"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:14


ஞாயிற்றுக் கிழமையில் தேவாலயம் அல்லது வெள்ளிக் கிழமையில் ஆலயம் என்பது போல சுமேரியர்களுக்கு சமயம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் எல்லா நேரமும் இறை வழிபாடு செய்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அல்லது செயலையும் அவர்களின் கடவுளே கட்டுப்படுத்தியது. இதனால் கடவுளுக்கு பணியாற்றுவதே இந்த உலகில் அவர்களின் பங்கு என சுமேரியர்கள் நம்பினார்கள். கடவுள் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்கவில்லை. கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அத்துடன் அவரை இடைவிடாது சாந்தப்படுத்த வேண்டியும் இருந்தது.இதன் பொருட்டு,பண்டைய சுமேரியர்,கடவுளின் கருணையை உறுதி செய்ய,தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும்,பிரார்த்தணைக்கும்,தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள்.தெய்வங்களுக்கு உணவு படைத்தலும் மிருகங்கள் பலியிடுதலும் வழமையாக இருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு தானம் கொடுத்தார்கள்.மத குருவே ஆண்டவனுடன் கதைத்து தமது கொடையை ஆண்டவனுக்கு வழங்குவார் என நம்பினர்.அதனால் தானத்தை மத குருவிடம் கொடுத்தனர்."உருவ சிலைகள், தாயத்துக்கள், மந்திரங்கள் "[Idols,amulets and charms] அங்கு முக்கியமாக இருந்தன. பொது மக்களின் நாளாந்த பிரார்த்தணைக்கு செவி சாய்ப்பதை விட வேறு முக்கிய வேலைகள் தலைமை கடவுள்களுக்கு இருக்கிறது என் நம்பினர்.ஆகவே தனிப்பட்ட கடவுள்கள் ஏற்படுத்தப்பட்டு அவரை தலைமை கடவுள்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாக பாவித்தார்கள்.அதாவது தனிப்பட்ட கடவுள்கள்
மக்களின் பிரார்த்தணையை கேட்டு அதை தலைமை கடவுள்களுக்கு அஞ்சல் செய்வதாக கருதினார்கள்.

வீடு,தாயகம் என்ற கோட்பாடு மேலும் வளர்ச்சி அடைய,முதன்மையான இயற்கை கடவுளை தவிர ஒவ்வொரு நகரமும் தமக்கு என சிறப்புமிக்க தனிப்பட்ட கடவுளை வைத்திருக்க  தொடங்கினார்கள். இந்த சிறப்பு மிக்க கடவுள் தான் தமது நகரத்தை,தமது நிலத்தை தமது மக்களை ஆள்பவர் என நம்பினர். ஆகவே இவரே தம் தாயகத்தின் தலைவர் என போற்றினர். அங்கு இந்த கடவுளிற்கு பதிலாக உண்மையில் மத குருவே ஆட்சி நடத்தினார்.இந்த சிறப்பு மிக்க கடவுளுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக அல்லது கௌரவப் படுத்த,மத குரு மக்களை ஆலயம் கட்ட செய்தார். இது சுமேரியன் நகரத்தில் பெரியதாகவும் சிறப்பு மிக்கதாகவும் இருந்தது.இந்த கட்டிடம் குன்று மாதிரி அங்கு எழும்பியது.இந்த ஆலயம் சிகுரத்[ ziggurat] என அழைக்கப்பட்டது. மெசொப்பொத்தேமியா சேற்று நிலமாகவும்,தண்ணீரால் நிரந்த நிலமாகவும்,மேலும் வறண்ட சம மட்டமான தரையாகவும் இருந்தது.இதனால்,ஆண்டவனை வணங்குவதற்காக உயரமாக எழுப்பப்பட்ட சிகுரத் எமக்கு வியப்பை தரவில்லை.அது மட்டும் அல்ல,உலகம் முழுவதும் ஆண்டவன் உயரத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆகவே மலை அல்லது குன்றுகள் இல்லாத இந்த மெசொப்பொத் தேமியாவில் இதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை.நகரத்தின் சிறப்பு தெய்வத்தை விட அங்கு மற்ற தெய்வங்களும் சிறு உருவ சிலையில் இருந்தன.இந்த
சிகுரத் கைவினைஞர்களின்[craftsmen] வேலைத் தலத்தையும் வழிபாட்டிற்கான ஆலயத்தையும் கொண்டிருந்தது.சிற்பம் வடிப்பவனும் மாணிக்க கல் வெட்டுபவனும் நெய்த கம்பளியை படுவேகமாக காலால் மிதித்து மென்மையாக்கிறவனும் [fullers]ஆயுதங்கள் செய்யும் உலோக தொழில் நிபுணர்களும் அங்கு இருந்தனர்.பொதுவாக,சிகுரத் எவ்வளவு உயரமாக கட்ட முடியுமோ அவ்வளவு உயரத்திற்கு கட்டினார்கள். சொர்க்கத்திற்கு போக அல்லது அதை அடைய ஒரு முயற்சி போல் இது தெரிகிறது.உதாரணமாக,உருக் நகர "அனு" ஆலயம் 50 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்தன.சிகுரத்தின் மேல் கடவுள் வாழ்வதாக சுமேரியர் நம்பினர்.சுமேரிய ஆலயத்தில் அமைந்த முதன்மையான செவ்வக தேவஸ்தானம் 'செல்ல' [cella] என அழைக்கப்பட்டதுடன்,ஆலயத்தின் முதன்மை தெய்வத்தின் முன் செங்கல்லால் கட்டப்பட்ட  பலிபீடம் அல்லது பிரசாதம் படைக்கும் மேசை இருந்தது.இந்த மேசை விலங்கு அல்லது மரக்கறி நிவேதனத்திற்கு[அதாவது ஆண்டவனுக்கு ‘காண்பிப்பதற்கு’] பாவிக்கப்பட்டது.'செல்ல' [cella] வின் யாதேனும் ஒரு பக்கத்தில்,கோயிலின் திருச்சிறை நெடுக[நடைபாதை நெடுக],மத குருமாருக்கான அறைகள் இருந்தன.சுமேரிய ஆலயத்திற்கு அருகில் அதிகமாக,தானியகிடங்கும் [களஞ்சியம்] மற்றும் பண்டகசாலையும் இருந்தன.பெரும் பாலும்,மத குரு,பெண் மத குரு,பண்ணிசையுடன் பாடும் பாணர்கள் மற்றும் அடிமைகள் ஆலயத்தில் தொண்டு செய்தனர்.பலதரப்படட உணவு படைத்தலும் பலியிடுதலும் மற்றும் எண்ணெய் அல்லது மதுபானம் கொட்டுவது போன்றவை[food sacrifices and libations] உட்பட பல சடங்குகள் அங்கு
ஒவ்வொரு நாளும் பொது மக்களுக்காக நடை பெற்றன.அதாவது அங்கு கடவுளுக்கு தினமும் உணவு,விலங்குகள் என நிவேதனம் [மது,பியர்,பால், இறைச்சி போன்ற படையல்] செய்தார்கள்.அது மட்டும் அல்ல பல நாட்கள் நீடிக்கும் திரு விழாக்களும் நடத்தினார்கள்.அமாவாசை,7ஆவது,15 ஆவது நாள், மாதக் கடைசி போன்ற நாட்களில் சிறப்பு விருந்து படைத்தனர்.எப்படி ஆயினும் மிக முக்கிய நாள் புது வருடப் பிறப்பாகும்.புது வருட நாளில், அரசன் ஈனன்னா தெய்வத்தின் தலைமை பெண் மத குருவை அல்லது ஈனன்னாவை பிரதிநிதி படுத்தும் பெண் மத குருவை ஒரு அடையாள பூர்வமாக திருமணம் செய்து கொள்கிறார்.வருடம் முழுவதும் நல்ல அறுவடை நடை பெறுவதையும் அங்கு வாழும் மக்கள் செல்வச் செழிப்பாக உணவிற்கு தட்டுப் பாடு இன்றி இருப்பதையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் மூதாதையர்கள் தெய்வமாக கருதப்பட்டார்கள்.குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்ததும் அவர் வீட்டிற்கு அடியில் புதைக்கப்பட்டார்.அவரை வணங்கி,அவரிடம் இருந்து தமக்கும்,குடும்பத்திற்கும் அறிவுரை கோரினார்கள்.சிலவேளை,அவருக்கு குழாய் மூலம் உணவும் ஊட்டினார்கள்.ஒரு நாளில் மூன்று தரம் மத குரு ஆண்டவனுக்கு உணவும் பானமும் படைத்தார்.கடவுள் இருக்கும் மூலத்தானத்திற்கு மத குரு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.ஆலயத்தின் தலைமையை சங்க[sanga/சங்கம்?] என அழைத்தார்கள்.ஆலயத்தின் கணக்கு வழக்குகள்,கட்டிடங்கள்,நாளாந்த நடவடிக்கைகள்,போன்றவை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை இந்த "சங்க" கவனித்தது.சுமேரியா ஆலயத்தின் ஆன்மிகத் தலைவரை என்["en"] என அழைத்தனர். அத்துடன் அவர் பல முறை தெய்வம் ஆக்கப்படடார்.இந்த "என்",அந்த நகரத்தின் முதன்மை கடவுளைப்
பொறுத்து,ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.இந்த "என்" இன் கீழ்,வேறு பல மத குரு நிலைகள் இருந்தன.உதாரணமாக,குட,மக,கல, நின்டின்கிர், இஸ்ஹிப் [guda, mah, gala, nindingir, and ishib]போன்றவை ஆகும்.இவர்களின் சரியான பங்கு தெரியவில்லை.என்றாலும் தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானத்திற்கு பொறுப்பாக "இஸ்ஹிப்"பும் ஆலய கவிஞர் அல்லது பாடகராக "கல"வும் இருந்தனர்.அத்துடன் ஒவ்வொரு நகரமும் ஒரு ஆளுநரை அல்லது அரசனை கொண்டிருந்தது.ஆளுநரை என்சி(ensi) எனவும் அரசனை(lugal) எனவும் அழைத்தனர்.இவர்களுக்கு ஆலயம் கட்டுதல்,அதை பராமரித்தல் போன்ற பல மத கடமைகள் அடிக்கடி இருந்தன.அரசனின் மனைவியை அல்லது அரசியை நின்(nin) என அழைத்தனர்.இந்த "நின்" அதிகமாக,ஆலய பெண் கடவுளின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளை கையாண்டார்.நகர முதன்மைத் தெய்வத்தை அல்லது முதமைத் காவல் தெய்வத்தை இன்பம் மூட்டி மகிழ்விப்பது அந்தந்த நகர தலைவர்களின் கடமையாகவும் இருந்தது.முதன்மை  கடவுள் உட்பட  எல்லா கடவுளினதும் நல்லெண்ணத்தையும்  அருளையும்  மற்றும் கருணையையும்  பெறுவதை,இது மேலும் உறுதிப்படுத்துகிறது. சுமேரியரின் ஆரம்ப காலத்தில் மத குருவே இப்படியான,ஆண்டவனை மகிழ்விக்கும் செயல்களை செய்தார். என்றாலும் நாளடைவில்,அரசன் அந்த மத அதிகாரங்களை தனதாக்கி கொண்டார்.இதனால்,பின்னர் வந்த சுமேரிய அரச குலத்தில்,அரசனே இப்படியான ஆண்டவனை மகிழ்விக்கும்
கௌரவிக்கும் செயல்களை முன்னின்று நடத்தினார்.என்றாலும்,மத குரு இன்னும் பல அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். உதாரணமாக,சகுனம்,கனவுகள் போன்றவற்றிற்கு பலன்கள் கூறும் நிபுணத்துவம் போன்றவைகள் இவர்கள் கையிலேயே இருந்தன.ஒவ்வொரு குடும்பமும் தமக்கென சிறப்பு அல்லது விசேஷச ஆண் அல்லது பெண் தெய்வங்களை கொண்டிருந்தனர்.பொதுவாக,
நெஞ்சுக்கு முன் தங்கள் கைகளை இறுக்கமாகக் பற்றி கடவுளை வணங்கினர்.சுமேரியர்கள் பொதுவாக தம் அந்தரங்க வாழ்க்கையிலும் ஆண்டவன் முழுமையான அதிகாரத்தை செலுத்துகிறார் என்று நம்பினார்கள்.சுமேரியர்கள் பொதுவாக,ஆண்டவனே தீங்கையும்[கேடும்] மற்றும் இடரையும்[துரதிர்ஷ்டம்] தருவதாக அல்லது தோற்றுவித்ததாக நம்புகிறார்கள்.அதே போல எல்லா நற்செயல்களும் நன்மைகளுக்கும் ஆண்டவனே பொறுப்பு என கருதுகிறார்கள்.கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று தீர்க்கமாக நம்புகிறார்கள் அல்லது அப்படி  நம்ப வைத்திருக்கிறார்கள்.அதிலே குறிப்பாக அடிமையாக்கப்படட மக்கள் இனம் தம் மீது திணிக்கப்பட்ட வேலைப்பளுவிக்கும் அல்லது அரசனுக்கும் மத குருக்கும் தாம் செய்யும் தொண்டுகளுக்கும் தம் மீது அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்திற்கும் கடவுளே காரணம் என்றும்,எல்லோருக்கும் பொதுவான,எல்லாம் அறிந்த அவன் செய்வதால் அது சரியாகவே இருக்கும் எனவும் கருதினார்கள்."தீதும் நன்றும் பிறர்தர வாரா,நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" அதாவது:நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை,அதே போல,துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர்
தருவதில்லை என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள் அவர்களுக்கு தெரியா?
தனிப்படட மனிதனின் துன்பத்தை தீர்க்க,கடவுள் எந்நேரமும் துணை புரிவதில்லை.ஆகவே,வாழ்வில் நன்மையும் தீமையும் உண்டு என சுமேரியர் கருதினர்.தாம் கடவுளின் அடிமைகளாகவே தோற்றுவிக்கப்பட்டதாகவும்,தாம் இறந்ததும் பாதாள உலகத்திற்கு போவதாகவும் மேலும் நம்பினர்.

மேலும் சுமேரிய பொது மக்கள் தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப்படுத்துகிறார் என நம்பினார்கள்.எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கியதாகவும்  நம்பினர்.தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் இருக்கவில்லை.தமது தொழில் நுட்ப,சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இல்லை.சுமேரிய மத குரு மார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை அதற்கு தக்கதாக திரித்து இந்த தொழில் நுட்ப,சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து,அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர்.

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 15தொடரும்

0 comments:

Post a Comment