திருக்குறள் /06/வாழ்க்கைத் துணைநலம்

முகவுரை -06-உள்ளடக்கம்

திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. அனைத்துப் பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இந்நூல் மூன்று பகுதிகளாக அல்லது "பால்களாகப்" பகுக்கப்பட்டுள்ளது

முதற் பால்—அறம்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38)

இரண்டாம் பால்—பொருள்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108)

மூன்றாம் பால்—காமம்/இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133)

அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், காமம் அல்லது இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன. ஒவ்வொரு பா அல்லது குறளும் சரியாக ஏழு சொற்களைக் கொண்டது. இச்சொற்கள் சீர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறளும் முதல் வரியில் நான்கு சீர்களும் இரண்டாவது வரியில் மூன்று சீர்களும் பெற்றிருக்கும். ஒரு சீர் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களின் கூட்டுச்சொல். எடுத்துக்காட்டாக, "திருக்குறள்" என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு சொற்களை இணைப்பதன் மூலம் உருவாகும் ஒரு சீராகும்.

 திருக்குறளை மொத்தம் 9,310 சீர்கள் அல்லது 14,000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார். திருக்குறளில் மொத்தல் 42,194 எழுத்துக்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நூலிலுள்ள 1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன.

பகவத் கீதை உள்ளிட்ட இந்திய அறிவாய்வியல் மற்றும் மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகத் திருக்குறள் கருதப்படுகிறது.

 குறளின் பகுப்பு முறை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு வாழ்வியல் நோக்கங்களை உள்ளடக்கிய பண்டைய இந்திய தத்துவமான "புருஷார்த்தத் தத்துவத்தின்" முதல் மூன்றினை முறையே அறம், பொருள், இன்பம் எனப் பிரதிபலிப்பதாக உள்ளது. நான்காவது நோக்கமான மோட்சம் அல்லது வீடுபேறு குறளில் வெளிப்படையாகக் கூறப்படாமல்  அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்களில் உள்ளார்ந்து வைக்கப்பட்டுள்ளது.  அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் கூறுகள் தமிழ் இலக்கிய மரபின் அகம், புறம் என இருவகைகளின் பாற்படும் என்பது தொல்காப்பியத்தின் கூற்று. தர்மம் அல்லது அறம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளையும், அர்த்தம் அல்லது பொருள் என்பது அறத்தால் வழிநடத்தப்பட்ட முறையில் பெறப்படும் செல்வத்தையும், காமம் அல்லது இன்பம் என்பது அறத்தின் வழிநடத்தலால் நிறைவேற்றப்படும் ஆசைகளையும் குறிக்கின்றன என்று சர்மா கூறுகிறார். பொருளும் இன்பமும் நாடப்பட வேண்டியவைதான் என்றாலும் இவை இரண்டும் அறத்தின் வாயிலாக மட்டுமே நாடப்படுபவையாக இருத்தல் வேண்டும் என்கிறார் அருணாதேவி. இந்தியத் தத்துவ மரபின்படி, செல்வமும் உடமைகளும் முற்றிலுமாகத் துறக்கப்படவோ அல்லது பற்றற்ற விழிப்புணர்வோடு நாடப்படவோ வேண்டும். அப்படி நாடப்படும் பட்சத்தில் ஒருவர் அவற்றோடு பிணைப்பின்றி இருக்க வேண்டும். இன்பமானது உணர்வுப்பூர்வமாகவும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணமும் நாடப்படுதல் வேண்டும்.  பொருளிற்கும் இன்பத்திற்கும் இடையில் இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த பதற்றம் இருப்பதாக இந்திய தத்துவங்கள் கூறுகின்றன. ஆகவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு பொருளும் இன்பமும் "பற்றற்ற மனதுடன்" (நிஷ்காம கர்மா) அவற்றிற்கு ஏங்காது அடையப்படுதல் வேண்டும் என்று இந்திய மரபு கூறுகிறது. அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக உள்ளன.

[திருக்குறள் - முகவுரை-07 அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது….

6. வாழ்க்கைத் துணைநலம்

👉 குறள் 51:

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
.

மு.வ உரை:

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை:

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

கலைஞர் உரை:

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

 

👉 குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
.

மு.வ உரை:

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

கலைஞர் உரை:

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

 

👉 குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.

 

மு.வ உரை:

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

கலைஞர் உரை:

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

 

👉 குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

 

மு.வ உரை:

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

சாலமன் பாப்பையா உரை:

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

கலைஞர் உரை:

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

 

👉 குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

 

மு.வ உரை:

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா உரை:

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கலைஞர் உரை:

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

 

👉குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


மு.வ உரை:

கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

சாலமன் பாப்பையா உரை:

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

கலைஞர் உரை:

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

 

👉 குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.


மு.வ உரை:

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா உரை:

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

கலைஞர் உரை:

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

 

 👉 குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

 

மு.வ உரை:

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

கலைஞர் உரை:

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

 

👉 குறள் 59:

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

 

மு.வ உரை:

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் உரை:

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

 

👉 குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

 

மு.வ உரை:

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

கலைஞர் உரை:

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

0 comments:

Post a Comment