லாங்யா வைரஸ்:

 சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா?



சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன.

 

விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

 

ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸை முக்கியமாக எலி வகையைச் சேர்ந்த மூஞ்சூறுகளில் கண்டறிந்தனர்.

 

சீனா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கடிதத்தில் இந்த கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' சஞ்சிகையிலும் இது வெளியிடப்பட்டது.

 

சிங்கப்பூரில் உள்ள டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் லின்ஃபா, "இது வரை கண்டறியப்பட்டிருக்கும் வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல. அதனால் பீதி அடையத் தேவையில்லை" என்று சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

 

இருப்பினும், இயற்கையில் இருக்கும் பல வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிய பிறகு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வாங் கூறியுள்ளார்.

 

சோதனை செய்யப்பட்ட 27% மூஞ்சூறுகளில் LayV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை இந்த வைரஸிற்கான "இயற்கை சேமிப்புக் கிடங்குகளாக" இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மூஞ்சூறுகள் தவிர, சுமார் 5% நாய்களிலும் மற்றும் 2% ஆடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

 

புதிய வைரஸ் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தைவானின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

 

லாங்யா என்பது ஒரு வகை ஹெனிபா வைரஸ் ஆகும். இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவக்கூடிய ஜூனோட்டிக் வைரஸ் வகையாகும்.

 

ஜூனோடிக் வைரஸ்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுபவை. ஆனால் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன..

 

புதிதாகப் பரவும் நான்கு தொற்று நோய்களில் மூன்று தொற்றுநோய்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

 

காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகளின் அதீதப் பயன்பாடு ஆகியவற்றால் உலகம் இதுபோன்ற நோய்களைக் காண வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்பு எச்சரித்தது.

 

சில ஜூனோடிக் வைரஸ்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. ஆசியாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே அவ்வப்போது பரவும் நிபா வைரஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் குதிரைகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹெண்ட்ரா வைரஸ் ஆகியவை இதில் அடங்கும்.

 

நன்றி:-தமிழ் BBC

0 comments:

Post a Comment