பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

இன்றைய சூழல்
தனிக்குடித்தன இளசுகள் பெற்றோர் அவதாரம் எடுக்கும் தருணம், படுஅவஸ்தையானது. பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர்களின் ஆலோசனைக்கு வழியின்றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும்  பரிதாபம்!
தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித்தடுமாறாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியையும் ஒருவயது வரையில் அந்தப் பாப்பாவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு அறியலாம்.
0 - 1 மாதம்
குழந்தையைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகப் போர்த்தவும் கூடாது. எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது. குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும்சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேரத்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம். அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது; அதனால் இரண்டு நாள் கழித்து கொடுக்கலாம் என்று சிலர் தள்ளிப்போடுவார்கள். அது தவறு. ‘கொலோஸ்ட்ரம்எனப்படும் சீம்பாலில் தான், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
பாசப் பிணைப்பு
முதல் நான்கு மாதங்களுக்குள்தான் குழந்தைக்கும் தாய்க்குமான பாசப்பிணைப்பு இறுகும்குழந்தையைக் கட்டி அணைத்து முத்தமிடுதல், மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுதல், மார்போடு அரவணைத்துப் பாலூட்டும்போது அதன் முகம் பார்த்துப் பேசுதல் போன்றவை குழந்தையுடனான பிணைப்பை அதிகரிக்கும். ஆரம்பத்தில், இந்தப் பாசப் பிணைப்பு கிடைக்கும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில்உளவியல் ரீதியான வலிமைஅதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு வீட்டில் போதிய உதவி இருக்காதுவழிகாட்ட யாரும் இல்லாமல், ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள். இன்னும் சில தாய்மார்கள், விளம்பரங்களில் வருவது போல அல்லது தான் எதிர்பார்த்ததுபோல பிள்ளை பிறக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருப்பார்கள். அதனால் குழந்தையிடம் கொஞ்சுவதோ, பேசுவதோ செய்யாமல், இயந்திரகதியில் குழந்தைக்குப் பால் கொடுப்பார்கள். பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தையுடன் தாய் நெருக்கமாக இருக்க வேண்டும்.
குளியல்
பிறந்து, முதல் சில வாரங்களுக்குக் குளிப்பாட்டவில்லை என்றால் கூடப்பரவாயில்லை. இளம் சூடானநீரில் நனைத்துப் பிழிந்த துண்டால் துடைக்கலாம். குளிப்பாட்டுவதற்குமுன், மிதமானபேபி பாடி லோஷனைலேசாக உடலில் தேய்த்து, மெதுவாக மஸாஜ் செய்யலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். சூடான நீரில் குளிப் பாட்டத் தேவையில்லை. வெதுவெதுப்பான நீர் போதும். குளிப்பாட்டிய பிறகு, மிருதுவான டவலால் ஒத்தித் துடைக்கவேண்டும். கண்டிப்பாக பவுடர் போடக் கூடாது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்படலாம்.
உடை
அழகை விட, குழந்தைக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பட்டன்கள், லேஸ், ஜரிகை, ஜிகினா போன்றவை இருக்கும் உடைகளைத் தவிர்த்து விடலாம். ஏனெனில் லேஸ் போன்றவை கண்களில் குத்தலாம். ஜரிகைகள் மெல்லிய சருமத்தைக் கிழித்துவிடும். பட்டன்கள் வாய்க்குள் போக வாய்ப்பு உண்டு.
குழந்தையின் உடலை உறுத்தாத, மிருதுவான, சுகமான  பருத்தி ஆடைகள் சிறந்தவை. தாய்மார்களும், பச்சைக் குழந்தையைத் தூக்கிச்செல்லும் போது, ஜரிகை, ஜிகினா போன்ற வேலைப் பாடுகொண்ட புடவைகள் கட்டியிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தையை எப்போதும் யாராவது தூக்கி வைத்துக் கொண்டே இருப்பதைத் தவிர்க்கவேண்டும். இதை , ‘ஓவர் ஸ்டிமுலேஷன்என்போம். எப்போதும் 10 பேர் மாற்றி மாற்றித் தூக்கிக் கொஞ்சுவதும், பேசுவதும் கூடாது. அதற்காக, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சாமல் தொட்டிலிலேயே போட்டு வைப்பதும் கூடாது (அண்டர் ஸ்டிமுலேஷன் ).இதனால், குழந்தை சோர்ந்து விடும்; அல்லது பிடிபடாமல் அழும். கைக்குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதற்கு, பெரும்பாலும் இதுதான் காரணம். ஜீரணப் பிரச்னை என்று நினைத்து, பல தாய்மார்கள் தங்களுடைய உணவை மாற்றுவார்கள். சிலர், மாற்றுப் பால் கொடுக்க முயற்சிப்பார்கள். அது தேவையல்ல.
1 - 4 மாதங்கள்
இந்தக் காலகட்டத்தில் அநேகமாக எந்தப் பிரச்னையும் குழந்தைக்கு வராது. தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. புட்டிப்பால் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்தச் சமயத்தில்குழந்தையின் பார்வைத் திறன், கேட்கும் திறன், சுற்றுச் சூழலை உன்னித்துக் கவனிக்கும் திறன் ஆகிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் குரல் கேட்கும் திசையில் குழந்தை திரும்புகிறதா, யாராவது அருகில் வந்து கொஞ்சி விட்டுப் போனால் அவர்கள் போகும் திசையில் திரும்பிப் பார்க்கிறதா, சுற்றுச் சூழலைக் கவனிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த மூன்றும் சாதாரணமாக இல்லாவிடில், மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும். இந்த வயதில்தான் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும். மின்சார விளக்கு, மின் விசிறி போன்றவற்றை ரசிக்கும். கழுத்து நிற்பதும் இந்த மாதங்களில்தான். அதனால் ஜாக்கிரதையாகத் தூக்க வேண்டும்.
6ம் மாதம்
ஐந்து மாதங்கள் வரையில் குழந்தையின் எல்லா வளர்ச்சிகளும் ஒழுங்காக இருந்தால், 6-ம் மாதத்தில் இருந்து, தாய்ப்பாலுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்து விடலாம். வேக வைத்து மசித்த காய் கறிகள், புழுங்கலரிசி, பொட்டுக்கடலை, ராகி சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, மசித்த வாழைப்பழம் போன்றவற்றை முதலில் சிறிது சிறிதாகக் கொடுத்துப் பழக்கலாம்.
இந்தச் சமயத்தில் குழந்தை, தானாக எழுந்து உட்கார முயற்சிக்கும். வாயில் போட்டுக்கொள்கிற மாதிரி சிறிய பொம்மைகளாக இல்லாமல், கைகளால் பிடித்து விளையாடுவது போலப்பெரிய பொம்மைகள் தரவேண்டும். கூடிய வரையில் தரையில் உறுத்தாத விரிப்பில் விடுவது நல்லது.
7, 8ம் மாதங்கள்
கஞ்சி, மசித்த காய், பழம் இவற்றிலிருந்து கொஞ்சம் முன்னேறி, பருப்பு சேர்த்துப் பிசைந்த, மசித்த சாதம் கொடுக்கலாம். நாம் சாப்பிடுவது போலவே, மூன்று வேளைகள் திட உணவு கொடுக்க வேண்டும். தாய்ப் பாலையும் நிறுத்தக் கூடாது. 8-ம் மாதத்தில், முட்டி போட்டுத் தவழத் தொடங்கும். குழந்தைக்கு ஞாபக சக்தி வரும் வயது இதுதான். இந்தப் பருவத்துக்குத் தகுந்தமாதிரி அதன் விளையாட்டுகளும் இருக்கும். எதையாவது துணிக்குக் கீழ் ஒளித்து வைத்தால் கண்டு பிடிக்கும்; நன்றாக டிரெஸ் போட்டு, தலை வாரினால் வெளியே கிளம்புகிறார்கள் என்று புரிந்துகொள்ளும். அப்பா அலுவலகத்திலிருந்து வருவது போன்ற எல்லாமே குழந்தைக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
9, 10ம் மாதங்கள்
9-வது மாதத்தில் இருந்து விரல்களின் ஒருங்கிணைப்பு நன்றாக வந்துவிடும். சாப்பாட்டைத் தட்டில் போட்டு வைத்தால், மேலே கீழே சிந்தி, கைக ளால் அளைந்து விளையாடும். ஆனால், சிறிய அளவேனும் வாயில் போட்டுக்கொள்ளும். அப்போதுதான், ஒரு வயதில் தானாகச் சாப்பிட ஆரம்பிக்கும்.
வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எது கிடைத்தாலும் குழந்தை, அதை எடுத்து வாயில் போடும். குட்டையான மேஜை, டீப்பாய், ஸ்டூல் போன்றவற்றின் மேல் மறந்தும் கூட கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பிடித்துக்கொண்டு நிற்கும் ஆர்வத்தில், குழந்தை மேஜை விரிப்பைப் பிடித்து இழுக்கக் கூடும். அதன் மேலுள்ள பொருட்கள், குழந்தையின் மேல் விழுந்து காயப்படுத்தலாம். இந்தப் பருவத்தில், காலை, மதியம், இரவு என்பதோடு, 4-வது வேளையாக மாலையில் ஏதாவது   ‘ஸ்நாக்கொடுக்கலாம்.
ஒரு வயதில் பேச்சு வர ஆரம்பிக்கும். திட உணவு  தாய்ப்பால் ஆகியவற்றுடன், பசும்பால் அல்லது பாகெட் பால் போன்ற வேறு பால் ஓரிரு வேளை கொடுக்கலாம். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும் . வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப் பாலைப் பிழிந்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டுப் போகலாம். ஆனால், குழந்தைக்குக் கொடுப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் வெளியே எடுத்து, சூடுபடுத்தாமல், அறை வெப்ப நிலைக்கு வந்ததும் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், இருமல்மூன்றும், ஒரு வயதுக்கு மேல் அடிக்கடி வரும். இவற்றில் ஏதேனும் ஒன்று வந்த பிறகும் குழந்தை, ‘ஆக்டிவ்ஆக இருக்கிறதென்றால், பயப்பட வேண்டாம். தானாகவே ஒன்றிரண்டு நாளில் சரியாகிவிடும். ஆனால், மேற்கூறிய 3 பிரச்னைகளில் ஏதேனும் ஒன்று இருந்து, குழந்தை சோர்ந்து போய் இருந்தாலோ, மூச்சுத்திணறல் இருந்தாலோ, மருத்துவரின் ஆலோசனையுடன் ஆன்டிபயாடிக் கொடுக்கலாம்.
பிறந்து 5 முதல் 10 நாள்களுக்குள் (சில சமயம், 3 நாள்களில்), பச்சிளம் சிசுவின் தொப்புள்கொடி, அதுவாகவே விழுந்துவிடும். பிடித்து இழுக்கவோ, மருந்து வைக்கவோ தேவையில்லை. தானாகவே ஆறிவிடும்.
எல்லாக் குழந்தைகளுக்குமே பிறந்ததும் மஞ்சள் காமாலை லேசாக இருக்கும். முகம், நெஞ்சு, கண்கள் லேசாக மஞ்சளாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. அது சாதாரணமானது தான். ஆனால், கைகள், கால்களில் மஞ்சள் பரவினால், ரத்தப் பரிசோதனை செய்து, ‘நீல நிற ஒளியில் வைக்க வேண்டுமா என்று பார்க்கவேண்டும்.
பிறந்த 5 நாட்களில், பிறந்தபோது இருந்த எடையை விடக் குறைந்து, மறுபடியும் 10-வது நாளில் இருந்து எடை கூடும். அதனால், கவலைப்பட வேண்டாம். குழந்தை நன்கு சிறுநீர் கழிக்க வேண்டும்.
ஆதாரம் : சூர்யா மருத்துவமனை, சென்னை

0 comments:

Post a Comment