அவள்ஏன் அப்படி? ...கடந்த  சில நாட்களாக கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்த அக்காவை அன்புடன் அருகில் அழைத்தாள் பாட்டி. அக்காவின் கவலைக்கு காரணம் இதுதான். அவருடன் கூடப்படித்த அவரது ஆருயிர் நண்பி உமா அவளது பெற்றோர்கள் வேறு ஊருக்கு இடம் மாறிச் சென்றதினால்  பாடசாலையும்  வேறு அவள் மாறிச் சென்றதும் அக்காவுடனான தொடர்புகளை முழுமையாக நிறுத்தி விட்டாள்.ஒரு நண்பியை இழந்த உணர்வில் நடைப் பிணமானாள் அக்கா.நிலைமையினை புரிந்துகொண்ட பாட்டி மெல்லச் சிரித்தது அக்காவுக்கு சினத்தினை ஊட்டியதோ என்னவோ கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்."ஏன் பிள்ளை உமாவினைஉன்னுடைய நண்பியாக என்னுமா நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.நட்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?"கேள்விமேல் கேள்வி கேட்ட பாட்டியைப் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள் அக்கா.
"பிள்ளை நான் ஒன்று சொல்லுறன் கேள்.
<தனக்குப்பயன் கிடைக்கும் பொது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்,
<ஆபத்து வேளைகளில் எமைவிட்டு ஓடுபவர்கள்,பொழுது போவதற்காக,சிரித்துப்பேசு வதற்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்
<நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவர்கள்,
<சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாதவர்கள்,
<பொழுது போக்குக்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்,
<தனிமையில் பேசும்போது இனிக்கப்பேசி விசயங்களை பெற்றபின் பொது இடங்களில் அதனை வைத்து மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர்கள்
இவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது பிள்ளை.
பாட்டியின் பேச்சு அக்காவை சிந்திக்க வைத்தது என்பது அக்காவின் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.பாட்டி தொடர்ந்தாள்.
"நாம் பாடசாலையில் படிக்கின்ற போது கூடவே நிறைய மாணவர்கள் படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?எம்முடன் திரைப்படம் பார்க்கக் கூடவே சிலர் வருகின்றார்கள் அவர்கள் எமது நண்பர்களா?வீதிகளில்    சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள் அவர்கள் நண்பர்களா?விளையாட்டு மைதானத்தில் எம்முடன் இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமலே எம்முடன் கதைக்கும் அவர்கள் நண்பர்கள்?யோசிச்சுப்பார்!இவர்களெல்லாம் ஒவ்வொரு தேவைகளுக்காக நம்முடன் இணைந்து கொள்பவர்கள்.இரயில் சிநேகிதர் எண்டு சொல்லுவம்..இவர்களில் எவராவது சிலர் எமக்கு நண்பராகக் கூடும்.அந்த உறவு இருவருக்கிடையில் நட்பாக உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதில்லை.இருவருக்கும் இடையில் காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்பு காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய புர்வமாக நேசிப்பது உண்மையான நட்பாகும்.இன்னும் சொல்லுறன் கேள்.
ஒருவருக்கு ஒருவர் மனவேறுபாடு கொள்ளாமல் தன்னாலே இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பரைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பு.உனக்கு அப்படி ஒருவர் நண்பராக இருந்திருந்தால் நிச்சயமாக உன்னை விட்டுத் தூரப் போய் இருந்தாலும் உன்னை மறந்திருக்கமாட்டார்.உன்னுடைய பாடசாலை பயணத்தில் உமா ஒரு இரயில் சிநேகிதி.அப்படியானவர்களுடன் நீயும் ஒரு இரயில் சிநேகிதியாக வாழக் கற்றுக்கொள்.எல்லோருடனும் சந்தோசமாகப் பழகு.உனக்கொரு உண்மையான நண்பி கிடையாமலா போய்விடும்."
பாட்டியின் புத்திமதி அக்காவைச் சாந்தப்படுத்தி இருக்க வேண்டும்.
"பாட்டிக்கு ஒரு மில்க்ரீ  போட்டுத்தாறேன்" என்று கூறியவாறே  அக்கா சமையலறைப் பக்கம் போய்க்கொண்டு இருந்தாள்.
பாட்டியும் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவுக்கு  நடந்ததை கூற தொலைபேசியின் பக்கம் கையை நீட்டினார்.

ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்

2 comments:

  1. நட் புக்கு நல்ல விளக்கம். நன்றி

    ReplyDelete