சித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19சிவவாக்கியம்-167

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள்.  இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.

******************************************* 

சிவவாக்கியம்-171 

தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!


மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்துதுன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-172

ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே!!

நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் மா என்ன மாயமே ஈசனே!! 


************.அன்புடன் கே எம் தர்மா. 

0 comments:

Post a Comment