பழகத் தெரிய வேணும் – 55


திட்டம் போடுங்களேன்!

`அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்!’

எந்தமாதிரியான கோலம் போடுவது என்று யோசியாது, எதையோ செய்துவைப்போம் என்று செய்தால் இப்படித்தான் ஆகும்.

முன் திட்டமில்லாது, பேச்சாளரோ, பாடகரோ மேடையில் ஏறியபின் என்ன செய்வது என்று புரியாது விழித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

உரையாற்ற அழைத்து, நிர்வாகிகள் தலைப்பை அளித்துவிட்டால், உடனடியாக என்ன பேசுவது என்று தோன்ற ஆரம்பிக்கும். குறித்துக்கொள்ளாவிட்டால் மறக்கும் அபாயம் உண்டு.

நான் உரையாற்ற அவைக்குமுன் நின்று, சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்ப்பேன்.

லேசான சிரிப்பு எழும்.

`என் பேச்சால் உங்களைக் கவரப்போகிறேன். மனம்விட்டுச் சிரிக்கப்போகிறீர்கள்!’ என்று அவர்களுக்கு மானசீகமாக ஒரு செய்தியை இப்படி அனுப்புகிறேன்.

எங்கோ படித்த இம்முறையை நான் கையாள, பத்து வினாடிகளுக்குள் அவையினர் எனக்குக் கட்டுப்படுவார்கள். சிரிப்பு தானாக எழும்.

நான் எப்போதோ படித்தது: “தினமும் ஒரே நேரத்தில் காகிதத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பேனாவைப் பிடியுங்கள். தானே கதை எழுதமுடியும்!”

இது எப்படி இருக்கிறது தெரியுமா? எங்கே போகவேண்டும் என்ற முன்யோசனை இல்லாது, கால்போன போக்கில் செல்வதுபோல்தான். எங்காவது கொண்டு விட்டுவிடும்.

ஒரு கதை எழுத ஆரம்பிக்குமுன் கருவை யோசித்தாலே போதும். அதன்பின், பாத்திரங்கள். இவற்றை வைத்து ஆரம்பித்தாலே போதும். முடிவு எழுத்தாளர் கையில் இல்லை. கதை தானே நகரும் — பாத்திரங்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

தினசரி திட்டமிடு

 

::கதை::

ஒவ்வொரு நாளும் சமைக்க உனக்கு எத்தனை மணிநேரம் ஆகும்?” என்று என் சக ஆசிரியை கேட்டாள். அத்தனை வேலைப்பளுவிலும் என்னால் எப்படி எழுதவும் முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியம்.

என் பதிலைக் கேட்டு, “என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாமா?” என்று கேட்டாள்.

வாங்கும்போதே நிச்சயித்துவிடுவேன், எந்தக் கறிகாயை எப்படி ஆக்குவது என்று”.

அதற்கே எனக்கு ஒரு மணி ஆகும்,” என்று பெருமூச்சு விட்டாள்.

என் பாட்டி முதல் நாள் இரவே சின்ன வெங்காயத்தின் இரு முனைகளிலும் நறுக்கி, தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள். மறுநாள் சற்றே கசக்கினால் தோல் எளிதாக அகன்றுவிடும்.

`நல்ல வெயில் அடிக்கிறது! அப்பளம் இடவேண்டும்!’ என்று குடும்பத் தலைவிகள் திட்டமிடுவார்கள்.

பலரும் முன்யோசனை இல்லாது ஏதாவது செய்துவிட்டு, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று வருந்துவார்கள். மழைகாலத்தில் அப்பளம் இடத் திட்டம் போடுவதுபோல்தான்.

 

::கதை::

ஒருவர் நீண்ட காலம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். உடல்நிலை மிகக் கெட்டு, `இப்பழக்கத்தை அறவே ஒழிக்காவிட்டால் இறந்து போவீர்கள்!’ என்று மருத்துவர்கள் எச்சரிக்க, அதை விட்டார்.

உற்றவர்களிடமெல்லாம், “நான் குடிக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம் வெள்ளியை மிச்சப்படுத்தி இருப்பேன்! ருசியான எந்த ஆகாரத்தைச் சாப்பிடவும் முடிவில்லை. மருந்தே உணவாகிவிட்டது. இப்படியாவது உயிர் வாழ வேண்டுமா?” என்று புலம்பினார்.

காலம் கடந்தபின் புத்தி வந்து என்ன பயன்?

செய்த தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்கலாமே!

 

::கதை::

என் மாணவன் ஒருவன் உழைத்துப் படிப்பான். ஏனோ, பிறகு படிப்பில் மனம் போகவில்லை.

நான் அவனை விசாரித்தபோது, “எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள், டீச்சர்,” என்று ஒப்புக்கொண்டான் — அலட்சியமாக.

தப்பு என்றுதான் உனக்குத் தெரிகிறதே! அவற்றை விடுவதுதானே!” என்றேன்.

எப்படி முடியும்? என் நண்பர்கள் எல்லாரும் விஷம்!” என்றான்.

குறுகிய காலத்தில் எப்படி உல்லாசமாகக் கழிக்கலாம் என்று நண்பர்கள் வழிகாட்டியதை ஏற்றான். அவர்கள் தன்னைக் கெடுக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்களிடமிருந்து விலக முடியவில்லை.

 

`நான் பெரிய ஆளாவேன்!’ என்று கனவு கண்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சிகள் வேண்டாமா?

 

ஆறு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானால், நான் முதல் ஒரு மணியைக் கோடரியைத் தீட்டுவதற்காகச் செலவழிப்பேன்!” என்று முன்னுக்கு வரும் வழியைக் காட்டுகிறார் மாஜி அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.

 

பள்ளிப் பரீட்சைக்கு ஆயத்தம்

`சிறந்த கல்விக்கூடம்’ என்று பெயரெடுத்தவைகளில் ஒவ்வொரு வாரமும் முதல் வாரத்தில் நடந்த பாடங்களில் ஒரு சிறு பரீட்சை வைப்பார்கள். அதன்பின், மாதாந்திர பரீட்சை. நீண்ட விடுமுறைக்காலத்திற்குமுன் பெரிய பரீட்சைகள். அவைகளை எதிர்கொள்ள `படிப்புக்காக’ என்று ஒரு மாத விடுப்பு அளிப்பதும் உண்டு.

இல்லாவிட்டால், `இவ்வளவு பக்கங்களா! எப்படி படித்து முடிப்பது!’ என்று மலைப்பாக இருக்கும். ஓயாமல் படிக்க நேரிடும்போது, அவ்வப்போது வயிற்றையும் கொஞ்சம் கவனித்து, பழவகைகள் சாப்பிட்டால், உடல்சோர்வைத் தவிர்க்கலாம்.

அதிகாலையில் அவ்வளவாக கவனம் சிதறாது. ஆகையால், கணக்கு, விஞ்ஞானம் போன்றவற்றை அப்போது படித்தால் தெளிவாக விளங்கும். இவை இரண்டிலும் உள்ள கணக்குகளை எழுதிப் பழக வேண்டும். விஞ்ஞானப்பாடத்தில் வரும் படங்களையும் வரைந்து பழகவேண்டும்.

கால்மணி நேர ஓய்வுக்குப்பின், சரித்திரம், பூகோளம். இறுதியில் மொழி.

முதலிலேயே, ஒவ்வொரு பாடத்திலும் எங்கு ஆரம்பித்து, எதுவரை படிக்கவேண்டும் என்றெல்லாம் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

வருட ஆரம்பத்திலேயே மாணவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுவதால், அவர்கள் தயாராக இருப்பார்கள். மாநிலங்களில் சில பள்ளி மாணவர்களே முதன்மையாக வரும் ரகசியம் இதுதான்.

இப்படியில்லாது, கடைசி நிமிடத்தில் டீ, காப்பி என்று மணிக்கொரு தடவை குடித்து, கண்விழித்துப் படித்தால் தலை கனத்துப்போகும். வயிற்றைப் புரட்டும். புத்தகம் படிப்பது என்பது வெறுக்கத்தக்க காரியம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.

 

செய்ய முடியாத காரியத்தை வீம்புக்காகச் செய்வதைவிட, திறமையும் ஆர்வமும் உள்ளவற்றில் ஈடுபடுவது மேல்.

 

::கதை::

ரூபாவுக்குப் பதினைந்து வயதாக இருந்தபோது, அவளுடைய ஆசிரியை வருந்திக் கூறினாள்: “நீ என் பாடத்தில் எப்படித் தேர்ச்சி பெறுவாய்? என் சதவிகிதம் உன்னால் குறைந்துவிடப்போகிறது!”

அந்த மாணவியின் கைகளில் ஐந்து வயதுக்குரிய ஆற்றல்தான் இருந்தன. படங்கள் வரைய முடியாது.

ஆனால், அவள் மொழிகளில் கெட்டிக்காரி.

இது புரிந்து, ரூபாவின் பெற்றோர் அவள் ஓர் அந்நிய மொழி கற்க ஏற்பாடு செய்தார்கள். அதற்காகக் கூடுதலாகச் செலவு. இருந்தாலும், அவளால் முடிந்த காரியத்தைச் செய்தபோது, மகிழ்வுடன் பெரும் வெற்றியும் கிடைத்தது.

 

பயணத் திட்டம்

எனக்கு வெளியூர் போகவே பிடிக்காது. போகுமுன் நிறைய சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திரும்பியபின், அவைகளை சுத்தப்படுத்தி ஒழித்துவைக்க இன்னும் வேலை!” என்று முகம் சுளித்தாள் என் சக ஆசிரியை.

என்னைப் பொறுத்தவரை, உல்லாசமாக ஓரிடத்திற்குப் போவதற்குமுன் அதற்கான திட்டங்கள் வகுப்பதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.

குளிர் ஊரானால், அதற்குத் தகுந்த ஆடைகள் எடுத்துப்போக வேண்டும். வெளியூர் எங்கு போவதானாலும் தலைவலி, காய்ச்சல், வயிற்று உபாதைகள் எல்லாவற்றிற்கும் மருந்துகள். அவை தேவைப்படாது, திரும்பக் கொண்டுவந்திருக்கிறேன்.

அதனால் என்ன! மருந்துக் கடைகளைத் தேடிப் போகும் அசௌகரியத்தை தவிர்க்கலாமே!

புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலும் எழாது.

வீடு திரும்பியதும், உடல் சோர்வாக இருந்தாலும், மனம் உற்சாகமாக இருக்கும். வழக்கம்போல் செய்யும் காரியங்களில் எப்போதும் ஏற்படும் அலுப்பு மறைந்திருக்கும்.

::-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment