‘தனிமையும் சமூகமும்!’
அழுகின்ற வேளை தனிமையில் அழுதிடு மனமே!
அவலத்தின் வலியை யாரறிவார் உலகிலே?
கண்ணீரைக் கண்டால் காரணம் கேட்பார் பலரே!
கலங்கிய உள்ளத்தைப் புரிவார் சிலரே!
சிரிக்கின்ற வேளை நண்பரோடு சிரித்திடு!
சிந்தையில் மகிழ்ச்சியின் சிறகுகளை விரித்திடு!
இன்பத்தைப் பகிர்ந்தால் இரட்டிப்பாய் மலர்ந்திடும்!
இதயத்தில் மகிழ்ச்சியின் இனிய நினைவு நிலைத்திடும்!
கூட்டத்தில் அழுதால் நடிப்பென்று உரைப்பார்கள்!
கூறாத துயரத்தையும் கற்பனை செய்வார்கள்!
கண்ணீரின் காரணம் அறியாமலே பலபேர்!
கேலியும் கிண்டலும் செய்திடுவார் அந்நேரம்!
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!
தனக்குள்ளே பேசினால் ஏதோவென்று நினைப்பார்கள்!
மனிதனின் உணர்வுக்கு மதிப்பளிக்க மறந்திடுவார்!
மற்றவர் மனநிலையை அறியாமலே தீர்ப்பிடுவார்!
அழுகையும் சிரிப்பும் வாழ்வியலின் இருபக்கம்!
அடக்கிட முடியாத உணர்வுகளின் திருக்கோணம்!
பிறர் என்ன சொல்வாரென்று வாழாதே மனிதா!
பிறர் மனம் புண்படாமல் வாழ்வதே பெருமிதம்!
-செ.மனுவேந்தன்
‘சோம்பல் முறிக்கும் சோலை'
சோம்பல் முறிக்கும் சோலை இதுவோ
பசுமை போர்த்திய வனப்பகுதி தானோ?
குளிர்காற்று வீசும் நந்தவனச் சூழலில்
தேனிசை பாடும் சிட்டுக்குருவிகள் நடுவே
தென்றல் தீண்டும் நறுமணப் பூக்களோ?
அமைதி தவழும் அடர்ந்த காட்டில்
புத்துயிர் அளிப்பது உந்தன் எழிலோ?
மங்கையர் அழகும் மயக்கும் எழிலே
உள்ளம் மகிழும் உன்னதத் தலமே
களைப்பு நீக்கும் மருந்து நீதானோ?
'கண்கள் பேசும் மௌனக் காதல்'
உதடுகள் மௌனம் காக்கும் வேளையில்,
உன் விழிகள் ஏனோ கவிதை பாடுகிறது!
ஒரு சிறு அசைவில் ஆயிரம் அர்த்தங்கள்,
பார்க்கும் பார்வையில் பல நூறு காவியங்கள்!
அகராதியில் இல்லாத வார்த்தைகளை எல்லாம்,
உன் கருவிழி அசைவுகள் எனக்குத் தருகிறதே!
பேசும் மொழியை விடவும் பேரழகு கொண்டது,
உன் கண்கள் பேசும் மௌனக் காதலே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:
Post a Comment