மகாவம்சத்தில் புதைந்துள்ள….(பகுதி 05)

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'

இலங்கைக்கு மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்து சேர்ந்த பௌத்த மதகுருமாரினாலேயே எழுத்துக்கள் அறிமுகம் செய்யப் பட்டன என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்த போதிலும், இதற்கு முன்னரே எழுத்துக்கள் இங்கு உபயோகத்தில் இருந்தன என்பதற்கு இலக்கிய ரீதியிலும் மற்றும் கல் வெட்டுக்களின் அடிப்படையிலும் போதிய அளவு சான்றுகள் உள்ளன. உதாரணமாக, அனுராதபுரத்தில்சிற்றாடல்எனக் குறிப்பிடப்பட்ட அகழ்வாராச்சிப் பகுதியில் சல்-கஹ-வத்த என்ற இடத்தில் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்ட  "எழுத்துக்கள் வெட்டப்பட்ட மட்பாண்டங்கள்",  கி. மு. ஆறாம் அல்லது ஐந்தாம்  நூற்றாண்டு காலப்பகுதியை சேர்ந்ததாக கருதப் படுகிறது. அதாவது அசோக சக்கரவர்த்தி காலத்து பிராமி எழுத்திலும் நூறு அல்லது இருநூறு ஆண்டு காலம் முந்தி இருக்கலாம் என்பது பொதுவான அபிப்பிராயமாகும். அதில், அசோகச் சக்கரவர்த்தி காலத்தின் எந்தவொரு கல்வெட்டிலும் காணப்படாத இரண்டு எழுத்துக்களை காண முடியும். இவை  "", "மா" என்ற எழுத்துக்கள் ஆகும். இந்த  "", "மா" எழுத்துக்கள் வட இந்திய கல் வெட்டுக்களில் காணப்படா விட்டாலும், தென் இந்தியாவை சேந்த, திருப்பரங்குன்றம், கருங்கலக்குடி, கோங்கர், புளியங்குளம் போன்ற பாண்டி நாட்டுப் பகுதியிலும் அரிக்கமேட்டில் கண்டு எடுக்கப்பட்ட மடபண்டங்களிலும் இவை காணப்படுகின்றன. எனவே கட்டாயம் மஹிந்த தேரர் இங்கு வருவதற்கு முன்னாலேயே பிரம்மி எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கலாம். இவை அனைத்தும் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள நெடு நாள் தொடர்பையும், ஆகவே தமிழ் மொழியின் தொடர்பை தேவநம்பியதீச மன்னன் காலத்தில் அல்லது அதற்கு முன்னமே இங்கு இருந்ததை எடுத்து காட்டுகின்றன. பிரம்மி எழுத்துக்களை பொதுவாக இடமிருந்து வலமாக வாசிக்க வேண்டும் என்றாலும், வலமிருந்து இடமாக வாசிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. உதாரணமாக, கேகாலை மாவட்டத்தில் அம்பலாங்கந்த என்ற இடத்தில் உள்ள குருகல்லேன என்ற குகையில் வலதுபுறத்தில் இருந்து இடது பக்கம் நோக்கி எழுதப் பட்ட கல்வெட்டை காணலாம். எழுத்துக்களும் தலை கீழாக காணப்படுகின்றன. தென் இந்தியா பாண்டி நாட்டிலும் தலை கீழான எழுத்துக்களை கொண்ட கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன, இதுவும் பாண்டி நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பண்டைய நெருங்கிய தொடர்பை எடுத்து காட்டுகின்றன. ஆகவே இவை எல்லாம் அன்று, சிங்களம் என்ற ஒரு மொழி தோன்ற முன், இரண்டு இடங்களிலும் ஒரே வித மொழி பேசப்பட்டதை, எழுதப் பட்டதை எடுத்து காட்டுகின்றன.

[இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள பெளத்த கலாசாரம், ஆசிரியர்: குருகே, ஆனந்த W.P. வெளியீட்டாளர்: கல்வி, கலாசார விவகார அமைச்சு, வெளியீட்டாண்டு1994 / சிங்கள எழுத்துக்களின் தோற்றமும் அபிவிருத்தியும் - பீ...பெர்னான்டோ பக்கம் 141 - 148]

இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள பெளத்த கலாசாரம் (17.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி

இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள பெளத்த கலாசாரம் (எழுத்துணரியாக்கம்)

 

 

அசோகா கல்வெட்டுக்கள் கிரேக்கம், அரமேயம், கரோஷ்டி மற்றும் பிராமி [Greek, Aramaic , Kharosthi and Brahmi ] எழுத்துக்களில் காண்கிறோம். இதில் பிராமியே அசோகனால் பொதுவாக பாவிக்கப்பட்டன. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் அநேகமாக அசோக பிராமியை ஒத்த எழுத்துக்கள் போல இருப்பதாகவும், இதனால் அவற்றை தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இன்றைய தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் இதில் இருந்தே படிவளர்ச்சியுற்றதாக கருதுகிறார்கள். எப்படியாயினும், இன்று, சிரோண்மனி மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே அசோகன் பிராமி தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அத்துடன் கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தெனஸ் (Megasthenes) (கிமு 350 - கிமு 290), மௌரியனின் அரசவைக்கு கி மு 300 ஆண்டளவில் சென்ற பொழுது, அங்கு எந்த எழுதப் பட்ட நூலையும் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால், மகாவம்சம் இலங்கை அரசன் விஜயனைப் பற்றி கூறுகையில், பாண்டிய அரசன், தனது மகளை விஜயனுக்கு மனைவியாகவும், அவனது 700 நண்பர்களுக்கு மனைவியராக தமிழ்ப்பெண்களையும், அத்துடன் அவர்களுக்கு உதவியாக வேலையாட்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், நாட்டியக்காரர்கள், பூசாரிகள் உட்பட பலரை அனுப்பிய பொழுது, ஒரு கடிதத்தையும் விஜயனுக்கு கொடுத்து அனுப்பினான் என்று கூறுகிறது. இது கிருஸ்துக்கு பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே, அசோகனிற்கும் முன்பே தமிழ் நாட்டில் எழுத்து இருந்தமையை எடுத்து காட்டுகிறது. ஆகவே  "", "மா" என்ற எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு அதிகமாக தமிழ்ப் பிராமி அல்லது தமிழி யாக இருக்கலாம் ?

 

புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon]  நவம்பர், டிசம்பர் , ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த  பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல், காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும்.  [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன், புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது.

 

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை அங்கு  தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் /அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 06 தொடரும், அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக   Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06):   

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment