குருதிச்சோகை நோயும் வைத்தியமும்


மதுஷிகா, பதுளை

கேள்வி:- குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?

பதில் :- குருதிச்சோகை ஏற்படுவதற்கு காரணங்கள் பல. குருதிச்சோகை நிச்சயமாகக் குணப்படுத்தக் கூடியதே. அது ஏற்பட்ட காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும்.

 

குருதியில் ஏற்படும் நோய்களை எடுத்;துக் கொண்டால் குருதிச் சோகை தான் மிகவும் அதிகமாகக் காணப்படும் நோயாகும். வறுமை மற்றும் போசாக்கிமைதான் இது ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

 

இருந்த போதும் வேறு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பின்னாடி பார்க்கலாம்.

 

குருதிச் சோகை என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

குருதிச் சோகை என்பது ஒருவரது இரத்தத்தின் செறிவு குறைவதாகும். எமது குருதிப் பாயத்தினுள் பல வகையான கலங்கள் உள்ளன. அதில் செங்குருதிக் கலமும் ஒன்று. இரத்தத்தின் செந்நிறத்திற்குக் காரணமாக இருப்பது இந்த செங்குருதிக் கலங்களேயாகும்.

 

இக் கலங்களின் உள்ளே ஹீமொகுளோபின்(Hb) என்ற புரதம் உள்ளது. ஹீமொகுளோபின் ஆனது இரும்புக் கனியத்தை பிரதானமாகக் கொண்டுள்ளது. குருதியில் செங்குருதிக் கலங்களின் எண்ணிக்கை குறைவது அல்லது அதிலுள்ள ஹீமொகுளோபினின் செறிவு குறைவதாலேயே இரத்த சோகை எற்படுகிறது.

 

இது ஏன் எற்படுகிறது என்ற நோக்கினால் வறுமைப்பட்ட நாடுகளில் போசாக்கற்ற உணவினால் குருதி உற்பத்திக்கு தேவையான இரும்புச் சத்து மற்றும் விற்றமின்கள் கிடைக்காமையே முக்கிய காரணமாகும்.

 

ஆயினும் வளரச்சியடைந்த நாடுகளிலும் இது ஏற்படுதற்கு காரணம் வறுமையல்ல. தவாறன உணவுப் பழக்கம் ஆகும். காய்கறி பழவகைகள் மீன் போன்றவற்றை உட்கொள்ளாது நொறுக்குத் தீனிகளால் வயிற்றை நிரப்புவதாலேயே அவர்களுக்கு இந் நோய் எற்படுகிறது.

 

பசிய இலை கீரை வகைகள், பருப்பு பயறு, சோயா பீன்ஜ், இறைச்சி மீன் ஈரல், போன்றவற்றை போதியளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

 

குருதி இழப்பு

குருதிச் சோகைக்கு மற்றொரு முக்கிய காரணம் குருதி இழப்பாகும். நாளாந்தம் நடக்கும் பல குறைந்தளவான குருதி இழப்புகள் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை.  ஆனால் நீண்ட நாட்களாக தொடரும் குறைந்த அளவான குருதி இழப்பு படிப்படியாக இரத்தசோகையை ஏற்படுத்தும்.

உதாரணமாக மூலநோய் காரணமாக சிலருக்கு நாளந்தம்; அல்லது அடிக்கடி குருதி மலத்துடன் வெளியேறக் கூடும். குறைந்த அளவில் வெளியேறும்போது பலருக்கு அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் நாளடைவில் இரத்தசோகையை ஏற்படுத்தும்.

 

இதே போல, குடற் புண் உள்ளவர்களுக்கும் எமது கண்களுக்குப் புலப்படாது சிறிய அளவில் தினசரி குருதி வெளியேறுவதால் காலப் போக்கில் இரத்த சோகை ஏற்படும்.

 

சிலர் வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கின்றனர். வேறு சிலர் மிகக் கடுமையான அளவுகளில் உபயோகின்றனர். இதுவும் அவ்வாறே வெளித் தெரியாத குருதிப் பொசிவை இரைப்பையில் ஏற்படுத்துகின்றன.

 

இரைப்பை பெருங்குடல் போன்ற உணவுக் கால்வாயில் ஏற்படும் சில புற்றுநோய்களை ஆரம்ப நிலையயில் கண்டறிவது கஸ்டம். ஆனால் அவையும் குருதி இழப்பையும் அதன் காரணமாக இரத்தசோகையையும் கொண்டுவரும்.

 

பெண்களைப் பொறுத்தவரையில் இரண்டு இயற்கையான நிகழ்வுகளின் போது சில தருணங்களில் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டு இரத்த சோகை வரலாம். மாதவிடாய் மகப் பேறு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன்.

 

அதே போல வீதி விபத்துகளின் போதும் சில சத்திரசிகிச்சைகளின் போதும் குருதி இழப்பு எதிர்பாரத விதமாக அதிகமாக இருக்கலாம்.

 

செங்கலச் சிதைவு

குருதி வெளிப்படையாக வெளியேறாத போதும் செங்குருதிக் கலங்கள் கருதிச் சுற்றோட்டத் தொகுதியில் சிதைவடைவதாலும் குருதிச் சோகை ஏற்பட வாய்ப்பு உண்டு. செங்குதிக் கலங்களின் வாழ்நாள் நுமார் 110 முதல் 120 நாட்கள் வரையே ஆகும். நாளாந்தம் முதிய செங்குருதிக் கலங்கள் சிதைவடைய புதிய கலங்களை எமது உடல் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.

 

சில தெற்றுநோய்கள், மருந்துகள், சிறுநீரக நோய்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் செங்குருதிக் கலங்களை காலத்திற்கு முன்னரே சிதவடையச் செய்துவிடலாம்.

 

Sickle cell anaemia என்று ஒரு நோய் இருக்கிறது. இந்த நோயுள்ளவர்களின் செங்குருதிக் கலங்கள் தமது வழமையான வடிவில் இருக்காது. பிறைவடிவிலேயே இருக்கும்.அதன் காரணமாக அவை வழமையை விட சீக்கிரமாகச் சிதைவடைந்து வடும். ஆதனால் குருதிச் சோகை ஏற்படும்.

 

இன்னும் சில காரணங்கள்

உணவில் போதிய அளவு இரும்புச் சத்து மற்று விற்றமின் B12 போன்றவற்றை எடுக்காமல் இருப்பதாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. பலு மூதாட்களின் இரத்தசோகைக்கு போசக்கற்ற உணவை உட்கொள்வதே காரணம் என்று கண்டறிந்துள்ளார்கள்.

 

புகைத்தலும் மிகவும் மெலிவான உடலைக் கொண்டவர்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதை காணக் கூடியதாக இருக்கிறது.

 

HIV, ரூமற்ரொயிட் வாதம்,  நாட்பட்ட சிறநீரக செயலிழப்பு நிலை, மலேரியா, குறொன்ஸ் டிசீஸ் (Crohn’s disease)  போன்ற பல்வேறு நோய்களின் போதும் இரத்த சோகை ஏற்படுகிறது.

 

இவ்வளவு சொல்லியதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியது என்ன?

 

இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பல. எனவே காரணத்தைக் கண்டறிய வேண்டும். காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை செய்தால் இரத்த சோகையை குணப்படுத்தலாம் என்பதே ஆகும். வெறுமனே இரும்புச் சத்துக் குளிசைகளை உட்கொள்வதால் இதைக் குணப்படுத்த முடியாது.

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0 comments:

Post a Comment