பழகத் தெரிய வேணும் – 43

குழந்தைகளுக்குச் சுதந்திரம் எதற்கு?

அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!”

 

உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும்.

 

நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. `இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள்.

 

விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்?

 

எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, `இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்?

 

`சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை.

 

இப்போக்கைத்தான், `சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள்.

 

`வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், `பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும்.

 

சொல்வதைவிட செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும்.

 

`உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள்.

 

கதை:-

இரண்டு வயதாக இருந்தபோது, என் பேரனை குழந்தைகளுக்கான `ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும்.

 

பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன.

 

ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், “இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு.

 

அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான்.

 

ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் சிறுவர்களின் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும்.

 

இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள்.

 

சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள்.

 

எந்த வேலையையும், `இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, `நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும்.

 

குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் `நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?).

 

தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம்.

 

`குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, `இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம்.

 

சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும்.

 

சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் — `நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான்.

 

குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா?

 

மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள்.

 

சுதந்திரத்திற்கு வயதில்லை

 

ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள்.

 

உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?”

 

நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும்.

 

இது வெள்ளையா இருக்கு, பாரு! இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன்.

 

சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள்.

 

ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள்.

 

அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை.

 

அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில்.

 

சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள்.

 

குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். அந்த வயதில், ருசியைப்பற்றிய அக்கறையோ, அறிவோ கிடையாது.

 

என் மகளுக்கு ஒரு வயதானபோது, இதே வளர்ப்பு முறையை நான் கையாண்டேன்.

 

அதைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள்.

 

சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன்.

 

ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள்!

 

`அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று.

 

பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல்.

 

இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது.

 

நான் `கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார்.

 

நடக்க ஆரம்பித்ததுமே, குழந்தைகள் ஓடுவார்கள். அடிக்கடி விழுந்தாலும், அடுத்த முறையும் ஓடுவார்கள். பதட்டப்படாது, `இதுதான் அவர்கள் பொழுதுபோக்கு!’ என்று விடவேண்டியதுதான்

 

தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள்.

 

எல்லா வயதிலும் `வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற பாடத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே!

 

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment