பழகத் தெரிய வேணும் – 80

மகிழ்ச்சியுடன் வளரவிடுங்கள்!

அநேகமாக எல்லாருமே ஏதாவதொரு சமயம் குழந்தைகளை வளர்க்கிறோம். பெற்றோராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கோ, மூத்த குழந்தைகளுக்கோகூட இப்பொறுப்பு ஏற்படக்கூடும்.

 

`இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்ற பொதுவான நியதியோ, பாடமோ இதற்குக் கிடையாது. ஏனெனில், குழந்தைக்குக் குழந்தை வளர்ப்புமுறை மாறுபடும்.

 

::கதை::

ஒரே வயது நிரம்பிய என் முதல் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது என் வழக்கம்.

 

ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த இளம்பெண், “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டுமே!” என்ற பீடிகையுடன், “நீங்கள் இல்லாதபோது, குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,” என்று தெரிவித்தாள்.

 

`இன்னொருவர் குடும்ப நிர்வாகத்தில் தலையிடலாமா?’ என்று தயங்கியிருப்பாள்.

 

நான் அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

 

எனக்கு ஒரே அதிர்ச்சி. எனக்குக் குழந்தைகளை வளர்த்த பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு குழந்தை சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தால், வளர்ப்புமுறை சரியெனக் கொள்ளலாம் என்றவரை தெரியும்.

 

வீட்டு வேலை முன்னேபின்னே இருக்கலாம். ஆனால், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியவுடன், என் எதிர்பார்ப்பைக் கூறுவேன்.

 

யாருக்குமே அது புரிந்ததாகத் தெரியவில்லை.

 

நீங்க புத்தகத்திலே போட்டிருக்கிறமாதிரி வளர்க்கணும்னு சொல்றீங்க. அது எப்படி முடியும்? நல்லா அடிச்சு வளர்க்கணும்,” என்று என்னிடம் தப்பு கண்டுபிடித்தாள் ஒருத்தி!

 

அவள் வளர்ந்த சூழ்நிலையில், விவரம் தெரியாத பெற்றோர் அப்படிச் செய்ததை, `நாங்க எல்லாம் வளர்ந்து ஆளாகலியா?’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், என்னால் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

நாங்க அடிக்கறதில்லே. நீயும் சும்மாச் சும்மா திட்டக்கூடாது,” என்றேன்.

 

என்னுடைய இந்த கண்டிப்பால், பணிப்பெண்களை அடிக்கடி மாற்றும்படி நேர்ந்தது. அதனால் எனக்கும் கெட்ட பெயர்!

 

பெண்களின் பொறுப்பா?

பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை சற்று அதிகம். அதனால், குழந்தை வளர்ப்பு அவர்களுடைய வேலை என்றாகிவிட்டது.

 

வெளிவேலைக்குப் போகாத நாட்களில், அவர்கள்தாம் அதிக நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிட வேண்டியிருந்தது மற்றொரு காரணம்.

 

பொறுப்பிலிருந்து தப்பிக்கவோ, மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்துக்கொண்டோ, இன்றும் பல ஆண்கள் இந்தக் கடமையை அவளிடம் விட்டுவிடுகிறார்கள்.

 

தந்தை அதிகம் படித்தவராகவும், தாய் படிக்காதவளாக, காலத்துடன் ஒன்றிப்போகத் தெரியாதவளாகவும் இருந்தால்??

 

::கதை::

அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருந்தார் ரம்லான்.

 

அவர் மணக்கச் சரியானவள் என்று அவருடைய தாய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

 

அவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இருக்கவில்லை.

 

நான்கு குழந்தைகளுக்குப் பின்னர், “என் குழந்தைகள் ரொம்ப வீக்!” என்று அங்கலாய்ப்பார், என்னிடம்.

 

ரம்லான் செய்த தவறு, குழந்தைகளை வளர்ப்பதை முழுமையாக மனைவி அயினியிடம் ஒப்படைத்ததுதான்.

 

குழந்தைகள் விஷயத்தில் அவள் என்ன செய்தாலும், அதில் தான் தலையிட்டால், அவளை அவமரியாதையாக நடத்துவதுபோல் ஆகிவிடும் என்றெண்ணி நடந்திருக்கிறார்.

 

அவளோ, அதிகம் படிக்காத பட்டிக்காட்டுப் பெண். அன்புக்குப் பதில் அதிகாரம் செலுத்துவாள்.

 

பண்டிகைக்கு என் மகளுக்கு பத்து உடைகள் தைத்தேன்!” என்று அயினி அலுத்துக்கொண்டபோது பிரமித்தேன்.

 

ஒன்றோ, இரண்டோதான் வாங்குவார்கள். எதற்காக அத்தனை?

 

என் மகள், `ஒனக்கு நான் ஒரே பொண்ணுதானேம்மா? இவ்வளவு கருமியா இருக்கியே!’ என்று சொல்லிச் சொல்லி வாங்கவைத்தாள்!”

 

பதினைந்து வயது மகள் தாயை மரியாதை இல்லாது பேசியபோது அவளைக் கண்டிக்கத் தெரியவில்லை தாய்க்கு.

 

ஒரு முறை, அயினி சில நாட்கள் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது.

 

மூத்த மகனிடம், “தங்கை, தம்பிகள் வீட்டுப்பாடம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள். தெரியாவிட்டால், சொல்லிக்கொடு,” என்று சொல்லிவிட்டுப் போனாளாம்.

 

திரும்பி வந்தபோது, அவள் கூறியது எதையுமே செய்திருக்கவில்லை அவன்.

 

எல்லாரும் கூட்டு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்!” என்று என்னிடம் பிரலாபித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள் அயினி.

 

சிறிது காலமாவது, அம்மாவின் கண்டிப்பும் அதிகாரமும் இல்லாமல் இருக்கலாமே என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டிருக்கிறான் அண்ணன்.

 

நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “விடு! எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று சொல்லிவைத்தேன்.

 

ஒத்த மனம்

தாய், தந்தை இருவரும் வளர்ப்புமுறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

 

மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

 

எந்தக் குழந்தை புத்திசாலி?

இப்போதெல்லாம், சினிமாத்தனமாக, வயதுக்குமீறி பேசும் குழந்தைகளை `smart” என்று கொண்டாடுகிறார்கள்.

 

அவர்கள் வளர்ந்தபின், `மரியாதை இல்லாமல் நடக்கிறாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, வருந்துவது என்னவோ பெற்றோர்தாம்.

 

ஏன் மரியாதை இல்லை?

 

::கதை::

சாதாரணமாக, நல்ல குடும்பத்திலிருந்து வந்த மலாய் மாணவிகள் மிகவும் பணிவாக இருப்பார்கள். ஆசிரியை திட்டினால், அழுகை வரும் — அவ்வளவு மென்மையானவர்கள்.

 

ஆனால், கமாரியா எப்போதுமே என்னிடம் மரியாதையின்றி பேசுவாள்.

 

எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிபவள்தான் அவளுடைய தாய் என்று அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது.

 

உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று எங்களில் பலரும் அவளைச் சாட, “என் காலத்தில் மிக அடக்கி வளர்க்கப்பட்டோம். மூத்தவர்களுடன் பேசவே பயமாக இருக்கும். மகளும் அப்படி பயந்து வளரக்கூடாது என்று அவள் போக்கில் விட்டேன்,” என்றாள், வருத்தத்துடன்.

 

பதினைந்து வயதில் எந்தப் பெண்ணும் சற்றுத் திமிறுவாள். இப்படிப்பட்ட மகளை இனி எப்படி அடக்குவது!

 

ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

 

::கதை::

தாய் தந்தையருக்குள் எப்போதுமே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், மெல்வின் தனித்து உணர்ந்தான். புத்தகங்களில் ஆழ்ந்து, நிகழ்காலத்தை மறக்க எண்ணினான். ஆனாலும், அவனுடைய உடல்நிலை கெட்டது. படிப்பிலும் சோடை.

 

உங்களால்தான் அவனைத் திருத்தமுடியும்!” என்று, என்னிடம் படிக்க அனுப்பினார்கள்.

 

நான் எவ்வளவோ முனைந்தும், மெல்வின் படிப்பில் முன்னேறவில்லை. அவன் வந்துவிட்டுப் போகும்போதெல்லாம் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பேன்.

 

குழந்தைக்கு உங்களிடம் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு வருகிறான்!” என்று தந்தை தெரிவித்தபோது, வியப்பாகத்தான் இருந்தது.

 

அவன் நல்லபடியாகத் தேறியது எனக்கே ஆச்சரியம் அளித்தது.

 

அவனுடைய தங்கையோ, மரியாதையில்லாமல், ஆசிரியைகளையும் எதிர்த்துப் பேசுவாள்.

 

இன்னொருவருடன் ஒத்து வாழமுடியாது, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கினர்.

 

பெற்றோருக்குக் காலம் கடந்தபின்தான் புரிந்தது தாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்று. (நான் குழந்தை வளர்ப்பைப்பற்றித் தொடராக எழுதியதைப் படித்துவிட்டு, அவர்கள் கூறியது).

 

கொடுமை செய்யும் பெற்றோரை உடைய குடும்பங்களிலோ, மகள் தந்தையைப் போன்றவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள்

 

மகன் தந்தையை முன்னுதாரணமாக நினைத்து நடப்பான்.

 

பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

 

::கதை::

சாயங்கால வேளைகளில், பெற்றோர், பாட்டிகள் சகிதம் குழந்தைகள் எங்கள் வீட்டருகே இருந்த மைதானத்தில் விளையாட வருவார்கள். ஆனால், நோர்மாவின் பெற்றோரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை.

 

அவளை எந்நேரமும் பார்த்துக்கொண்ட பணிப்பெண் மஸ்னாவிடம் (MAZNAH) அடியும், திட்டும் வாங்கினாள் நோர்மா. `அடி’ என்றால், பெயருக்கு முதுகில் ஒரு தட்டு இல்லை.

 

ஒருவயதுக் குழந்தையை எதற்கு இப்படி அடிக்கிறாய்?” என்று, நானே மஸ்னாவைக் கண்டித்திருக்கிறேன்.

 

உங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவள் ரொம்ப நாட்டி!” என்பாள்.

 

நோர்மாவுக்குப் பத்து வயதானபோது, எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க, “வீட்டுக்குப் போகலாம்,” என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள் பணிப்பெண் மஸ்னா.

 

அவள் மறுக்க, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள். சிறுமி கதற, அதைப் பார்த்த ஒரு சிறுவன் பெரிதாக அழ ஆரம்பித்தான்.

 

தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னால் பொறுக்க முடியவில்லை. அங்கு விரைந்து, “விடு அவளை!” என்று இரைந்தேன்.

 

அவளுடைய வீட்டிற்குச் சென்று, நோர்மாவின் தாயிடம் வருடக்கணக்கான வதையை விரிவாகக் கூற, அவள் அதிர்ந்தாள்.

 

சற்று வளர்ந்தபின்னரும், நோர்மா பலியாடுபோல் இன்னொரு பணிப்பெண்ணைத் தொடர்வதைப் பார்த்தேன்.

 

`இவளுக்குக் குழந்தைகள் பிறந்தால், அவர்களிடம் இவளால் அன்பு செலுத்த முடியுமா?’ என்று என் யோசனை போயிற்று.

 

என்னதான் தத்து எடுத்த பெண்ணானாலும், நிலைமை அவ்வளவு மோசமாகும்வரை வளர்ப்புப்பெற்றோர் விட்டிருக்கலாமா?

::நிர்மலா, ராகவன்/எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

0 comments:

Post a Comment