மெல்லத் தமிச் இனி வாசுமா? அல்லது அசிந்து ஒசியுமா?

மன்னிக்கவும். தமிழ்  சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு '' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது.
மெல்லத் தமிழ்  இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பல காரணிகள் உள்ளன:
* வேறு மொழிகளில் உள்ள பலவிதமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் நம் தமிழ் மொழியில் இல்லாது இருந்தும், அதற்கான புது எழுத்துகளையோ, அல்லது குறிகளையோ உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தாது, ஏற்கனவே இருந்த '' என்ற எழுத்திற்கு அழகு கூட்டுவதாகக் கூறிக்கொண்டு, வாசிப்பதை இன்னமும் சிக்கல் படுத்தி விட்டுள்ளனர். இதனால்,  தமிழில் உள்ள '' விற்கும்  'zh '' போட்டு எழுதி, தமிழ் தெரியாதோர் தமிழ் வாசித்தால் தமிழைத் தமிழ் என்று வாசிக்காது  தமிச் என்று  வாசித்து, தமிழின் பெயரையே தமிழர் கொன்றுவிட்டனர். தமிழர் குழு என்பது எவ்வளவு வலியது என்று இவ்வகையில் எழுதிப் பாருங்கள், நன்றாகப் புரியும்.
* தமிழ் உணர்வாளர்  பலர் பெரு முயற்சிகள் எடுத்தும், தமிழ் வளர வேண்டிய தமிழ் நாட்டில் தமிழ் என்றோ  சாகத் தொடக்கி விட்டது. அங்கு நகர மக்கள் பெரும்பாலோரின் கல்வி, மற்றும் பேசும் மொழி ஆங்கிலமே. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பெயர்கள், அவற்றைக் கொண்டு நடத்துவர் உரை எல்லாம் ஆங்கிலத்திலேயே. இளைய சமுதாயத்தினருடன் கதைக்கும் போது, அவர்களுக்கு  ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியமாகின்றது. அப்படியும் மீறித் தமிழில் கதைத்தால் அது பின்வருமாறு அமையும்!  "என்னுடைய வைவட பேர்த்டே செர்பிரைசா  கேக் கட் பண்ணி கிராண்டா  செலிபிரேட்  பண்ண, ருமொரோ ஈவினிங் வைவ் ஒக் குலோக்குக்கு, பிரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணி மரீனா பீச் சவுத் சைட் பே  வியு கொட்டல் சவுத் கோலை ரீச் பாண்ணினதும் எனக்கு ரிங் பண்ணுங்கோ". இதைத் தமிழ் என்று ஒத்துக் கொள்ளாதோர் பரிகசிக்கப்படுவார்கள். எள்ளி நகையாடப் படுவார்கள். அப்படி மீறித் தமிழில்தான் கதைக்க வேண்டி வந்தாலும், ஒவ்வொரு வரிக்கும் சோ, பட், அண்ட், பிகாஸ், லெவ்டு, கிவ்டு  என்று எல்லாம் போட்டு இணைத்துக் கதைப்பது வழக்கமாய் விட்டது. தொலைக்காட்சியில் சில சொற்கள், சாங்க்ஸ், லிரிக்ஸ், கொண்டேச்டன்ட், பர்டிசிபன்ட், ஆடியன்ஸ், தாங்க்யு, வெல்கம்  என்று பல சொற்களுக்கு  என்ன தமிழ் சொற்கள் என்று இன்னமும் தேடுகின்றேன்.
அன்று முதல் இன்று வரை தமிழ் நாட்டில் பிறந்தவர்களின்  தந்தையர் யாவரும்  தமிழராய் இருந்தாலும், தத்தம் பெயர்களின் முன்னேழுத்துகளுக்கு ஆங்கிலேயர்களின் எழுத்துகளை இடுவதில் பேருவகை  அடைகிறார்கள். உதாரணம்: KP சுந்தரம்பாள், MN நம்பியார், MG ராமச்சந்திரன், SP பாலசுப்பிரமணியம், இப்படிப் பல. மேலும், இலக்கங்கள் எதுவும் அங்கு தமிழில் கூறப்பட்டதாக நான் ஒருமுறையும் கேள்விப்படவில்லை.

*மழலையின் முதல் வார்த்தைதனை நாசம்  செய்தோர் தமிழர்களாய்த்தான் இருக்கும். அன்பான பாசப்பிணைப்புடைய அம்மா, அப்பா என அழைப்பதை விடுத்து அம்மி, சட்டி என்று புரியாத வார்த்தைகளக்  குழந்தையின் வாயினுள் திணிக்கிறார்கள். மம்மி என்றால் அழுகிப் புழுத்த சவம் கிடக்கும்  பெட்டி என்ற பொருள் உண்டு என்றும் இவர்கள் அறியார் போலும்.
பெரியோர் கதைக்கும் போதும் தமிழ் பொருட்களை, அல்லது தமிழில் இருந்து தோன்றிய ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் சொல்வதில் கெளரவம் அடைகிறார்கள்.உதாரணம்: rice என்பது arisi இலிருந்து வந்த சொல்லாகும்.  உணவு பரிமாறுகையில், றைசிலை போடுங்கோ! பிஷ் எடுங்கோ! யோக்கர்ட் எடுங்கோ! ஜவ்னா கறிப் பவுடர் போட்டது!லேடீஸ் பின்கர், பிரின்ஜோல் என்பார்கள். இந்த றைஸ் என்று சொல்லும்போது  அவித்த றைசா அல்லது அவியாத றைசா என்று சொன்னால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். மேலும், தமிழ் தெரிந்தோரும் தமிழில் எழுதவோ, கதைக்கவோ தமக்கு கஷ்டமாய் இருக்கிறது என்று கூறுவதில் பெருமை கொள்வதாக  எண்ணித் தங்கள் தமிங்கிலத்தில்  புலம்பித்  தள்ளி, தாங்கள் பெரிய புத்திஜீவிகள் என்று நிறுவத் துணிந்து மண் கவ்வுவதும் உண்டு.
வெளிநாடுகளிலும் தமிழ் மிகவும் கேவல நிலையிலேயே உள்ளது. பெரும்பாலும் பிள்ளைகள் தமிழைத் தவிர மற்றைய மொழிகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு,  தற்போது தமிழ் பேசுவது கஷ்டமாய் இருந்தாலும் விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வரும் காலத்தில், இவர்களின் குழந்தைகளுக்குத்  தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகவே கேள்விப்பட மாட்டார்கள்.
பெரும்கவிஞர்  பாரதியார்  தன் வாயாற் சொல்ல  அஞ்சியது உண்மையிலே நம் முன்னால் நடந்து கொண்டுதான்  இருக்கின்றது.
இதற்கு என்னதான் முடிவோ? பொறுத்திருந்து பார்ப்போம், காலம்தான்  பதில்  சொல்லும்!
                                         - செ.சந்திரகாசன்(அவுஸ்திரேலியா)

0 comments:

Post a Comment