[பகுதி:02]-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-

"மரணம் என்றால் உண்மையில் என்ன?"

மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது. பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித்தான் நகர்கிறது. எதிர்காலத்தில், அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டும் மென்று ஆசைப் படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப்போவது மரணம் மட்டுமே! அது மட்டுமல்ல, அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.

 

2000 ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, "நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும் அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே பல வார காலம் கடும் நோய்வாய்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் 24 , 2011 இயற்கை எய்தினார். கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே தன் 'இறப்பு' அல்லது அவர் பாணியில் 'அவதாரத்தை முடித்துக் கொள்ளும் நாள்தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடவுளின் அவதாரம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிய அவர் ஏன் இந்த உலகை விட்டு மறையப்போகிறோம் என்பதை முன் கூட்டியே சரியாக கூற முடியவில்லை? மற்றும் வேடிக்கை என்னவென்றால், அவரது கை பட்டு மற்றவரின் நோய் தீர்க்க தெரிந்த அவருக்கு அவரது உடல்நலம் பேண நவீன மருத்துவ வசதி தான் வேண்டியிருந்தது என்பதே ? எனவே, உண்மையில் இறப்பு என்றால் என்ன?

 

மூச்சு நிற்பது இறப்பா ? இல்லை, இதயத் துடிப்பு நிற்பது இறப்பா ? இல்லை, மூளை சிந்திக்காமல் நிற்பது இறப்பா ? இல்லை, இரத்த ஓட்டம் நிற்பது இறப்பா ? இல்லை, மேற்கூறியவற்றில் ஏதாவது, ஒன்றுக்கு மேற்பட்டவை நிற்பது இறப்பா ? அல்லது எல்லாமே நிற்பது இறப்பா ? இல்லை, இவற்றை விட வேறு பல காரணங்கள் இருக்கின்றனவா? பொதுவாக இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை, சாதாரண மக்களாகிய‌ நாம், மரண‌‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?

 

மருத்துவ அறிவியலின் படி, மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அதை நாம் "மருத்துவச் சாவு" (Cardiac death / Clinical death) என்றும், "மூளைச் சாவு"(brain death / Cerebral death) என்றும் குறிப்பிடுகின்றோம்.

 

மருத்துவச் சாவுக்கும் [கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும் [செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே. உண்மையில், ஒரு சில முக்கியமான, தீர்மானிக்கிற நிமிடங்களே இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் ஆகும். மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இக் கால வரம்பிற்குப் பிறகு, ஆக்ஸிஜன் [பிராணவாயு] பற்றாக் குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது. இதையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இ‌ப்போது தா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

 

சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் சராசரியாக 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும் [biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான் என நாம் நம்பலாம்.

 

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் [Encyclopedia Britannica] முதல் பதிப்பில் இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மனித உடலைப் பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால், பதினைந்து பதிப்பின் பின், அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளி அடையாளங்களான மூச்சு விடுதல், இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும், இன்னும் அந்த நபர் சாகாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள். செயற்கை இதயம் [mechanical heart], சுவாசிபதற்கான கருவி [breathing aids] மற்றும் நரம்பு வழி உணவு செலுத்துதல் [intravenous feedings] போன்றவற்றால், மருத்துவர் ஒருவர் நோயாளியை, அவர் ஆழமான எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலையில் [deep coma] இருந்தாலும், அவரை பல மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர் உடன் வைத்திருக்க முடியும் என்பதால். இன்று, இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு மேலும் சில சேர்க்க வேண்டி உள்ளன.எனவே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மரணம் என்பதற்கு எம்மால் ஒரு விளக்கம் கட்டாயம் இன்று கொடுக்க முடியும். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இறந்த பின் எமக்கு என்ன நடக்கிறது? மற்றும் எம்மை விட்டு பிரிந்த அன்பு உயிர்களை, நாம் மீண்டும் காண, சந்திக்க முடியுமா? உதாரணமாக, ஆன்மீக நூலான பகவத் கீதை என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். 

 

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥

तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

dehino ’smin yathā dehe kaumāraṁ yauvanaṁ jarā

tathā dehāntara-prāptir dhīras tatra na muhyati

 

"ஆத்மாவிற்கு இவ்வுடலில் எங்ஙனம் குழந்தைப் பருவமும், இளமை பருவமும், முதுமை பருவமும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே, ஆத்மாவிற்கு மற்றொரு உடல் பிறப்பும் இந்த உடல் இறந்த பின் தோன்றுகிறது. எனவே, தீரன் [வீரன்] அதில் கலங்கமாட்டான்"

 

என்று பகவத் கீதை 2.13 அறிவுரை கூறுகிறது. அதாவது, உடல் எப்படி மாறி மாறி வந்தாலும், இந்த மூன்று நிலைகளிலும் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ, அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை என்கிறது.

 

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।

तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha

tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi

 

"பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரண மடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது."

 

என்று பகவத் கீதை 2.27 மீண்டும் அறிவுரை கூறுகிறது. ஆகவே, இறப்பு ஒரு துக்கம் தரும் நிகழ்வு அல்ல. இது எமது இந்த உடலின் பயணத்தின் முடிவு ஆகும். இது ஒரு மாயை, அவ்வளவுதான். பொதுவாக, மரணத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன், ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன், எதற்கு மரணம் இருக்கிறது?", "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?", "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 03 "மதமும் மரணமும்" தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 👉  Theebam.com: [பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-:


1 comments:

  1. A lovely artical,Want to hear from you,What will happen after death, What is happinning to the good and bad we are doing,either perposely or without knowing, Is there is diffent of actions to these. Good waiting to read further. Anandaselvam

    ReplyDelete