[முகவுரை-05] நூலாசிரியர்
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரைப் பொய்யில் புலவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற வேறு பெயர்களாலும் அழைப்பர். இவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன. அவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை. குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய சைவமத நூலான திருவள்ளுவமாலையில் தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் இந்நூலில் கூட வள்ளுவரின் பிறப்பு, குடும்பம், பின்புலம் போன்ற எந்தத் தகவலும் கிடைப்பதற்கில்லை. வள்ளுவரின் வாழ்வைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் யாவையும் நிரூபிக்கும்படியான பண்டைய நூல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. 19-ம் நூற்றாண்டில் அச்சகங்கள் தோன்றிய பின்னர் வள்ளுவரைப் பற்றிய பல செவிவழிச் செய்திகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கதைகளாக அச்சிடப்பட்டன.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நூல்களில் வள்ளுவரைப் பற்றிப் பழங்கால ஏடுகளிலிருந்தும் மரபுவழியும் கிடைக்கப்பெற்றதும் வள்ளுவரது நூலிலிருந்தே அறியப்பட்டதுமான பலதரப்பட்ட தகவல்கள் காணப்படுகின்றன. வள்ளுவர் குறித்து மரபுவழி வந்த தகவல்கள் அவர் பறையர் குலத்து நெசவாளர் என்றும், அவர் உழவினைப் போற்றியதால் விவசாயத் தொழில் புரிந்த வேளாளர் குலத்தவர் என்றும், அவர் ஒரு பறையர்குலத் தாய்க்கும் அந்தணர்க்குலத் தந்தைக்கும் பிறந்தவர் என்றும் பலவாறு உரைக்கின்றன. மு. இராகவ ஐயங்காரது கருத்துப்படி "வள்ளுவர்" என்ற அவரது பெயர் "வல்லபா" என்ற ஓர் அரச அலுவலரது பதவியைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். எஸ். வையாபுரிப்பிள்ளை தனது கருத்தாக "வள்ளுவன்" என்பது அரசவையில் பறை முழங்குவோரைக் குறிக்கும் சொல் என்றும் அதனால் அவர் அரசனின் படையில் முரசு கொட்டுபவராகப் பணிபுரிந்தவர் என்றும் உரைக்கிறார். மரபுவழி வந்த தகவல்கள் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணாகவும் சில நம்பகத் தன்மையற்றவையாகவும் விளங்குகின்றன. வள்ளுவரது பிறப்பு பற்றிய பலதரப்பட்ட செய்திகளில் சில வள்ளுவர் ஒரு மலைக்குப் பயணமாகச் சென்று அகத்தியரையும் இன்னபிற முனிவர்களையும் சந்தித்ததாகவும் கூறுகின்றன. அவர்களைச் சந்தித்துத் திரும்பி வரும் வழியில் வள்ளுவர் ஒரு மரத்தடியில் அமர, அவரது நிழலானது அவர் மீது ஒரு நாள் முழுவதும் அசையாமல் நிலைகொண்டது என்றும் அங்கு அவர் ஓர் அரக்கனைக் கொன்றார் என்றும் பலதரப்பட்ட புராணத் தகவல்களும் காணப்படுகின்றன. அறிஞர்கள் இவற்றிற்கு வரலாற்றுப் பதிவுகள் கிடையாது என்றும் இவையாவும் இந்திய மற்றும் உலகப் புராண இலக்கியங்களில் காணப்படுவதைப் போன்ற புனையப்பட்ட கதைகளாகும் என்றும் உரைக்கின்றனர். வள்ளுவரைப் பற்றிய குல வரலாறுகளும் நம்பகத்தன்மையற்றவை என்றே அவர்களால் கருதப்படுகிறது. வள்ளுவருக்கு வாசுகி என்ற மனைவியும் ஏலேலசிங்கன் என்ற பெயரில் ஒருவர் உற்ற நண்பனாகவும் சீடனாகவும் இருந்தார் என்றும் கருதப்படுகிறது.
வள்ளுவரைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளைப் போல் அவரது சமயத்தைப் பற்றியும் பலதரப்பட்ட செய்திகள் வரலாற்றுச் சான்றுகளின்றி விரவிக்கிடக்கின்றன. வள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதை நிர்ணயிக்க அவர் எந்த சமயத் தத்துவத்தை கண்டிக்காது போற்றுகிறார் என்பதை அலச வேண்டும் என்ற ஒரு யுக்தியை மு. சி. பூரணலிங்கம் பிள்ளை முன்வைக்கிறார். இதன் வாயிலாக "வள்ளுவர் சைவ சித்தாந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட உரைப்பதில்லை" என்பது தெரியவருவதாக பூரணலிங்கம் பிள்ளை மேலும் சுட்டுகிறார். வள்ளுவர் தனது நூலினைப் பொதுப்படையாகவும் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமலும் இயற்றியுள்ளதால் அதனைப் பல விதங்களில் பொருட்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் விளைவாகக் குறளானது பண்டைய இந்திய சமயங்களால் தங்கள் வழிநூலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆங்கிலேயப் படையெடுப்புக்குப் பின்னர் கிறித்தவ சமயமும் குறளைத் தனது வழித் தோன்றலாகக் கருத முயன்றதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ போதகரான ஜி. யு. போப் தனது நூலில் வள்ளுவர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிறித்தவ போதகரான பான்டேனசுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் அதன் மூலம் அலெக்சாந்திரிய கிறித்தவ அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இயேசுநாதரின் மலைச் சொற்பொழிவின் சாரமாய்த் தனது "அழகிய திருக்குறளை" யாத்தாரென்றும் கூறினார். போப்பின் இக்கூற்றுகள் யாவும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அறிஞர்களால் விலக்கப்பட்டுவிட்டன. வள்ளுவர் கூறும் அறங்கள் யாவும் கிறித்தவ அறநெறிகளல்ல என்று சுவெலபில் நிறுவுகிறார். "கால மதிப்பீட்டில் குறளானது ஏனைய இந்திய இலக்கியங்களைப் போலவே சரியாக வரையறுக்கப்பட முடியாததாகவே உள்ளது" என்றும், குறிப்பாகச் "சிறந்த கருத்துகளைக் கொண்ட இலக்கியங்கள் யாவும் கிறித்தவ போதகர்களால் அவற்றின் காலமதிப்பீட்டினைக் கிறித்துவின் பிறப்பிற்குப் பிந்தையதாக்கும் நோக்குடன் பலவாறு சிதைக்கப்பட்டுள்ளது" என்றும் சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
வள்ளுவர் சமண சமயத்தையோ இந்து சமயத்தையோ சார்ந்தவராக இருந்திருப்பார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விரு சமயங்களின் பிரதான தர்மமான அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற அறத்தை வள்ளுவர் தனது நூலின் மைய அறமாகக் கொண்டு மற்ற அறங்களைக் கையாண்டிருப்பதிலிருந்து இது புலனாகிறது. வள்ளுவர் இந்துவா, சமணரா என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று தனது 1819-ம் ஆண்டு குறள் மொழிபெயர்ப்பு நூலில் எல்லீசன் (பிரான்சிசு வயிட் எல்லீசு) குறிப்பிடுகிறார். வள்ளுவரது தார்மீக சைவம் மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களைப் பற்றிய அதிகாரங்கள் சமண மதச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன என்று கூறும் சுவெலபில், கடவுளுக்கு வள்ளுவர் தரும் அடைமொழிகளும் அருள்சார்ந்த அறங்களுக்கு அவர் தரும் முக்கியத்துவமும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றன என்று விளக்குகிறார். வள்ளுவர் தமக்கு முந்தைய தமிழ், வடமொழி ஆகிய இரு இலக்கிய அறிவினையும் சாலப்பெற்றவராகவும் "சிறந்தவற்றை மட்டும் தேரும் சிந்தையுள்ள ஒரு கற்றறிந்த சமண அறிஞராகவும்" இருந்திருக்கக்கூடும் என்பது சுவெலபில்லின் கருத்து. ஜைன மரபானது திருக்குறளைத் தமிழ் நிலத்தில் ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் முந்தைய பாதியிலும் வாழ்ந்த தென் பாடலிப்புத்திர திராவிட சங்கத்தின் தலைவரும் ஜைன ஆச்சாரியருமான குந்தகுந்த ஆச்சாரியருடன் தொடர்புபடுத்துகிறது என்று ஏ. சக்ரவர்த்தி நைனார் கூறுகிறார். எனினும் பண்டைய திகம்பர சமண நூல்களிலோ சுவேதம்பர சமண நூல்களிலோ வள்ளுவரைப் பற்றியோ குறளைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பினையும் காணமுடிவதில்லை. இந்து சமய பக்தி இலக்கியங்களில் சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் வள்ளுவரும் குறளும் குறிப்பிடப்படுகையில் சமண நூல்களில் வள்ளுவர் முதன்முதலாகக் குறிப்பிடப்படுவது 16-ம் நூற்றாண்டில்தான்.
வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர். அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேறினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும், அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறளானது பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும் அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது. வள்ளுவர் குறட்பாக்கள் 610 மற்றும் 1103-களில் திருமாலைக் குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் இலக்குமியைக் குறிப்பிடுவதும் வைணவ தத்துவங்களைக் குறிக்கின்றன. இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் வள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி. ரா. நடராசன் பட்டியலிடுகிறார். தருக்க ரீதியான முறையில் குறளை அலசினால் வள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான பூர்ணலிங்கம் பிள்ளை கூறுகிறார். வள்ளுவர் தென்னிந்திய சைவ மரபினைச் சேர்ந்தவர் என்று மாத்தேயு ரிக்கா கருதுகிறார். குறளானது அத்வைத்த வேதாந்த மெய்யியலை ஒத்து இருப்பதாக தென்னக மக்கள் போற்றுவதாகவும் அது அத்வைத்த வாழ்வு முறையினை போதிப்பதாகவும் தென்னிந்தாவில் வசித்த இறையியல் அறிஞரான தாமஸ் மன்னினேசாத் கருதுகிறார்.
அறிஞர்களுக்கிடையில்
இவ்வளவு கருத்து வேறுபாடு இருப்பினும், வள்ளுவர் தனது சார்பற்ற தன்மையினாலும் அனைவருக்குமான பொது
அறங்களைக் கூறுவதனாலும் அனைத்து சாராராலும் பெரிதும் போற்றப்படுகிறார். அனைத்து
நூல்களிலும் காணப்படும் அனைத்து சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக பரிமேலழகர் உள்ளிட்ட அறிஞர்களால்
வள்ளுவர் பெரிதும் பாராட்டப்படுகிறார்.
அவரது நூலான குறள்
"உலகப் பொதுமறை" என்று வழங்கப்படுகிறது.
[திருக்குறள் - முகவுரை-06 அடுத்தவாரம்
தொடரும்]
திருக்குறள் தொடர்கிறது….
5. இல்வாழ்க்கை
👉குறள்
41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்
நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில்
உதவுபவன்.
கலைஞர் உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக
அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
👉குறள்
42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
மு.வ உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு
வாழ்கிறவன் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர்
என்பவர்க்கும் உதவுபவன்
கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும்
இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
👉குறள்
43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
மு.வ உரை:
தென்புலத்தார்,
தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும்
அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து
பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
கலைஞர் உரை:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய
கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும்
இல்வாழ்வுக்குரியனவாம்.
👉குறள்
44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
மு.வ உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது
பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து
உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த
பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
👉குறள்
45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
மு.வ உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும்
பயனும் அதுவே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து
கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
கலைஞர் உரை:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும்
அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
👉குறள்
46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில்
சென்று பெறத்தக்கது என்ன?
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால்
இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று
பெற்றிட இயலுமோ? இயலாது.
👉குறள்
47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
மு.வ உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும்
மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய
இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின்
இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்
👉குறள்
48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
மு.வ உரை:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட
மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து
விலகாமல், மனைவியுடன்
வாழும் வாழ்க்கை, துறவறத்தார்
காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.
கலைஞர் உரை:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின்
இல்வாழ்க்கை, துறவிகள்
கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
👉குறள்
49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
மு.வ உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன்
பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல்
இருக்குமானால் நல்லது.
கலைஞர் உரை:
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
👉 குறள்
50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
மு.வ உரை:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ
முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள்
ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
கலைஞர் உரை:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய
அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு
இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....
0 comments:
Post a Comment