கல்லீரல்
புற்றுநோய்
என்றால்
என்ன,
அதன்
அறிகுறிகள்
என்ன,
அது
எவ்வளவு
ஆபத்தானது.
அவை
குறித்து
இங்கு
விரிவாகத்
தெரிந்து
கொள்வோம்.
கல்லீரல் என்றால் என்ன?
கல்லீரல், மனித உடலின் மிகவும் சிக்கலான உறுப்புகளில் ஒன்று. இது, ஐநூறுக்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. கொழுப்பு மற்றும் புரதத்தை செரிமானம் செய்வது, நச்சுகளை அகற்றுதல், பித்த சுரப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவது ஆகியவை கல்லீரலின் செயல்பாடுகளில் முக்கியமானவை.
புற்றுநோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது தனது வேலையைச் சரியாகச் செய்வது தடைபடும் என்பதுடன் கல்லீரலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.
கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய்களின் வகைகள்
முதன்மை கல்லீரல் புற்றுநோய்: முதன்மை கல்லீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.
ஹெபடோசெல்லுலர்
கார்சினோமா
(HCC) அல்லது
ஹெபடோமா: முதன்மைக் கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையாக அறியப்படும் ஹெபடோமா, கல்லீரலின் முக்கிய செல்களான ஹெபடோசைட்டுகளில் தொடங்குகிறது.
சோலாங்கியோகார்சினோமா: இது பித்தநாள புற்றுநோய் என்றும் அறியப்படுகிறது. சோலாங்கியோகார்சினோமா பித்த நாளங்களை உள்ளடக்கிய செல்களில் தொடங்குகிறது (இது கல்லீரலை குடல் மற்றும் பித்தப்பையுடன் இணைக்கிறது).
ஆஞ்சியோசர்கோமா: இந்த வகை முதன்மைக் கல்லீரல் புற்றுநோய் ரத்த நாளங்களில் ஏற்படுகிறது. இது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படக் கூடிய அரிய வகை கல்லீரல் புற்றுநோயாகும்.
இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்: இது உடலின் ஒரு பகுதியில் தொடங்கிய புற்றுநோய், பிறகு கல்லீரலுக்கு பரவுவது.
கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
இந்த நோய்க்கான
அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.
அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:
-விலா எலும்புகளுக்குக் கீழே வலது பக்கத்தில் கட்டி
-வயிற்றின் மேல் வலது பகுதியில் சங்கடம் ஏற்படுவது,
-வயிற்றில் வீக்கம்,
-வலது தோள்பட்டைக்கு அருகில் அல்லது பின்புறத்தில் வலி,
-மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல்),
-லேசாக அடிபட்டாலும் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படுதல்,
-வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது பலவீனமாக உணர்வது,
-குமட்டல் மற்றும் வாந்தி
-பசியின்மை அல்லது சிறிதளவு உணவு உண்டாலே வயிறு நிரம்பியதாக உணர்வது
-காரணமின்றி உடல் எடை இழப்பு
-வெளிர், நிறமற்ற மலம் மற்றும் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறுவது
-காய்ச்சல்
கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
-புற்றுநோய் கவுன்சில் இணையதளத்தின்படி, நீண்டகால தொற்றுநோயை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ்கள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்.
-கொழுப்பு கல்லீரல் அல்லது மரபணுக் கோளாறுகள், இதில் ஹீமோக்ரோமாடோசிஸ் அல்லது ஆல்ஃபா 1-ஆன்டிட்ரிப்சின் குறைபாடும் அடங்கும்
-டைப் 2 நீரிழிவு நோய்
-ஹெபடைடிஸ் பி அல்லது சி
-மது அருந்துதல்
-உடல் பருமன்
-புகைப் பிடித்தல்
-ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பு
கல்லீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
ஹெபடைடிஸ் பி-ஐ தடுக்கும் வழிகள்:
ஹெபடைடிஸ் பி ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது சிறப்பானது. பச்சிளம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுவது அவர்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தடுப்பூசி பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
-நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றுக்கு சிகிச்சை பெறுதல்: நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்று உள்ளவர்களுக்கு, இன்டர்ஃபெரான் மற்றும் நியூக்ளியோஸ்(டி)ஐடி அனலாக் சிகிச்சை ஆகியவை உதவும். இந்த சிகிச்சைகள் கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்.
அஃப்லாடாக்சின் பி1-ஐ குறைத்தல்: அஃப்லாடாக்சின் பி1 அதிகமாக உள்ள உணவுகளைக் குறைத்து, அஃப்லாடாக்சின் பி1 குறைவாக உள்ள உணவுகளை உண்பது, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
சாத்தியமான சிகிச்சைகள்
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல சிகிச்சைகள் உள்ளன.
கண்காணிப்பு: பரிசோதனையின்போது, ஒருவருக்கு இருக்கும் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான புண்கள் கண்காணிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து சோதனைகளைச் செய்துகொள்வது அவசியம். கண்காணிப்பு கட்டத்தில் எந்தவித சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, ஆனால் புண்ணின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, அதாவது, நிலை முன்பைவிட மோசமடைந்துள்ளதா என்பது கவனமாக அவதானிக்கப்படுகிறது. அதன் நிலை அடுத்த கட்டத்திற்குச் சென்ற பின்னரே சிகிச்சை தொடங்கப்படும்.
அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சையில், புற்றுநோய் காணப்படும் கல்லீரலின் பகுதி அகற்றப்படுகிறது. கல்லீரலை மீண்டும் உருவாக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டால், அது மீண்டும் வளர்ந்து தனது செயல்பாட்டைத் தொடரும்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சிலருக்கு முழு கல்லீரலும் அகற்றப்பட வேண்டியிருக்கும். அந்தச் சூழலில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சையில், முழு கல்லீரலும் அகற்றப்பட்டு, தானமாகப் பெறப்பட்ட ஆரோக்கியமான கல்லீரல் மாற்றப்படுகிறது. இதில், புற்றுநோய் கல்லீரலுக்கு மட்டுமே பரவி பிற உறுப்புகளுக்குப் பரவாதபோது மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும், மற்றொரு நபரிடம் இருந்து கல்லீரலை தானமாகப் பெறுவது எளிதானது அல்ல.
நீக்குதல் சிகிச்சை (Ablation therapy): புற்றுநோய் பகுதியை நீக்கவோ அல்லது அழிக்கவோ நீக்குதல் சிகிச்சை பயன்படுகிறது. கல்லீரல் புற்றுநோய்க்குப் பல்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
எம்போலைசேஷன் சிகிச்சை: அறுவை சிகிச்சை செய்தோ அல்லது நீக்குதல் சிகிச்சையை (Ablation therapy) செய்தோ புற்றுநோய்க் கட்டியை அகற்ற முடியாதவர்களுக்கும், கல்லீரலுக்கு அப்பால் கட்டி பரவாதவர்களுக்கும் பயன்படுத்தப்படுவது எம்போலைசேஷன் சிகிச்சை. புற்றுநோய்க் கட்டிக்கு, ரத்த ஓட்டம் செல்வதை நிறுத்துவது அல்லது குறைப்பதை உள்ளடக்கிய சிகிச்சை இது. கட்டிக்குப் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்லாதபோது அதன் வளர்ச்சி குறைகிறது.
டார்கெட் தெரபி: இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை என்பது குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை அழிக்க, மருந்துகள் அல்லது பிற பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சிகிச்சை.
நோய் எதிர்ப்பு சிகிச்சை: புற்றுநோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் வழிமுறைக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை என்று பெயர். உடலில் உருவாக்கப்படும் அல்லது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.
கதிர்வீச்சு சிகிச்சை: இது, உடலின் புற்றுநோய் பகுதிக்கு உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் அல்லது பிற வகையான கதிர்வீச்சை அனுப்பி புற்றுநோயைக் குணப்படுத்துவதும் சிகிச்சை முறை. இந்தச் செயல்முறை பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.
பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், கல்லீரல் புற்றுநோயை எந்த அளவுக்கு குணப்படுத்த முடியும் என்பது, புற்றுநோயின் நிலை மற்றும் அது எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.
நன்றி: //பிபிசி தமிழ்//
0 comments:
Post a Comment