"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:16



மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியம்[Epic of Gilgamesh]  மரணம் பற்றிய அவர்களின் பார்வையையும் மறுமை[after life] பற்றிய விபரங்களையும் காட்டுகிறது. அது மட்டும் அல்ல அவர்களிடம் மரணத்திற்கான கடவுள் ஒருவரும் இருந்தார்.அங்கே ஈனன்னாவின் சகோதரி, எரேஸ் கி கல்[Ereshkigal] மரண தேவதையாகவும் பாதாள உலகின் ராணியாகவும் இருக்கிறார்.களி மண்ணையும் இல்லு-வே அல்லது வே-இல்லு [Illu-we or We-ilu]  என்ற ஒரு கலகக்கார தெய்வத்தினை கொலை செய்து,அவரின் இரத்தத்தையும் கலந்து மனிதன் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், இதனால், மனிதன் ஒரு பூவுலக மற்றும் ஒரு தெய்வீக கூறுகளை கொண்டிருந்தாலும், மெசொப்பொத்தேமியா தொன்மவியல் மூலம் மனிதன் சாவில்லாதவர் அல்ல என்பதை அறிகிறோம். அது மட்டும் அல்ல,உடல் உயிர்த்தெழுதல் அல்லது உயிர் கூடு விட்டுக் கூடு பாய்தல் போன்ற எந்த கொள்கையையும் அல்லது கருத்துக்களையும் அது கொண்டிருக்கவில்லை.என்கி மனிதனை படைக்கும் போதே, மனிதனுக்கு சாவை கொடுத்துவிடடார் அல்லது விதித்து விடடார். ஆகவே, பொதுவாக, மெசொப்பொத்தேமியா நூல்களில் சாவை,'விதி வழி போதல்'[“to go to one’s fate” ] என மறை முகமாக
சொல்கிறார்கள். மனித உடல் மரணமில்லாமை,என்றும் நிலைத்திருக்கும் தன்மையை அடைய தேடும் முயற்சி பயனற்றது என்பதை மெசொப்பொத்தேமியரின் கில்கமெஷ் காப்பியம் எமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த இதி காசத்தில், ஒரு கட்டத்தில்,என்கிடு சாவைப் பற்றிய தனது கவலையை கில்கமெஷிடம் தெரிவிக்கிறான்.அதற்கு கில்கமெஷ் இவ்வுலகில் எவருமே நிரந்தரமாக இருப்பதில்லை,நம் வாழ்வு குறுகியது, முகில் போலக் கலைந்து போகும்;என சிரித்து அதை நிராகரிக்கிறேன்.என்றாலும்,என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து,குழப்பம் அடைந்து,நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடிச் சென்றான்.உட்னபிசிதிம் ஊழிவெள்ளம் பற்றிய கதையை சொல்லி, கில்கமெஷிற்றுக்கு சாவற்ற வரத்தை பெற முயற்சிக்கும் வேட்கை வீணானது, ஏனென்றால்,மனிதனின் படைப்பில் இறப்பு என்ற விதையும் புதைக்கப் பட்டுள்ளது. அதனால், இறப்பில் இருந்து எவராலும் தப்ப முடியாது,கடவுள் வேண்டுமென்றே இப்படி செய்தார் என விவரித்தார். கில்கமெஷின் மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறியும் பயணத்தை இந்த நூல் கூறியது. என்றாலும்,அவர் உருக் நகருக்கு இறுதியாக திரும்பும் போது, ஒரு உண்மையை கண்டு பிடித்தார். அதாவது, அவரும் மற்ற மனிதர்கள் போல் ஒரு நாள் கட்டாயம் இறப்பார். ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி,ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி-
அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்].ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது என்பதை அவர் உணர்ந்தார். எனவே,மனித சாதனைகள் ஒன்று தான் இவ் உலகில் எமக்கு உண்டு.அது ஒன்று தான் மரணமில்லாமல்,மனித இனம் வாழும் மட்டும் இவ் பூவுலகில் நிலைத்திருக்கும். ஆகவே,சிறந்த மனிதர்கள்,இந்த பூவுலகில், தமது செயல் களாலும் சாதனை களாலும்,நிலையான புகழை அடைவதே சிறந்த வழி என்பதை, கில்கமெஷ் காப்பியம் சுட்டிக் காட்டுகிறது எனலாம். ஆகவே,மெசொப்பொத்தேமியா சமயத்தில், மரண மில்லாமை என்பது,உண்மையில்,எதிர்கால தலைமுறையினரின் நினைவுகளில் குடியிருப்பதே ஆகும்.

மேலும் இறந்த உடலை அல்லது காலியான பிணத்தை [அக்காடியர்கள்  மொழியில்:pagaru],மெசொப்பொத்தேமியா இலக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத் துடன் ஒப்பிடுகிறார்கள். மேலும் பூமியில் அடக்கம் செய்தவுடன்,களி மண்ணில் இருந்து வடிவமைக்கப்பட்ட  உடல் மீண்டும் களி மண்ணுக்கு திரும்புகிறது என நம்புகிறார்கள். மெசொப்பொத்தேமியர்கள் சாவை ஒரு முடிந்த முடிவாக கருதவில்லை.

இறந்தவர்கள் ஆவி அல்லது பேயாக வாழ்கிறார்கள் என
நம்புகிறார்கள். சுமேரிய மொழியில் அதை  gidim என்றும் அக்காடியர்கள் மொழியில் eṭemmu என்றும் அழைக்கின்றனர். என்றாலும் இந்த ஆவி[eṭemmu],இறப்பதற்கு முன்பே மனித உடலில் இருந்ததா அல்லது இறக்கும் போது மட்டுமே அங்கு வந்ததா என்பது தெரியா? ஆகவே இறப்பு என்பது ஒரு நிலைமாறுபடுகின்ற, இடைக்கால நிலையாகும். எனவே, எகிப்தியர்,  இந்தியர் உட்பட மற்ற நாகரிகங்கள் போல் சுமேரியனும் மரணத்தின் பின்னர் மனித உயிருக்கு வாழ்க்கை/மறுமை உண்டு என நம்பினார்கள். என்றாலும் மற்றவர்களை போல் இல்லாமல் சுமேரியர் தாம் மரணமானதும் கொடிய, இரக்கமற்ற பாதாள உலகத்திற்கு [underworld] /இருண்ட உலகொன்றுக்குச் செல்வதாகவும், அதன் பின் அங்கிருந்து தமக்கு என்றும் விடுதலை இல்லை என்றும் நம்புகிறார்கள். அது மட்டும் அல்ல தமது நாளாந்த வாழ்வில் என்றும் வியாபித்து இருந்த கடும் உழைப்பில் இருந்தும் போரில் இருந்தும் ஒரு முழுதான ஓய்வு பெரும் இடமாக மறுமையை பார்த்தார்கள். மேலும், இந்த ஆவி,மனித உடல் சார்ந்த தேவைகளை,அதாவது பசி,தாகம் போன்றவற்றை கொண்டிருந்தன. ஆகவே,இந்த அச்சந்தருகிற,மிக மோசமான இடத்தில் மனிதர்களின் ஆவி[கூளி,குறளி] புழுதியை[தூசியை] சாப்பிட்டுவதாகவும் வயிற்றினால் தவழ்ந்து செல்வதாகவும் நம்பினர்.இந்த மிகக்கொடிய பயங்கரமான இடத்தை புழுதி வீடு["house of dust"] என அழைத்தனர்.இந்த பேய்த்தோற்றத்தில் ஒரு சில ஆண்டுகள் கழிந்த பின் அல்லது உயிர்கள் அங்கு துன்பமனுபவித்து சில காலத்தின் பின்னர்,இறந்தவரின் ஆவி படிப்படியாகத் தேய்வுற்று மறக்கப்பட்ட நிலைக்கு மாறுகிறது.மேலும் வெள்ளங்களைப் பற்றியும் உலகை மூழ்கடித்த ஏழுநாள் பெரு வெள்ளம் பற்றியும் பல நம்பிக்கைகள் அவர்களிடம்
நிலவின.அவர்கள் பொதுவாக இறந்தவர்களை எரியூட்டுவதற்கு பதிலாக அடக்கம் செய்தார்கள். இறந்தவர்களுக்கு சொந்தமான சில பொருட்களும் அவர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டன. சடலங்களைப் புதைக்கும்போது சடலங்களுக்கு அருகில் சவக் குழியுள் உணவும் நீரும் வைக்கப்பட்டன. இதனால் ஆவி பசி கொள்ளாது என கருதினர். காலஞ்சென்றவர் மேல் ஆண்டவன் அன்பாக ஆதரவாக நடவடிக்கை மேற்கொள்ள அவரை தூண்டும் முகமாக சிலவேளை அடக்கத்தின் பின் மாதம் ஒரு முறை நினைவுக் கொண்டாட்டம் கடைப் பிடித்தனர். இது அரச குடும்பத்தனரின் வழக்கமா அல்லது எல்லோருக்கும் பொதுவானதா என்பது புரியவில்லை. அது மட்டும் அல்ல உணவும் பானமும் படைப்பது இம்மைக்குரிய பாக்கியம் எனவும் கருதினர். இஷ்தாரின் பாதாள உலக வருகை ["The Descent of Ishtar to the Underworld"]  என்ற காவியம் மூலம் இறந்தவருக்கு ஏன் சுமேரியர்கள் படைக் கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. இறந்தவர்கள் இருட்டில்,களி மண்ணை சாப்பிட்டு,பறவைகள் போல சிறகுகளுடன் உடுத்து வாழும்,"kur-nu-gi-a" என்று அழைக்கப்படும் திரும்பி வர முடியாத நாடு ஒன்றிற்கு போக ஒரு முறை இஷ்தார்[ஈனன்னா] எண்ணினார். இஷ்தார் பாதாள உலகின் முதலாவது வாசலிற்கு போனதும்,அவர் காவலாளியை
கூப்பிட்டு, "ஏ காவலாளியே,தயவு செய்து கதவை திறந்து என்னை உள்ளே போக விடு" என்று கேட்டார். ஆனால்,அவன் ஒன்றும் சொல்லாமல்,கதவையும் திறக்காமல்,அவளை கதவிற்கு மேலால் உற்றுப்பார்த்தான். எனவே அவள் காவலாளியை அச்சுறுத்தினாள் . "காவலாளியே,நீ இந்த வாசலை எனக்கு திறக்காவிட்டால்,நான் இந்த வாசலை உடைத்து திறப்பேன், அது மட்டும் அல்ல, பயங்கரமான இருண்ட இடத்தில், வாழும் ஆவிகளை பாதாள உலகில் இருந்து விடுவிப்பேன். உன் இரக்கமற்ற அரசியின் கைப்பிடியில் இருந்து விடுவித்து அந்த ஆவிகளை மனிதர்கள் வாழும் பூமிக்கு எடுத்து செல்வேன்!. இதனால் ஆவிகள் அங்கு நிறைந்து,பெருகி உயிர் இனங்களை சாப்பிடும்" என எச்சரித்தாள். இதில் இருந்து இறந்தவருக்கு படைத்தலை ஒரு பயத்தின் அடிப்படையிலேயே கடைப்பிடிக்கிறார்கள் என்பது எமக்கு புலன்படுகிறது. அப்படி சாந்தப்ப படுத்தா விடடால்,ஆவிகள் திரும்பி வந்து பல பல துன்பங்களை, சேதங்களை இவ் உலகிற்கு தரும். எனவே,இறந்த
உடலுக்கு சரியான அடக்கமும், துயருறுதலும் தேவை. அப்பதான் பிணம் அடுத்த உலகிற்கு நிலைமாற்றம் அடைந்து அது[ஆவி] மீண்டும் திரும்பி இவ் உலகிற்கு வருவதை தடுக்கும். மேலும் கில்கமெஷ் காப்பியத்தின் 12 ஆவது முத்திரையும் மற்றும் சில நூல்களும், இறந்தவரின் ஆவியின் நல் வாழ்வு,அவர் எப்படி இறந்தார் என்பதிலும்,அவரின் உடல் ஒழுங்காக அடக்கம் செய்யப்பட்டதா என்பதிலும் அவரின் உற்றார் உறவினர்கள் தொடர்ந்து அவருக்கு குறிப்பிடட திவசம் செய்கிறார்களா என்பதிலும் பொறுத்து உள்ளது என்கிறது. என்றாலும் ஒரு நேர்மையான,நியாயமான,தர்மம் கடைப் பிடித்தவரின் விதியும்[நிலையும்] மற்றும் ஒரு குற்றவாளி,சட்டத்தை மீறியவரின் விதியும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பது புரிய வில்லை. ஆனால்,பாதாள உலகிலும்,சமூக படிநிலை பேய்களுக்கு இடையில் கடைப்பிடிக்கப்பட்டது.அவர்களின் பாதாள உலக சமூக படிநிலை இரண்டு காரணியில் தங்கி இருந்தன. அவர் உயிருடன் இருந்த போது இருந்த அவரின் சமூக நிலை மற்றும் அவர் இறந்த பின் அவரின் உடலும் கல்லறையும் பெற்ற பராமரிப்பும்,மரியாதையும் ஆகும். உதாரணமாக, சுமேரிய ஊரின் அரசனான ஊர் நம்முவின் இறப்பு [Death of Ur-Namma (Ur-Nammu)] பற்றிய நூல் இதை தெளிவாக சொல்கிறது.“பாதாள உலகின் உணவு கசப்பாகவும் நீர் உவர் நீராகவும் உள்ளது."எனவே,பேய்கள் தாம் வாழ்வதற்கு, படையல்கள் மூலம் கொடுக்கப்படும் உணவிலும் பானத்திலும் தங்கி இருந்தன. இப்படியான படையல்கள் இல்லாத இடத்து, அவை,பாதாள உலகில் பிச்சைக்காரனாக இருக்க வேண்டி இருந்தது. இப்படி திவசம் செய்து படைப்பது மூத்த ஆண் மகனின் பொறுப்பாக இருந்தது. இது தவறாமல்,ஒழுங்காக தொடரும் மட்டும் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆவிகள் அமைதியாக பாதாள உலகில் இருந்தன. சாந்தப்படுத்தப்பட்ட
பேய்கள் நண்பனாகவும் அவைகளை பூவுலகில் வாழ்பவர்களுக்கு உதவ தூண்டக் கூடியதாகவும் இருந்தது. அது மட்டும் அல்ல,மனிதர்களை தீங்கு படுத்துவதில் இருந்து தடுக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், ஒருவர் அப்படியான சரியான கல்லறை சடங்குகள் பெறாத இடத்து,  அவர் , அமைதியற்ற பேயாக அல்லது தீய பேயாக மாறுகிறார். வேறு சில வேளைகளிலும் இப்படி நடை பெறுகிறது. உதாரணமாக, அடக்கம் செய்யாதவர்கள்,வன்முறை அல்லது அகால மரணம் அடைந்தவர்கள்,  அல்லது கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி அமைதியற்ற பேயாக அலைகிறார்கள் என அறிய முடிகிறது. தம்மை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்களை இப்படியான கொடூரமான, தீய பேய்கள்  துரத்துகின்றன, பிடிக்கின்றன, துன்புறுத்துகின்றன. அது மட்டும் அல்ல காதின் ஊடாக உள் நுழைந்து பற்றிக் கொள்கிறது. இப்படியான பேய்களின் கோபம் மக்களை பல விதத்தில் வருத்துகின்றன. உதாரணமாக,Ludlul bēl nēmeqi என்ற பபிலோனியன் பாடல் ஒன்று, வேலைக்காரன் ஒருவனின் துன்பத்தை, வேதனையை இப்படி கூறுகிறது:

"உருக்குலைக்கும் நோய் என்னை வாட்டுகிறது,
அடிவானத்தில் இருந்து  தீய காற்று வீசுகிறது,
பாதாளத்தில் இருந்து தொல்லை முளைக்கிறது, 
எதிர்க்க முடியாத வலிமை போய் விட்டது,
மலையில் இருந்து லமாஸ்டு[Lamashtu] பேய் இறங்கி விட்டது"

மேலும் லியோனாட் வூல்லே 1930 ஆண்டு ஊர் நகரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது, ஒரு கொடிய மர்மத்தை அம்பலப்படுத்தினார். ஊர் நகரத்தின் அரசனோ அல்லது இராணியோ இறக்கும் போது,பல பணியாளர்கள் மறுமையிலும் அவர்களுக்கு பணி செய்யவென அவர்களை தொடர்ந்து அங்கு, அந்த கல்லறையில் விஷம் அருந்தி தமது உயிரை விடுகிறார்கள் என்பதே. என்றாலும் மனித பலியீடு அரியதாகவே நடந்துள்ளது என சுமேரிய அறிஞர்கள் நம்புகிறார்கள். இது அவர்கள் மறுமையை நம்புகிறார்கள் என்பதை திட்ட வட்டமாக எடுத்து சொல்கிறது. மேலும் பொது மக்கள் கூட,மறுமையில் அவர்கள் பாவிப்பதற்காக அவர்களின் சொந்தமான பொருட்களில் சில அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. உதாரணமாக,கொல்லன் அவனது சில உபகரணங்களுடனும் ஒரு போர் வீரன் அவனது ஆயுதம்,கவசம் உடனும் அடக்கம் செய்யப்பட்டனர். பயிர்கள் வளர்வது ஆண் தெய்வம் தனது மனைவியாகிய பெண் தெய்வத் துடன் கூடலால் ஆகும் என சுமேரியர்கள் நம்பினார்கள். சூடான உலர்ந்த கோடையில் புல்வெளிகளும் வயல்வெளிகளும் பழுப்பு நிறத்திற்கு மாறுவதை இந்த தெய்வங்கள் இறக்கும் காலமாக பார்த்தார்கள். அவை மீண்டும் செழித்து வளர்கிற போது இந்த ஆண் பெண் தெய்வங்கள் புத்துயிர் பெறுவதாக நம்பினர். இதை வருடப் பிறப்பாக/ஆண்டின் தொடக்கமாக குறிப்பிட்டு, அதை ஆலயத்தில் இசையுடனும் பாடலுடனும்
கொண்டாடினார்கள். தமக்கு தேவையான அத்தனையையும் ஆண்டவன் கொடுத்து உள்ளார் என சுமேரியர் நம்பினர். அதனால் ஆண்டவனின் நோக்கம் நல்லதே என கருதினர். மேலும் ஆண்டவன் மிக பலம் உள்ளவராகவும் உலகை கட்டுப்படுத்துபவராகவும் உள்ளார் எனவும் நம்பினர். அப்படி ஆயின் தமக்கு ஏற்படும் துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடையூறு களுக்கும் அவர்களுக்கு ஒரு விளக்கம் தேவைப்பட்டது. ஆண்டவனை கோபமூட்டும், சினங் கொள்ளுவிக்கும் மனிதனின் செயலே இதற்கு காரணம் என முடிவு எடுத்தனர்.அதை மனிதனின் பாவச் செயல் என வர்ணித்தனர். எவராவது ஆண்டவனை வெறுப்பூட்டினால், ஆண்டவன் பேயை அனுப்பி அந்த பாவச் செயல் செய்தவருக்கு தண்டனையாக உடல்நலமின்மை, நோய், இயற்கை அழிவு முதலிய வற்றை கொடுப்பதாக நம்பினர். பேய்கள் இருவகையாக இருந்தன. ஒன்று நல்ல பேய் மற்றது தீய பேய்.பாவச் செயலுக்கு தண்டனை அளிக்க,ஆண்டவன் கெட்ட  பேய்களை அனுப்புகிறார் என எண்ணினர். உதாரணமாக, லமாஸ்டு [Lamastu] பேய்கள் புதிதாக பிறந்த குழந்தைகளின் மரணத்துடன் சம்பந்தப் பட்டது. அதே போல,கல [gala] பேய்கள் ஒருவரின் கனவுக்குள் ஊடுருவக் கூடியது. ஆகவே ஒருவர் பாதிக்கப்பட்டால்,ஆண்டவனை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை. ஆண்டவனை பெருமைபடுத்தி,அவருக்கு முறையீடு செய்து பொறுமையாக ஆண்டவன் அந்த பாதிப்பில் இருந்து மீட்கும் வரை காத்து இருக்கவேண்டும் என சுமேரியர் எழுதினார்கள். அங்கு எண்ணிறந்த பிரார்த்தனைகள் மற்றும் துதிப்பாடல்கள் கண்டு எடுத்துள்ளார்கள்.இந்த மதம் சார்ந்த நூல்கள் எமக்கு அவர்களின் உணர்வுகள்,நம்பிக்கைகள் மற்றும்  அச்ச உணர்வுகளை எமக்கு தெளிவு படுத்துகின்றன.
உலகளாவிய கேள்வியான, ஏன் சில மனிதர்கள் மற்றவர்களை விட கூடுதலாக துன்பப் படுகிறார்கள் என்பதற்கு அவை ஒரு விடையை தர முயல்கின்றன. இதை அவர்கள் தெய்வீக தண்டனைகள் என ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியான ஒரு பபிலோனியன் நூல் ஒன்றில்:

தெய்வத்திற்கு எதிராக பாவம் செய்தாரா?
மூத்தோருக்கு எதிராக தீங்கு செய்தாரா ?
பொய் சொன்னாரா?
பிழையான தராசு பாவித்தாரா? 
பிழையான கணக்கு வழக்கை ஏற்றுக் கொண்டாரா  ? 
பிழையான காணி எல்லைகளை ஏற்படுத்தினாரா?
அயலவர் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்தாரா?
அயலவரின் மனைவியை தீண்டினாரா? 
இப்படி பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
[ Leonard W. King, Babylonian Religion and Mythology (London, 1899), pp. 218, 219.]

பண்டைய சுமேரியர்கள் எது சரி எது பிழை என்பதை தெரிந்து இருந்தார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில், மேசொப் பொத் தேமியர்கள் தமது பாவ சுபாவத்தை அறிந்து இருந்தார்கள்.ஆகவே,மன்னிப்பு அளிக்கும் படி தமது பிரார்த்தனை களில் பாடினார்கள். அப்படியான பண்டைய சுமேரிய பிரார்த்தனை ஒன்றை கீழே தருகிறோம். 

"கடவுளே எனது வரம்பு கடந்த செயல் பல பல,பாவம் பெரிது,
"பெண் தேவதையே,எனது வரம்பு கடந்த செயல் பல பல,பாவம் பெரிது,
"நான் புரிந்த அக்கிரமம்,உண்மையில் எனக்கு தெரியா,
நான் செய்த பாவம்,உண்மையில் எனக்கு தெரியா,. . . .
"நான் செய்த குற்றத்தை,காற்று எடுத்து செல்ல அனுமதி, 
"உடை போல்,நான் செய்த தவறுகள் கிழிந்து போகட்டும், 
"கடவுளே,எனது வரம்பு மீறிய செயல்கள் ஏழு தரம் ஏழு,அதை அகற்றி விடு,
பெண் தேவதையே,எனது வரம்பு மீறிய செயல்கள் ஏழு தரம் ஏழு,அதை அகற்றி விடு,."-[Ferris J. Stephens in J. B. Pritchard, ed., Ancient Near Eastern Texts Relating to the Old Testament (Princeton, 1950), pp. 391, 392.]

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 17தொடரும் 


0 comments:

Post a Comment