நவீன உலகின் புதுமைகள்

விஞ்ஞானம் (அறிவியல்) 

மிதக்கும் சூரிய மின் பலகைகள்

நீர் தேக்கத்தின் மேல், போட்டோ வோல்டாயிக் செல் எனப்படும் சூரிய மின் பலகைகளை மிதக்க விடுவதுதான் 'புளோட்டோவோல்டாயிக்' மின் உற்பத்தி முறை. நீரில் மின் உற்பத்தி செய்யும் அணைக்கட்டுகள், இனி சூரிய மின்னாற்றல் மையங்களாகவும் மாறும்.

 

உலக நீர்த்தேக்கங்களில், வெறும் 10 சதவீதத்தில் சூரிய மின் உற்பத்தி செய்வதாக வையுங்கள்.இதில் கிடைக்கும் மின்சாரம், உலகில் பெட்ரோலிய எரிபொருளால் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு இணையாக இருக்கும். எனவேதான், கனடாவும் பிரேசிலும் மிதவை சூரிய மின் திட்டங்கள் மூலம் 2050க்கான, சூரிய ஆற்றல் இலக்கை எட்டிவிட திட்டமிட்டுள்ளன.நீரில் மிதப்பதால், மின்பலகைகள் வெப்பமடையாது. இதனால், மின் உற்பத்திகூடும். மேலும், பெருமளவு நீர் ஆவியாவதை, மிதக்கும் மின்பலகைகள் தடுத்துவிடும்.

 

மாலுமியில்லாத கப்பல்!

மாலுமியோ, மனித உதவியாளர்களோ இல்லாத கப்பலை, வெள்ளோட்டம் பார்த்துள்ளது சீன நிறுவனமான, சி.எஸ்.எஸ்.சி ஹுவாங்பு வென்சோங் ஷிப்பிங் கோ. கடல் மற்றும் விமானப் படைகளுக்காக ட்ரோன்களை இந்த தானோட்டிக் கப்பல் சுமந்து செல்லும். முப்பரிமாண கேமிராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இக் கப்பல் இயங்குகிறது. அண்மையில் 3 மணி நேர வெள்ளோட்டத்தை இந்த தானோட்டிக் கப்பல் முடித்துள்ளது.

 

திரையில்லாப் படம்!

ஒளியைத் தடுக்க திரையின்றி படம் காட்டுவதுதான் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது லுக்கிங் கிளாஸ் பேக்டரி. கடந்த ஆண்டு '8-கே' துல்லியமுள்ள 32 அங்குல முப்பரிமாணப் படம் காட்டும் ஹோலோகிராம் கருவியை லுக்கிங் கிளாஸ் அறிமுகப்படுத்தியது. தற்போது 'லுக்கிங் கிளாஸ் 65' என்ற புதிய ஹோலோகிராம் கருவி 65 அங்குல படத்தைக் காட்டுகிறது. விரைவில் ஹோலோகிராம் கருவிகள் தொலைக்காட்சிக்கு மாற்றாக வரப்போகின்றன.

 

கடலடி நீரோட்டத்தில் மின்சாரம்



தீவுகளால் ஆன நாடான ஜப்பான், சுற்றியுள்ள கடலிலிருந்து மின் ஆற்றலைத் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.

 

குறிப்பாக, கடலுக்கு அடியே இயற்கையாக ஓடும் நீரோட்டத்தின் மூலம் டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க சோதனைகளை தற்போது நடத்தி வருகிறது. ஜப்பானுக்கு அருகே உலகின் அதிக விசையுள்ள கடலடி நீரோட்டங்கள் ஓடுகின்றன.

 

இத்தகைய நீரோட்ட விசைக்குக் குறுக்கே மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்களை வைத்தால், அவை தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய முடியும். இதைத்தான் .எச்.., மற்றும் 'நெடோ' ஆகிய இரு நிறுவனங்களும், 2017 முதல் சோதித்து வருகின்றன.

 

சோதனை முயற்சிகளில் 20 மீட்டர் நீளமும் அதே அகலமும் உள்ள டர்பைன்கள் 100 கி.வா., மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. சில ஆண்டுகளில், ஜப்பான், உலகிலேயே அதிகமாக கடலடி மின்சாரம் தயாரிக்கும் நாடாகி விடும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment