கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?

திருமண அழைப்பிதழ் ….. [அறிவியல்]



இக்காலத்துத் தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண வைபத்திற்காக, அதிகமான பண விரயத்துடன் தேவையற்ற பல ஏற்பாடுகளைச் செய்வதில் நேரத்தைச் செலவு செய்வார்கள்.

அறியாத, தெரியாத, பழகாத நபர்களை எல்லாம் அழைத்து, ஆடம்பர அலங்கார மண்டபம் அமைத்து, அளவுக்கு  மிஞ்சிய பகட்டினைக் காட்டிக் கொள்வார்கள்.

இவற்றில் ஒன்றுதான் திருமண அழைப்பிதழ் அட்டை.

இந்த அட்டை ஒன்றை வடிவமைக்கும் ஏற்பாடு ஒரு வருடத்துக்கு முதலிலேயே தொடங்கி விடும்.  மாப்பிள்ளை, பெண்பிள்ளை, பெற்றோர்கள் எல்லோரும் இந்தியாவரை சென்று, அங்கு கடை, கடையாய் ஏறி இறங்கி அவர்களுக்குப் பிடித்தமான, நல்ல கனமான அழைப்பிதழைக் கண்டுபிடித்து அதற்கு ஓர்டர் கொடுத்து, ஓர் ஐந்நூறோ, ஆயிரமோ வாங்கிக்கொண்டு ஊர் திரும்புவர்.

தமிழ் மற்றும் ஆங்கில திருமண அழைப்பு, மற்றும் வரவேற்பு உபசாரம் மொத்தம் மூன்று தங்க நிற சிங்கார அட்டைகள் மூன்றும் இன்னொரு பெரிய மங்களகரமான, மலர் அலங்கார உறைக்குள் வைக்கப்பட்டு, தபாலில் சேர்ப்பதற்காக இன்னொரு வெள்ளை உறையில் இட்டு, ஐந்து மடங்கு முத்திரையும் ஒட்டி தபாலில் சேர்த்துவிடுவார்.

தபாலில் சேர்ப்பதற்காக அழைக்கப்படுபவர்கள் பெயரை வைத்துக்கொண்டு, அவரின் தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடித்து,  அவரை அழைத்து, அவரின் முழுப்பெயர், விலாசம் எல்லாம் கேட்டறிந்து ஒரு பட்டியல் தயாரிக்கவே மாசக்கணக்கு ஆகும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு அனுப்பிய இந்த 'நல்லாய் இருக்கும்' திருமண அழைப்பிதழுக்கு என்ன நடக்கும்?

கிடைத்ததும், 'இன்னாருடைய மகளுக்கு (பெயர் தெரியாது) கல்யாணமாம்' என்று கூறி, எங்காவது எழுதி வைத்துவிட்டு அல்லது நினைவில் வைத்துக்கொண்டு குப்பை வாளியில் போட்டு விடுவார்கள். சிலர் எங்காவது வைத்துவிட்டு மறந்தும் போய்விடுவார்கள்.

நெருக்கமாய்ப் பழகுபவர்களுக்கு அந்தத் திகதி தெரியவந்து போவார்கள்; சிலர் அப்படி ஒரு நாளை மறந்தே போய் விடுவார்கள். கல்யாண வீட்டுக்காரர் இவர்களுக்கு எந்தவொரு நினைவூட்டல் செய்திதானும் கொடுப்பது இல்லை.

இப்படி ஒரு விலைமிகையான, திறனற்ற  முறையினிலும் பார்க்க, செலவு எதுவுமற்ற, எல்லோருக்கும் இலகுவில் உடனே சேரக்கூடிய, முழுமையான பலனைத் தரக்கூடிய நவீன முறை  இருக்கின்றது; அதை  இலகுவில் பயன் படுத்தலாமே!

அதுதான் வாட்ஸாப், ஈமெயில் போன்ற சமூக வலைத்தலத் தொடர்புகள்! (எல்லோருக்கும் தெரிந்ததுதான்}.

இவற்றின் மூலம் நீங்கள் எல்லா வித அலங்கார அட்டைகள் எத்தனையும் எத்தனை பேருக்கும் அனுப்பலாம்; எந்த நாட்டுக்கும் அனுப்பலாம்;  இது அவர்களின் கலண்டரில் இடப்பட்டு அந்த நாளை நினைவு படுத்திக் கொள்ள உதவும். எல்லாமே முற்றிலும் இலவசம்!


இம்முறையினால், எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை அவர்கள் பதில்கள் மூலம் நிச்சயப் படுத்தலாம். அவ்வப்போது என்ன நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று அறிவித்துக்கொண்டு இருக்கலாம். கல்யாண நாளுக்கு முதல் கிழமை ஒரு நினைவூட்டல் செய்யலாம். முதல் நாளும் ஒரு மீளவும் நினைவூட்டலாம். வைபவ மண்டபத்துக்கு வரும் வழியினை விளக்கிக் கூறலாம். முடிந்து மறுநாள் எல்லோருக்கும் நன்றியும் தெரிவிக்கலாம்.


அதுதான் கேட்கிறேன், பெரும் பொருட் செலவுகளுடனும் கடின முயற்சிகளுடன், பெரும் ஆரவாரங்களுடனும் ஏற்பாடு செய்யப்படும் ந்த பலனற்ற அலங்கார திருமண அழைப்பிதழ் அட்டைகளா அல்லது 'சும்மா' கிடைக்கும் இலவசமாய்க் கிடைக்கும் முழுப் பலன் தரக்கூடிய நவீன சமூக வலைத் தொடர்பு வழிகளா சிறந்தவை?


உங்கள் வீட்டு வைபவம் உங்களுக்கு பெரிய பரபரப்பான விழாவாக இருக்கலாம்; ஆனால் மற்றையோருக்கு அது ஒரு சாதாரண சம்பவம்தான்! உங்கள் திருமண அட்டையையோ, திருமண வைபவத்தையோ உயர்த்திப் பேசித் திரியவா போகின்றார்கள்?

நீங்களே சொல்லுங்கள்!

எண்ணம்:செ.சந்திரகாசன் 

0 comments:

Post a Comment