இதெல்லாம் காதலா? [ பறுவதம் பாட்டி]


அன்று சனிக்கிழமை அதிகாலை பாடசாலை இல்லையாகையால் படுக்கையினை விட்டு எழும்ப மனமில்லாமல் நான் படுத்திருந்தாலும் ''இந்த வயதிலும் பறுவதம் பாட்டியால் கொஞ்ச நேரம் படுத்திருக்க முடியாம எழும்பியிறாரே'' என்று எனக்குள் முணுமுணு த்துகொண்டேன்.
நேற்று நடந்த சம்பவம் பாட்டியை உலுக்கியிருக்க வேண்டும்.அதுதான் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவுடன் அந்த அதிகாலையிலேயே தொலைபேசியில் அச் சம்பவம் தொடர்பாக தன் நெஞ்சில் இருந்த பாரங்களைக் கொட்ட ஆரம்பித்து விட்டார் பாட்டி.

"நாடுவிட்டு நாடு வந்தும் எங்கடையள் திருந்தேல்லை!"

"என்ன பறுவதம் நடந்தது"அண்ணாமலைத் தாத்தாவின் அவசரம் அவர்
தொனியில் தெரிந்தது.

"பேத்தி நேற்று பள்ளிக் கூடத்தால வந்து அவளின்ர அறையில அழுதுகொண்டு இருந்தாள்."
"ஏன்?என்னவாம்?"

"ஆரோ பெடியன்ர  கரைச்சல் தாங்க முடியேல்லையாம்! மூண்டு நாலாப் பெரிய தொல்லையாம்."

"என்னத்திற்கு தொல்லை பண்ணிறானாம்?"

"அதையேன் கேட்கிறியள். பள்ளிக் கூடதால மற்ற பிள்ளையளோட வீட்டை வரேக்கை -பிள்ளையள் சிரிச்சுப் பேசிக்கொண்டு வார சகஜம் தானே.பாதையில கார்,சைக்கிள் எத்தினைவரும். அக்கம்,பக்கம் பார்க்கத்தானே வேணும்.அப்பிடிப் பார்க்கேக்கை இந்தத் தமிழ்த் தம்பியின்ரை முகத்திலையும் இவளின்ரை பார்வை சிரிச்ச முகத்தோட ஒரு செக்கண்டுமில்லையாம்,பட்டுப்போச்சுது."

"அதுக்கு என்னவாம்" ஆத்திரத்துடன் கேட்டார் அண்ணாமலைத் தாத்தா.

"இவள் தன்னைக் காதலிக்கிறாளாம்,பொய் சொல்லுறாளாம். பிறகேனடிஎன்னைப் பார்த்து சிரிச்சாயடி என்று ஏசுறானாம்."

"இதென்ன! அநியாயமாயெல்லொ இருக்குது"

"வேறென்ன,இந்தப் பிள்ளையள் தங்களுக்குள்ளை கதைக்கப் பேச இந்த நாட்டில சுதந்திரமில்லையோ?இந்த நாடு ஒவ்வொரு மனிசருக்கும் எவ்வளவு சுதந்திரத்தை அள்ளிக் குடுத்திருக்கு.எங்கட ஆக்களால தான் எங்களுக்கு பிரச்சனையாயிருக்கு."

"ஏன் பறுவதம் ஒருத்தன் தப்பு செய்தா எல்லாரையும் குற்றம் சொல்லுறாய்."

"வேற என்னங்கோ!இந்த நாட்டில எத்தனை நாட்டு இனங்கள் வாழுகினம்.ஒரு அலுவலகத்தில,பள்ளிக் கூடத்தில பல்வேறு நாட்டு சனமும் சந்தோசமாய் சிரிச்சுக் கதைச்சுப்  பழகினம். அதெல்லாம் காதலென்றா அர்த்தம். தாங்கள் அப்படிப் பழகினதையே  ஒரு சந்தோசமான பொழுதுகளாகவே நினைச்சுக்கொள்வினம். எங்கட ஆட்கள்  தற்செயலா பார்த்தாலே அதுக்கு காதல் எண்டு பெயர் வைச்சு  உபத்திரவம் குடுக்கவெல்லே வெளிக்கிடினம்."

''எங்கட சினிமாப் படங்களும் உதைத்தானே காதல் எண்டு சொல்லுது.நிஜ வாழ்க்கை பற்றி ஒரு சினிமாப்படங்களும் சொல்லாததால இந்தப் பொடியளும் சினிமாதான் கீதை எண்டு நினைச்சு நடக்கிறாங்கள்."

“சினிமாவின் கற்பனைக் குப்பைகளை விட்டிட்டு இந்த நாட்டில நடக்கிறதுகளை பார்த்து நடக்கலாமெல்லே. எல்லோரும் மனிசர்தான் ஒவ்வொருத்தனும் முதல்ல உணரவேணும்..அவர்களுக்கென்றோர் மனம்,ஆசைகள்,நோக்கங்கள்,கொள்கைகள் இருக்கலாம்.அவற்றினை மதிக்க அடுத்த இனத்திலிருந்தாவது கற்றுக்கொள்ளலாம் எல்லே!”

"ஓம்,வாயைத் திறந்தா இங்கிலிசாய் கதைக்கப் பழகின நாங்கள் அவங்களின்ரை நல்ல பழக்கங்களையும் பழகிக் கொள்ளலாமே!"

சரியாச் சொன்னியள்."என்று கதையினை முடித்துக்கொண்டார் பறுவதம் பாட்டி.

அம்மாவின் வழமையான அர்ச்சனை ஆராம்பிக்கவே, விடிந்து அதிக நேரமானதை உணர்ந்த நானும் எழுந்து காலைக் கடன் கழிக்கப் புறப்பட்டேன்.
ஆக்கம்:பேரன் செல்லத்துரை மனுவேந்தன்

0 comments:

Post a Comment