அறிவியல்=விஞ்ஞானம்
𝓚உயர் ரத்த
அழுத்தம் குறைய
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடனே, உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், இதைவிடச் சிறந்த தீர்வு உணவில் பொட்டாசியத்தை அதிகப்படுத்துதல் என்கிறது சமீபத்திய ஆய்வு.
நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகமாக இருக்கிறது. உடலுக்கு சோடியம் இன்றியமையாதது. ஆனால் அதுவே அதிகமாகும்போது, அதைச் சமன்படுத்த உடல் அதிகமான தண்ணீரைக் கேட்கும். அதிகமாகத் தண்ணீர் பருகும்போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத்திற்கு வேலைப் பளு கூடுகிறது. இதனால் பல மரணங்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக அமைந்து விடுகிறது.
சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள வாட்டர்லுா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பதால் ரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களுக்கும் இதயத்திற்கும் மிகவும் நல்லது. அதேபோல அளவுக்கு அதிகமான சோடியதைச் சிறுநீர் வழியாக வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவி செய்கிறது. எனவே பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கக்கூடிய வாழைப்பழம், ஆப்பிரிகாட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ப்ரோக்கோலி முதலியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
🖌கிருமிகளைக்
கொல்லும் பூச்சு
மருத்துவமனையில், நோய், ஒரு
நோயாளியிடமிருந்து மற்றவருக்குச் சுலபமாக பரவும். அதனால்தான் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு
பொருளும் கையாளப்படுகிறது. இருந்தாலும் மருத்துவமனை சுவர், கட்டில், கதவு கைப்பிடி
ஆகியவற்றில் தொற்றுநோய்க் கிருமிகள் வாழ்ந்துகொண்டே இருக்கும். அப்படி தங்காமல் இருப்பதற்காக,
அவற்றின் மீது சிலவிதமான பூச்சுகள் பூசப்படுகின்றன.
இந்தப் பூச்சுகளில் பெரும்பாலும்
தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்கள் கலந்திருக்கும். இந்த உலோகப் பூச்சுகளின் மீது
கிருமிகள் அதிக நேரம் தங்காது என்றாலும் இவற்றைத் தயாரிக்க அதிக செலவு பிடிக்கும்.
எனவே குறைந்த செலவில் கிருமிகள் அழிக்கும் வழியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹம் பல்கலை ஒரு புதிய பூச்சைக் கண்டுபிடித்துள்ளது. இதில் குளோரெக்சிடைன் டைகுளுக்கோனேட் (சி.ஹெச்.எக்ஸ்) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள் உள்ளன. இதை மருத்துவமனை சுவர், கதவு, கைப்பிடிகள் என எதிலும் பூச முடியும். இதைச் சோதித்துப் பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்தன.
மருத்துவமனைகளில் பரவும் கிருமிகளான ஈகோலை முதலிய பாக்டீரியா உள்ள கலவையை இந்தப் பூச்சு மீது விஞ்ஞானிகள் தெளித்துப் பார்த்தார்கள். இந்தப்பூச்சிலிருந்து உற்பத்தியான ரியாக்டிவ் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கிருமிகளின் செல் சுவர்களை உடைத்து அவற்றை அழித்தன.
சாதாரணமான இரும்புப் பொருட்களில் ஈகோலை பாக்டீரியாவால் நான்கு வாரங்கள் வாழ முடியும். ஆனால் இந்தப் பூச்சு மீது 8 மணி நேரம் கூட அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே கிருமிகளைக் கொல்கின்ற இந்தப் பூச்சுகள் விரைவில் எல்லா இடங்களிலும் குறிப்பாக மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
🦭ஆபத்தில் உயிரினங்கள்
சுற்றுச்சூழல் மாசுபாட்டால்
கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் பவளப் பாறைகள் வேகமாக அழிகின்றன. இதனால்
பவளப் பாறைகளை நம்பி வாழும் 25 சதவீத கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
🕋கிருமிகளைக்
கொல்லும் டப்பா
உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள்
கெடாமல் இருப்பதற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். குளிர்சாதனப் பெட்டி,
குறிப்பிட்ட நாட்கள் வரை தான் உணவைப் பாதுகாக்கும். தவிர உணவில் உள்ள கிருமிகளை அது
கொல்லாது. உணவில் உள்ள ஆபத்தான கிருமிகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை
ஏற்படுத்தும். எனவே கிருமிகளைக் கொன்று உணவுப் பொருட்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்
சாதனத்தை சிங்கப்பூரில் உள்ள நான்யாங் பல்கலை வடிவமைத்துள்ளது.
இந்தச் சாதனத்தில் இரண்டு
பகுதிகள் உள்ளன. ஒன்று உணவு எடுத்துச் செல்லும் டப்பா போல் இருக்கும். இதனுடன் ஒரு
சிறிய கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதிலிருந்து புற ஊதா கதிர்கள் உற்பத்தியாகும்.
பொதுவாகப் புற ஊதாக் கதிர்களை உற்பத்தி செய்யும் விளக்குகளில் பாதரசம் இருக்கும். இது
நச்சுத்தன்மை கொண்டது. கெடுவாய்ப்பாக, இந்தப் பாதரசம் உணவில் பட்டுவிட்டால் அது விஷமாகிவிடும்.
அதனால் பாதரசத்தைப் பயன்படுத்தாமல் புற ஊதா கதிர்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இதில் பயன்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்தக் கருவியில் உணவுகளை வைத்துப் பார்த்தார்கள். புற ஊதாக் கதிர்கள் 'சூடோமோனாஸ் ஏருஜினோசா,' 'எஸ்கெரிச்சியா கோலை,' 'லெஜியோனெல்லா நிமோபிலா' முதலிய பாக்டீரியாக்களை கொன்றுவிட்டன.
இந்தப் புற ஊதா விளக்கு பேட்டரியில் இயங்கும். பேட்டரியை ஒரு முறை முழுதாக சார்ஜ் செய்துவிட்டால் 20 முறை பயன்படுத்த முடியும். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கூட சில பழங்கள், காய்கறிகள் சில நாட்களுக்கு மேல் தங்காது, அழுகிவிடும்.
ஆனால் இந்த டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை எளிதில் கெடாது. உதாரணமாகத் தக்காளி ஏழு நாட்களும், பன் 22 நாட்களும், ப்ளூபெர்ரி 28 நாட்களும் கெடாமல் இருந்தன. தற்போது சந்தைக்கு வந்துள்ள இந்தச் சாதனம் 79 யூரோவுக்கு விற்கப்படுகிறது.
📘மாரடைப்பை
கண்டறி
அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்சிசிபி
பல்கலை ஆய்வாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிகிற கருவியை வடிவமைத்துள்ளனர். சிப்
வடிவில் உள்ள இதைக் கை கடிகாரம் முதலியவற்றில் அணிந்து கொள்ளலாம். 92.4 சதவீதம் துல்லியத்துடன்
மாரடைப்பைக் கண்டறிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
🌳சாப்பிடுவது
நல்லது
பெரும் நோய்கள் ஏற்பட்டு
மீண்டு வருபவர்கள் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள்
உட்கொண்ட ஆன்ட்டிபயாட்டிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்திருக்கும்.
எனவே நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் மற்ற விதமான உணவுகளை விட, குடல் நுண்ணுயிர்களுக்கு
அதிக நன்மை செய்கின்ற தாவர அடிப்படையிலான உணவைச் சாப்பிடுவது நல்லது என்று ஆய்வாளர்கள்
கூறியுள்ளார்கள்.
👀விழித்திரை
பாதிப்பு
ரத்தத்தில் சர்க்கரை அளவு
அதிகமாகும் போது அது விழித்திரையைப் பாதித்து பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். சமீபத்திய
ஆய்வு ஒன்றில், ரத்த சர்க்கரை குறைந்தாலும் விழித்திரை பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
🍋மருந்தாகும்
சாறு
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான உணவு கவனம் பெறுகிறது. குறிப்பாக இயற்கையான காய்கறி, பழங்களில் உள்ள மருத்துவ குணங்கள் கண்டறியப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 'டார்ட் செர்ரி' எனும் ஒரு பழம் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பேக்கரி பொருட்களில் மட்டுமே பயன்பட்டு வந்த இந்த பழம் தற்போது மருந்தாகவும் பயன்படுகிறது. முதன்முதலாக 2011ம் ஆண்டு இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2023ம் ஆண்டு இது துாக்கமின்மையை சரி செய்வதாகக் கண்டறியப்பட்டது.
இந்த பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது நல்ல துாக்கத்திற்கு அவசியமானது. அதேபோல இதில் உள்ள ட்ரைப்டோஃபான் எனும் ஒருவித அமினோ அமிலம் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த பழத்தின் சாற்றை மருந்துக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது, அதே நேரத்தில் மருந்துடன் சேர்த்து எடுத்து கொண்டால் விரைவில் குணமடையலாம் என்கின்றனர்.
இந்த பழச்சாற்றை எந்த வடிவில், எவ்வளவு உட்கொண்டால் முழுப் பயனை பெற முடியும் என்று ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment