அதென்னங்க (DNA) டி என் ஏ? [பகுதி - 1]

இந்த யுகம் அறிவியல் யுகம். சில பல ஆண்டுகளுக்கு முன்னால் நம்பிக்கை சார்ந்து நம் வாழ்க்கை இருந்தது. குழந்தைகளோ மற்றோரோ பெரிய கேள்விகளெல்லாம் கேட்டுவிடவில்லை, இது ஏன் இப்படி? என்றால், அது அப்படித்தான் என்று பதில் சொல்லப்பட்டது.

 இன்றோ நிலைமை வேறு. ஆதாரம் இல்லாது எதுவும் சொல்வதற்கில்லை. ஒரு தவறான கருத்தினை வலியுறுத்த வேண்டுமென்றாலும் அதற்கு சரியான அறிவியல் ஆதாரம் வேண்டும் (அரசியலுக்கு இது பொருந்தாது). எங்கு பார்த்தாலும் கணினி மயம், தகவல் தொழில்நுட்பம் விடயங்களை நம்மிடம் கொட்டிக்கிடக்கின்றன ஆனால் சரியானது எது, தவறானது எது என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும். சரி விஷயத்துக்கு வருகிறேன், மரபணு மாற்றப்பயிர்கள், மரபணு தொழில் நுட்பம், மரபணு மாற்ற சிகிச்சை என அதாவது ஒரு வழிகளில் நாம் மரபணு பற்றி தெரிந்திருப்போம். அதென்னது மரபணு??? மரபணு மாற்றப் பயிரோ மற்றையது சரியென்றோ தவறென்றோ நான் விளக்க விரும்பவில்லை, மரபணு என்றால் என்ன எனும் ஒரு பாமரக் கட்டுரை இது. மரபணு எனும் ஒரு மூலக்கூறு அறிவியலின் தடத்தினையே மாற்றியென்றால் பாருங்கள்!!! சென்ற நூற்றாண்டில் 1962 ற்கு பிறகு மரபணு ஆராய்ச்சி மிகப்பெரும் புரட்சியை செய்தது. இன்றளவும் மரபணு ஆராய்ச்சிகள் பல்வேறு தளங்களில் நடைபெறுகின்றன. இந்த கட்டுரையின் நோக்கம் மரபணு என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எப்படி இயங்கும் என பலருக்கும் புரியும் வண்ணம் தகவல்களை தொகுத்து வழங்குவதே. இன்னும் நுட்பமாக பார்க்கவேண்டுமென்றால் நம்முடைய ஆதாரமே மரபணுக்கள் தாம்.

நாம் உயிர் வாழ இந்த உடல் தேவை, இந்த உடல் சரியாக இயங்க உறுப்புகள் தேவை, இந்த உறுப்புகள் உருவாக செல்கள் தேவை. இந்த செல்கள் எப்படி செயல்படுகின்றன? உயிரியல் அடிப்படையில் ஒரு செல் செயல்பாடு என்பதே மிகப்பெரும் விஷயம். இன்னும் உலகமெங்கும் உள்ள உயிரியலாளர்கள் செல் செயல்பாட்டினை பற்றி ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிறிய செல் செயல்பாட்டினை உணர்த்துக்கொள்ளவே இந்த வாழ்வு போதாது என்றால் அது மிகையாகாது. இந்த செல் செயல்பாடு மிகுந்த கட்டுப்பாடுடையது. இதயத்தினுடைய செல் செயல்பாடும் மூளை செல் செயல்பாடும் வெவ்வேறானவை. எப்படி ஒரு இதய செல் சரியாக தன் செயலினை செய்கிறது, இதன் கட்டுப்பாட்டில் இது இயங்குகிறது, இதற்கு கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன என்றால், அதற்கு பதில் தான் நமது டி. என். ஏ. (DNA). டீயாக்சி ரைபோ நியூகிளிக் (அசிட்)அமிலம் என்பதன் சுருக்கமே டி. என். ஏ. அடிப்படையில், டி. என். ஏ. என்பது ஒரு மூலக்கூறு, அவ்வளவே. மூலக்கூறு என்றால் என்ன??? அறிவியல் துறை அல்லாதவர்கள் கேட்கலாம். atom என்பதினை அணு என அழைக்கிறோம். ஒரு பருப்பொருளின் (matter) மிக நுண்ணிய வடிவமே அணு. நாமெல்லாம் பலகோடி அணுக்களின் தொகுப்பே! ஆக்சிஜென் என்னும் வாயுவினை O2 என அறிவியலில் குறிப்பார்கள், O என்பது ஆக்சிஜென் அணு, இந்த அணு ப்ரோட்டான், எலெக்ட்ரோன், நியூட்ரான் எனும் நுண் பகுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக, ஆக்சிஜென் அணு தனித்திருக்காது, அது வேறொன்றுடன் சேர்ந்து வினையாற்ற இன்னொரு அணுவுடன் இணைய வேண்டும், மேலே O2 என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா, அதுதான் மூலக்கூறு, ஒரு மூலக்கூறு என்றால் அணுக்களின் தேர்ந்த தொகுப்பு. ஒரு ஆக்சிஜென் அணு இன்னொரு ஆக்சிஜன் அணுவுடன் சேரும்போது அது ஒரு ஆக்சிஜென் மூலக்கூறு ஆகிறது. ஒரு ஆக்சிஜென் மூலக்கூறுடன் இரு ஹைட்ரஜன் அணு சேரும் போது (H2O) அது ஒரு நீர் மூலக்கூறு ஆகிறது. நீர் என்பது ஒரு மூலக்கூறு. இருவேறு அணுக்களின் தேர்ந்த தொகுப்பு. H2O என்பது நீர், H2O2 என்பது??? இது ஹைட்ரஜன் பெராக்ஸைடு எனும் வேதிப்பொருள் மூலக்கூறு. இது ஒரு தூய்மைப்படுத்த பயன்படும் ஒரு திரவம் (bleaching agent), இதனை நாம் பருக முடியாது, ஆனால் இதற்கும் நீருக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒன்றுமில்லை ஒரு ஆக்சிஜென் அணு சேர்ந்து வந்துள்ளது அவ்வளவே. இதை என் முன்னமே சொல்கிறேன் என்றால், ஒரு அணு மாறினாலும் மூலக்கூறும் மாறிவிடும், பின்பு அதன் தன்மையும் மாறிவிடும். இப்போது புரிகிறதா டி. என். ஏ. என்பது ஒரு மூலக்கூறு என்று. சரி டி. என். ஏ. ஒரு மூலக்கூறு என்றால், என்னென்ன அணுக்கள் அதில் இருக்கும்? தண்ணீர் என்பது H2O மூலக்கூறு, இதில் மொத்தம் மூன்று அணுக்கள் தாம் உள்ளன, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜென் அணு. ஆனால் டி. என். ஏ. மூலக்கூறு சற்று சிக்கலானது. டி. என். ஏ. வில் உள்ள அணுக்களை காட்டிலும், அதனின் மூலக்கூறுகளை பற்றி கூறுவதே முறைமை. டி. என். ஏ. மூன்று வேறு மூலக்கூறுகளால் ஆனது, அவையாவன ஒரு சர்க்கரை மூலக்கூறு, பாஸ்பேட் (phosphate) மூலக்கூறு மற்றும் ஒரு நைட்ரோஜென் சார்ந்த மூலக்கூறுகள் அடங்கியதே டி. என். ஏ. சர்க்கரை என்றால் நாம் சாப்பிடும் சர்க்கரை என நீங்கள் நினைக்கக்கூடும், நாம் சாப்பிடும் சர்க்கரையும் ஒரு மூலக்கூறே. சாதாரணமாக நாம் சாப்பிடும் சர்க்கரை சுக்ரோஸ் (sucrose) எனும் மூலக்கூறால் ஆனது. இந்த சுக்ரோஸ் எனும் மூலக்கூறு குளுக்கோஸ் (Glucose) மற்றும் ப்ரெக்டொஸ் (Fructose) எனும் இருவேறு மூலக்கூறுகளால் ஆனது. குளுக்கோஸ் என்பது நாம் சாப்பிடும் குளுக்கோஸ் தான். அதுவும் ஒரு மூலக்கூறே. 

ஏன் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறான் என்று தோன்றுகிறதல்லவா? சம்பந்தம் உள்ளது நண்பர்களே, பொதுவாக குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ் (Lactose) போன்றவைகள் எல்லாம் சர்க்கரை மூலக்கூறுகள். சர்க்கரை என்றால் சாப்பிடும் சர்க்கரை மட்டும் அல்ல, பலவகையான சர்க்கரை மூலக்கூறுகள் இயற்கையில் உள்ளன. இந்த சர்க்கரை மூலக்கூறுகளில் உள்ள வேறுபாடுகள் அவற்றில் உள்ள மற்றைய சர்க்கரை மூலக்கூறுகளையும், அவற்றில் உள்ள கார்பன் (carbon) அணுக்களையும் வைத்து தான் அணுகப்படுகிறது. குளுக்கோஸ் என்னும் சர்க்கரை மூலக்கூறு 6 கார்பன் அணுக்களைக் கொண்டது. பொதுவாக சர்க்கரை மூலக்கூறுகளில் எல்லாம் கார்போன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிகன் அணுக்களின் தொகுப்பேயாகும். டி. என். ஏ. வில் உள்ள சர்க்கரை மூலக்கூறானது ரைபோஸ் (ribose) என்பதாகும். இந்த ரைபோஸ் சர்க்கரை மூலக்கூறானது 5 கார்பன் அணுக்களைக் கொண்டிருக்கும். இன்றைக்கு டி. என். ஏ.வின் ஒரு மூலக்கூறான ரிபோஸ் பற்றியும்மேலும் அதற்கு ஆதாரமான தகவல்களையும் கண்டோம், அடுத்தடுத்த டி. என். ஏ. சார்ந்த தகவல்களை எனது அடுத்த பதிவில் பகிர்கிறேன் நண்பர்களே.

வேண்டுகோள்: நான் தற்போது அறிவியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்து வருகிறேன், பொதுவாக பல அறிவியல் சார்ந்த தகவல்கள் சரியாக மக்களை சேருவதில்லை எனும் ஏக்கம் எனக்குண்டு. அறிவியலை எளிமைப்படுத்தி தமிழில் சொல்ல எத்தனிக்கும் முயற்சிகள் மிகச்சொற்பமே. இதற்கு முன்பொருமுறையும் கூட கிருமி கிருமி கிருமி என மூன்று கட்டுரைகளை பதிவிட்டிருந்தேன். இந்த பதிவின் நோக்கம் அறிவியலை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தவே. தங்கள் மேலான கருத்துக்கள் என் எழுத்தையும், இனிவரும் காலங்களில் எழுதவிருக்கும் பல விடயங்களையும் ஆற்றுப்படுத்தும் என நம்புகிறேன். நன்றி... நன்றி... நன்றி!!!

[அறிவியல்]எழுதியவர் : சௌந்தர்-நன்றி 

(பகுதி -2 முடிவு எதிர்வரும் சனிக்கிழமை தொடரும்)


0 comments:

Post a Comment