பழகத் தெரிய வேணும் – 81உன்னையே மாற்றிக்கொள்!

`என்னதான் கிரைண்டர் வந்தாலும், அம்மியிலே அரைச்சாதான் ருசி!’

 

இப்படிக் கூறிய பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் நல்லதல்ல, அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது அவளுடைய ஆணித்தரமான நம்பிக்கை.

 

இலக்கு: அரைப்பது.

 

அம்மியில் அரைத்தால், அதிக நேரம் செலவாகும். மின்சார இயந்திரத்தால் அரைப்பதற்குச் சில வினாடிகள் போதும். வேலைப்பளுவும் வெகுவாகக் குறையும்.

 

இலக்கு மாறுபடாது இருந்தால், புதிய, எளிதான முறையைப் பின்பற்ற என்ன தடை?

 

`அதுதான் மெழுகுவர்த்தி இருக்கிறதே, மின்சார விளக்கு எதற்கு?’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால், இன்றும் அரைகுறை வெளிச்சத்தில்தான் முட்டி மோதிக்கொண்டு இருந்திருப்போம்.

 

விமானங்களில் பறக்க முடியாது என்ற நிலை இருந்தால், `அயல்நாடுகள்என்பனவற்றைப் புத்தகங்களில்தான் படித்தாக வேண்டும். முழுமையாகப் புரிந்தும் இருக்காது.

 

காலத்திற்கு ஏற்றவாறு மாறாததால், பல மிருகங்கள் காணாமல் போய்விட்டன.

 

நிலைமை என்று மாறும்?

 

தற்காலத்தில், தொற்றுநோய் வெகுவாகப் பரவிவிட்டதால், வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை.

 

பொறுத்துப்போவது கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இந்நிலை விரைவிலேயே மாறிவிடும் என்று நம்பிக் காத்திருக்க முடியாது. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் பிடிக்குமோ! `நாம் எதற்கு மாறுவது? உலகம்தான் மாறவேண்டும்!’ என்ற வறட்டுப் பிடிவாதம் நடைமுறைக்கு உதவாது. யாருக்காகவும் உலகம் மாறப்போவதில்லை.

 

ஆண்டுகள் பிடிக்குமோ!

 

எதிர்பாராத இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போக, பலரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், வன்முறை அதிகரித்துவிட்டது.

 

முதியவர்களுக்குத் தம் வயதொத்தவர்களுடன் பேசிப் பழக இயலவில்லையே என்ற மன இறுக்கம்.

 

இளையவர்களோ வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டும்.  அங்கேயே அலுவலக வேலை, பள்ளிப் படிப்பு.

 

பெற்றோர் நாள் முழுவதும் குழந்தைகளுடன் வீட்டிலேயே கழிக்க நேர்கிறது. பணத் தட்டுப்பாடு வேறு.

 

சிறு குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுடைய பிடிவாதம் அதிகரிக்கும்.

 

இச்சமயத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தலாம். முடிந்தால், சிறுவர்களுடன் நாமும் விளையாடலாம். சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.

 

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புத்தங்களைப் படித்துக் காட்டலாம். உணவு உட்கொள்ளும்போது, கதைகள் சொன்னால் அறிவும் மொழி வளமும் பெருகுவதுடன், கதை கேட்கும் சுவாரசியத்தில், என்ன சாப்பிடுகிறோம் என்றே புரியாது சாப்பிட்டுவிடுவார்கள்.

 

இன்றும், என் மகள், “அம்மா! நான் சாப்பிடறபோது நீ கதை சொல்ல மாட்டேங்கறே! அசடாப் போயிடுவேன்!” என்று விளையாட்டாக மிரட்டுவாள்!

 

மாறமாட்டோம்!

 

தண்ணீர், பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், அறிவாளிகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்(சீனப் பழமொழி).

 

`மாற மாட்டோம்!’ என்ற கொள்கை உடையவர்களின் வாழ்க்கை எளிதாக இராது.

 

`வேளை சரியாக இல்லை, கலி முத்திவிட்டது,’ என்று, தாம் கஷ்டப்படுவதற்குப் பல காரணங்கள் கற்பிப்பார்களே தவிர, தாம் எப்படி தம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற யோசனை அவர்களுக்கு எழுவதில்லை.

 

வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது. `நான் செய்வதுதான் சரி!’ என்ற பிடிவாதம் இல்லாது, சற்றே பணிவுடன் நடந்தால்தான் குழப்பங்கள் அதிகரிக்காது. நிம்மதிக்காக மாறித்தான் ஆகவேண்டும்.

 

புதிய நிலையை ஏற்பது

 

`மாற்றம்என்றால், வெளிநாடுகளுக்குப் போய் திரும்பியதும், குட்டையான ஆடைகளும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய நுனி நாக்குத் தமிழும், அடிக்கடி தோள்களைக் குலுக்கிக்கொள்வதும் இல்லை.

 

மேற்கல்விக்காகவோ, அல்லது உத்தியோக நிமித்தமோ, வேற்றூருக்குச் சென்று, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சுதந்திரமாக உணர்ந்து, தம் வயதொத்தவர்களுடன் தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் வெற்றியளிக்கும் மாற்றமில்லை.

 

::கதை::

திருமணமானபின், இந்தியாவிலிருந்து நான் மலேசியா வந்தபோது, எல்லாமே வித்தியாசமாக இருந்ததுபோல் உணர்ந்தேன்.

 

உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்ததும், என் சக, சீன ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோரிலிருந்து தனித்துத் தெரிந்தேன். நான் இருந்தபடியே என்னை ஏற்க முடியவில்லை அவர்களால்.

 

“When you are in Rome, do as the Romans do!” என்றார்கள் சிலர், கேலியாக.

 

அதைத்தான், “ஊருடன் ஒத்து வாழ்!” என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

 

தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளாதே!” என்று முகத்தைச் சுளித்தாள், ஒருத்தி.

 

உன் நிறத்துக்கு வெள்ளை நிற முகப் பவுடர் கூடாது. பழுப்பு நிறமாகப் பார்த்து வாங்கு!” என்று நட்புடன் அறிவுரை கூறினாள் இன்னொருத்தி.

 

புதிய சூழ்நிலையில் அதிக மன இறுக்கமோ, குழப்பமோ இல்லாதிருக்க ஒரு வழிதான் இருந்தது.

 

தாய்மொழி, உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடையணி இவற்றை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.

 

அதற்கும் கேலி: “எப்போதும் புடவையே உடுத்துக்கொள்கிறீர்களே! உங்கள் கணவர் புகார் செய்வதில்லையா?”

 

எனக்கு வந்ததே கோபம்!

 

இதில் complain பண்ண என்ன இருக்கிறது? அவருடைய அம்மா புடவை கட்டியதைப் பார்த்து வளர்ந்தவர்தானே!”

 

நான் எதற்கு ஆத்திரப்பட்டேன் என்று கேட்டவளுடைய புத்திக்கு எட்டவில்லை. பயந்துவிட்டாள்.

 

பேச ஆரம்பித்தபோதே, அம்மா சொல்லிக் கொடுத்தது நான் பேசும் தமிழ். அதை எதற்காக மாற்றவேண்டும்?

 

`புரியவில்லை,’ என்று தமிழர்கள் பலர் குறை கூறினார்கள்.

 

நீங்கள் ஏன் எங்களைப்போல் பேசக்கூடாது? எல்லாரையும் உங்களைப்போல் மாற்ற வேண்டும் என்று பார்க்கிறீர்களோ?” என்று வேறொருத்தி சண்டை பிடித்தாள்.

 

நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று பதிலடி கொடுத்தேன்.

 

என் உச்சரிப்பைக் கேட்டு யாரும் தங்களுடையதை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளப் போவதில்லை. முடியவும் முடியாது. (பத்து வயதுக்குள் ஒரு மொழியைக் கற்றால்தான் சரியான உச்சரிப்பு வரும். இந்த விதிக்கு முன்னணி நடிகர்கள் விலக்கு).

 

உச்சரிப்பில் என்ன, உயர்த்தி, மட்டம்? திரைப்படங்களில் பலவித தமிழ் உச்சரிப்புகளைக் கேட்டு, நாம் புரிந்துகொள்ளவில்லையா?

 

மொழியும், அதன் உச்சரிப்பும் இரு தரப்பினருக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்குத்தான். பிரிக்க இல்லை. ஏனோ, பலருக்கும் இது புரிவதில்லை. எல்லாரும், எல்லா விதத்திலும், தம்மைப் போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

மாறுவதால் வெற்றி

 

ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களைப் பார்த்தாலோ, அல்லது அப்போது எழுதப்பட்ட கதைகளைப் படித்தாலோ, இன்று பலருக்கும் ரசிக்காது. அவற்றில் இருக்கும் கருத்துகள் இக்காலத்திற்கு ஒவ்வாதிருப்பதுதான் காரணம்.

 

::கதை::

 

கற்பனைத் திறனுக்கு மாற்றம் அவசியம்.

 

இது புரிந்து, பெரும் வெற்றி கண்டவர் சிட்னி ஷெல்டன் (SYDNEY SHELDON) என்ற அமெரிக்க எழுத்தாளர்.

 

1948-இலேயே, திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

 

அவரது முதல் புதினத்தில் நல்ல கரு இருந்தது. ஆனாலும், விற்பனை ஆகவில்லை. அதை மூன்றே பேர்தான் வாங்கினர் என்று சொல்லிச் சிரித்ததைக் கண்டிருக்கிறேன். அவரே ஒன்று வாங்க, அவருடைய தாய் இன்னொன்றை வாங்கினாராம்.

 

வாசகர்கள் மனத்தை எப்படிக் கவருவது என்று யோசித்து, தன் எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

 

எப்படி?

 

சிறப்பான கருவைக் கொண்ட கதைகளுக்குள், படுக்கையறைக் காட்சிகளை நிறையதொடர்ச்சியாகப் பல பக்கங்களில்புகுத்தினார். நடையும் விறுவிறுவென்று இருந்ததா? அமோகமான விற்பனை.

 

`முன்பு அப்படித்தான் எழுதினேன். இன்றும் அப்படித்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதமாக மாற மறுத்திருந்தால், அவருடைய எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக ஆகியிருக்குமா?

 

மாறுங்கள், ஆனால் நல்லவிதமாக.

 

வெற்றி காண்பதற்கு….. மாறுங்கள்.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

0 comments:

Post a Comment