வந்திடுமா நீரிழிவு (diabetes) ?

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது?

 உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயாபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா?

ஆமாம்... திடீரென்று எடைகுறையும். சிறுநீர் அதிகம் வெளியாகும். பசி அதிகரிக்கும். சோர்வு, தோள்பட்டை வலி, பிறப்புறுப்புகளில் அரிப்பு, கண்பார்வை மங்கும். புண்ணோ, கட்டியோ வந்தால் சீக்கிரம் ஆறாது... ஆனால், 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இப்படி அறிகுறிகள் தென்படும். மீதமுள்ள 70 சதவிகிதத்தினருக்கு அறிகுறிகளே தெரியாது. தங்களுக்கு டயபடீஸ் இருப்பதை உணராமலேயே, அதை அறியாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு மருத்துவ சிகிச்சைக்கு வரும்போதுதான் பலருக்கும், டயபடீஸ் உள்ளதே கண்டுபிடிக்கப்படுகிறது.

டயபடீஸ் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் வரும் என்று சிலர் அஞ்சுகிறார்களே?

இந்த மருந்துகள் எல்லாம் உயிர் காக்கும் மருந்துகள். டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ் நாட்கள் முழுவதும் மாத்திரை உட்கொள்வதன் மூலம்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படும் என்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடு மீறி சில விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

‘லோ சுகர்’ என்கிறார்களே.. அது வந்தால் என்னாகும்?

இந்த நிலை சற்று ஆபத்தானது.. ஆழ் மயக்கம் என்கிற விபரீத நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்! லோ சுகர் எனில் முதலில் பசி, படபடப்பு, நடுக்கம், பதட்டம், தலைவலி, பார்வை மங்குதல், அதிக வியர்வை, எரிச்சல், குழப்பம், தூங்கி வழிதல், மயக்கம் ஏற்படும் அதுவே ஆழ் மயக்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தாக்கினால் நம் உடலின் சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும். இதைத் தவிர்க்க அந்த நேரத்தில் உடனடியாக இனிப்பு, அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் லோ சுகர் வராமல் தடுக்க ஒரு சில நாட்களுக்கு டயபடீஸ் மாத்திரையின் அளவை குறைத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறவேண்டும்.

டயபடீஸ் உள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்?

நடப்பது, சைக்கிளிங், ஜாக்கிங், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம். வெறுமனே ஆசைக்காக செய்து விட்டுவிடாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே நல்லது. உடற்பயிற்சியினால் ரத்தத்தில் சர்க்கரையளவு குறையும். கொழுப்புச் சத்தும் குறையும்!

 இதயத்தை பாதுகாக்கும் ஹெச்.டி.எல். எனப்படும் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்!

 டி.ஜி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

டயாபடீஸ் உள்ளவர்கள் தொடர்ந்து ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் சாப்பிடுவதால் உடல்பருமன், இரத்த அழுத்த நோயால் பாதிக்கிறார்கள். ஃபாஸ்ட்புட் அதிகம் சாப்பிடும், அதிக உடல் உழைப்பற்ற சாஃப்ட்வேர் துறையில் உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்க முடியும். டயபடீஸால் இந்தியாவில் ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். டயபடீஸ் உள்ளவர்கள் நல்ல பாத அணிகள் போட்டு நடக்க வேண்டும். காரணம் கால்கள்தான் சிக்கிரமே பாதிக்கப்படும். டயபடீஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் அதிக செலவுகள் ஏற்படும். அப்படியே ஆனாலும்கூட பூரண நிவாரணம் கிடைக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனையையும், மருந்துகளையும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு பயப்படவேண்டாம்!

டயபடீஸ் முற்றிய நிலைக்குப் போகாமல் எப்படித் தடுப்பது?

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி டயபடீஸ§க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இது முற்றாது. ஆனால், இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காமல் மருந்துகளையும் சரியாக எடுக்காமல் இருந்தால் டயபடீஸ் முற்றிவிடும்! டயபடீஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்ற உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். நோயின் பாதிப்பு அதிகமாகி சில நேரம் கோமா நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு!

குழந்தை பிரசவிக்கும்போது ஒரு பெண்ணுக்கு டயபடீஸ் இல்லை என்றாலும் பிறக்கும் குழந்தைக்கு டயபடீஸ் இருக்கிறதே எப்படி? இதைக் குணப்படுத்த முடியுமா?

வைரஸ் இன்ஃபெக்ஷன் மற்றும் நம் உடலில் இருக்கும் பீட்டா செல் இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரப்பதுதான் இதற்குக் காரணம். இதை மாத்திரையினால் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இன்சுலின் ஊசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. தாய், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுத்துவிடலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை வியாதியினால் எந்த ஒரு பின் விளைவுகளும் வருவதில்லை. நீங்கள் உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. உங்கள் கட்டுப்பாடு உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

சாப்பிட வேண்டிய உணவு

கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, சிலதுண்டு பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி, குடை மிளகாய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முளைகட்டிய பயிர், காராமணி, பச்சைப்பயிறு போன்றவை உட்கொள்ளலாம்.

பின்குறிப்பு: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு பழத்தை நாளன்று எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

வாழைப்பழம், செர்ரி, சீதாப்பழம், அன்னாசி, பலாப்பழம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், காரகருணை, சேனைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மற்றும் கார்போ ஹைட்ரேட் உணவுவகைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியவை. மீதமுள்ள மற்ற பழவகைகளையும் தவிர்க்கவும்.
பொரித்துச் சாப்பிட வேண்டாம் 

0 comments:

Post a Comment