர் என்று சொல்லாலாம். இறை பக்தி நிறைய உள்ளவர்களுக்கும், இறைவனையே நினைக்காதவர்களுக்கும் வாழ்வில் சுகமும், துக்கமும் ஒரேமாதிரி, ஒரே அளவில்தான் வருவதை நேரில் காண்கிறோம். இப்படி இருக்க, அநேகமானவர்கள் இவ்வழியில் மயங்கிப் போய் இருக்கும் மர்மம்தான் என்னவோ?

தாயகப் போரின்போது ஒரு நாளில் 5000 பேர் மரணித்தவேளையில், ஐந்து  சமயத்தைச் சார்ந்த சமயகுருமார்களை அழைத்து கூட்டுவழிபாடு நடத்தி எல்லாக் கடவுள்மாருக்கும் ஒரு பொது விண்ணப்பம் அனுப்பினார்கள். கடவுள்மார் அன்றிரவு ஒரு அவசரகால விசேச நிர்வாக சபைக் கூட்டம் நடத்தி, கொன்றவருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்த வேளையில், மறுநாள் இன்னும் 2000 பேர் இறந்துவிட்டார்கள். என்னப்பா இது? இங்கு நடப்பது ஒன்றும் இந்தக் கடவுள்மாருக்குத் தெரிந்திருக்கவில்லையா? நீங்கள் சொன்னால்தான் தெரியுமா? வேடிக்கையாய் இல்லை?

அத்தோடு நீங்கள் இறந்தபின்னர் நீங்கள், நீங்கள் இல்லை. இறந்தபின் நடப்பது பற்றி இதுவரை ஒருவருக்குமே ஒன்றும் தெரியாது. அப்படி ஒரு தெரியாத ஒன்றுக்காக, காணாத என்னவோ, எதுவோ ஒன்று சொர்க்கம் போகவேண்டும் என்பதற்காகவோ, அல்லது அடுத்த பிறப்பில் உங்கள் ஆன்மா, சில ஆண்டுகளுக்குப்பின், பல கோடி ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ள அறியாத மண்டலத்தில், ஒரு மூலையில் இருக்கும் வெள்ளியைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இருண்ட கோளில், அடர்ந்த காடு போல் எதோ ஒன்றில் நிற்கும் புரியாத ஒரு மரம் போன்ற உருவின் கீழ், நூறு அடி ஆழத்தில் இருக்கும் ஓர் ஒற்றைக் கல  'சொமீபா'  (இதுதான் மறு பிறப்பு உயிர் என்று வைத்தால்!) ஒன்று நன்றாக, சுகமாக வாழவேண்டும் என்றோ ஏன்தான் ஐயா நீங்கள் கவலைப் படவேண்டும்? வேண்டாம், சரி இங்குதான் இன்னுமொரு மனிதனாகப் பிறந்தாலும், தெரியாத அந்த நபர் நல்லாக வாழவேண்டும் என்று நினைத்து நாளாந்தம் வணங்க, நீங்கள் என்ன அன்னை திரேசாவினைப் போல் உள்ளம் படைத்தவர்களா? அவ்வளவுக்கு நல்லவர்களா? ஒன்றும் புரியவில்லை!
என்னைப் பொறுத்தவரையில் (கடவுள்) எனக்குத் தந்தது போதும். இதற்கு மேலே ஆசைப்பட்டு அவரை அநியாயமாய்த் தொந்தரவு செய்யப்படாது என்ற நல்ல குணம் எனக்கு உண்டு. இதற்கு மேலே ஒரு சின்ன ஆசையும் கொள்வது மகா தவறு என்பதே எனது கொள்கை! அதற்குமேல் கேட்டால் அது பேராசை என்றுதான் சொல்லுவேன்!
 அதுதான் கடவுள் சித்தம் போலும்!
ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்

3 comments:

  1. கருணாகரன்Saturday, January 27, 2018

    எதோ அரோகரா போட்டு தேரை இழுப்போம், பிறதடடை பண்ணுவம், அருச்சனை பண்ணுவம் காவடி எடுப்பம். இன்னும் பல ஆலயங்கள் சமைப்போம்.எனஎண்ணும் பேராசை மிகுந்த மக்களையும் ,ஊர் எப்படிப் போனா என்ன! , மக்கள் பண்பாடு இழந்தா என்ன! ,அழிஞ்சால் என்ன! எங்க வருமானத்திற்கு வழி பண்ணிக்கொண்டிருக்கும் கவலை இல்லாத இந்த கோவில்காரர் கூத்துக்களை எத்தனை பெரியார்கள் வந்தாலும் திருத்தமுடியாது.

    ReplyDelete
  2. குமார்Sunday, January 28, 2018

    இறைவன் தொண்டே பெரிதென்று, இரவும் பகலும் கோவிலில் சுற்றித் திரிந்த ஒருவருக்கு புற்று நோய் தலையில் வந்து கடவுள் காப்பாற்றினார். இப்போது அதே நோய் வயிற்றில் வந்து பல காலமாய் வைத்திய சாலையில் இருந்து, வைத்தியர்களால் கைவிடப்பட்டும், ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் தனது மகனின் திருமணம் வரை முருகன் தன்னை வைத்திருப்பான் என்று நம்பிக் கொண்டிருந்தும், முன்னரேயே இறந்து போனார். என்றாலும் முருகன் அருளால் திருமணம் தொடர்ந்து நடந்தேறியது!

    இப்படியான இன்னொருவர் உறுப்புகள் எல்லாம் செயல் பட மறுத்து, நாள் எண்ணியவாறு இருக்கின்றார் முருகன் கூப்பிடும் வரை!

    இன்னொருவர், ஊருக்கெல்லாம் சாத்திரம் பார்த்தார்; தனக்கும், தன் குடும்பத்திற்கும் பார்க்க மறந்துவிட்டார். அவர், சுகயீனமாகி இறந்துவிட, மறுநாளே அவரின் பேரப் பிள்ளைக்கு திருமணம் கடவுள் அருளால் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது!

    வேறு சிலர், வருடா வருடம் ஜோடிகளாக புட்டப்பதி சென்று மறு பிறப்பிற்கு தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்! அளவற்ற இவர்கள் ஆசைகளை அள்ளி வழங்கித் தீர்த்துக் கொண்டு இருக்கின்றார் சாய் பாபா!

    என்னே கடவுள் திரு அருள்!!

    ReplyDelete