அண்ணன? தம்பியா?-பறுவதம் பாட்டி


அன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.  பறுவதம் பாட்டியும் வழக்கம்போல் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவினை தொலைபேசியில் அறுத்துக்கொண்டிருந்தார்.

‘’எங்கட ஆட்கள் கனபேர் உந்தக்குணத்தால தானே அறுந்துபோய் இருக்கினம்.”

‘’என்ன பறுவதம் சொல்லுறாய்?’’

வேற என்ன! அவன் ஒரு வீடு வேண்டினா, இவன் அதைவிட பெரியவீடாய் வாங்கவேணும். அவள் கல்யாணத்திற்கு $5000.00 விலையில சாறி வாங்கினா, இவள் $6000.00 விலையில் வாங்கவேணும். இதால யாருக்கு நஷ்டம்.’’

‘’ஆசையில எல்லே பறுவதம் வேண்டுதுகள்.”

‘’ஆசையில்லைத் தோசை.பாருங்கோ! பொறாமையில தன் வருமானத்தை மிஞ்சின கடனிலை தம்பியின்ரை வீட்டை விடப் பெரிசாய் வேண்டிப்போட்டு,இப்ப வேண்டின வீட்டு வாசல்படியிலை அண்ணன் மிதிக்க நேரமில்லாமலெல்லோ வேலை வேலையெண்டு ஓடித்திரியிறான்.’’

‘’வேற என்ன செய்யிற பறுவதம்.குளத்தில காலை வைச்சாச்சு. நீந்தித் தானே ஆகவேணும்.’’

‘’குளத்தில காலை வைக்க முதல்ல ஆழத்தையும் பார்க்க வேணும். இல்லாட்டி அம்போ தான். உதுக்குத் தான் விரலுக்கேற்ப வீக்கம் வேணுமெண்ணிறது. உப்பிடி காலமெல்லாம் ஓடி,ஓடி உழைச்சுப்போட்டு எப்பதான் வீட்டுக் கடனை முடிக்கிறது. எப்பதான் வாழத்தொடங்கிறது.

இனி,உந்தப் பொறாமை எண்டது பொல்லாதது. ஒரு மனுசனை அது பிடிச்சால், விறகில பிடிச்ச நெருப்பு மாதிரி மனிசனை அழிச்சிடும்.’’

‘’ஏன் பறுவதம் சாபம் போடுறாய்?’’

‘’நான் சாபம் போட்டு நடக்க நான் என்ன முனிவரே? அதுக்கு முனிவரும் தேவையில்லை அவன்ட பொறாமையே அவனுக்கு தண்டனையைக் குடுக்கும்.பொறாமைப்படுகின்ற ஒருவனுக்கு, நிம்மதி கெடும். உறவுகள் தொலையும்.வேதனை அதிகரிக்கும். இதனால இரத்த அழுத்தம் (Blood pressure) அதிகரிக்கும். இன்னும் பல... ஏன்! திருக்குறளிலை பொறாமையைப் பற்றி சொன்ன அடிகளிலை எனக்கு பிடிச்சது எது தெரியுமே?

‘’சரி சொல்லன் கேட்பம்.’’

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.[குறள் 167 ]

இதின்ர விளக்கத்தையும் கேளுங்கோ!

''பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.’’

‘’பறுவதம்! நீ எல்லாம் நினைவில வைச்சிருக்கிறாய்.’’


‘’நினைவில வச்சிருந்தா பொறாமைப்பட த்தேவையில்லை. பொறாமைப்படாட்டி எவ்வளவு சந்தோசமா வாழலாம் தெரியுமே.எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் எண்டு வாழ்ந்தா உறவுகள் பலமடையும். வளர்வோருடன் சேர்ந்து நாமும் வளரலாம்.’’

‘’அப்பிடி ஒரு சமுதாயம் வரவேணுமே!!!’’ என்ற அங்கலாய்ப்புடன் தன் தொலைபேசி அரட்டையினை முடித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.

விடிந்து அதிகநேரம் என உணர்ந்த நான் அம்மாவின் வழமையான அர்ச்சனை  தாங்காது  படுக்கையினை விட்டு எழுந்துகொண்டேன்.


ஆக்கம்:பேரன், செல்லத்துரை மனுவேந்தன்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நான் கனடா வந்து 6 வருடங்களில் கார் வாங்க முயன்றபோது,அதுவரையில் கார் இல்லாது இருந்த என் நண்பன் குடும்பம் அவசரமாக நான் தேடிய காரைவிட பெறுமதியான கார் வாங்கினர்.நான் அப்போது அவர்களின் நோக்கத்தினை உணரவில்லை.பின்னர் நான் வீடு தேடியபோதும்,வாங்கியபோதும்
    அமைதிய்யாக இருந்தவர்கள் பின்னர் என்னுடைய வீட்டைவிட பெரிதாக வாங்கினர்.அப்போதும் அவர்களின் போக்கினை உணராது வழமைபோல் பழகினேன்.ஆனால் அவர்களின் வீடு குடிபூரல் முடிய அவர்கள் என்னிடம் கூறினார்''நான் இனி என்வீட்டினை விற்று பெரிதாய் வாங்குவேன்'' என்றனர்.ஆனால் எனக்கு அப்படியான சிந்தை இல்லாததால் நான் அப்படி இதுவரையில் நடந்ததில்லை.ஏன் இப்படி மனிதர்கள் என்று புரியவில்லை.

    ReplyDelete