சித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20

 

சிவவாக்கியம்-186


கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!!!

கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது அறிவை  வளர்க்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லும்  மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம். 

****************************************** 
சிவவாக்கிய
ம்-188


மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆச்சிரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர், கலவி இன்பத்தில் பெண்ணில்  கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.  
******************************************* 

சிவவாக்கியம்-189


உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.

மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள். 

 

**********************அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment