நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்

மூட நம்பிக்கை எனக் கூறியவுடனயே நம்மில் பலரும் நினைப்பது எதோ பழங்காலப் பழக்க வழக்கங்களில் சில மட்டுந்தான் எனப் பலர் நினைப்பதுண்டு. இன்னம் பலரோ கடவுள் நம்பிக்கை, மதப் பழக்க வழக்கங்களைத் தவிர வேறு பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கை எனக் கருதுவோரும் உள்ளனர்.
மூட நம்பிக்கைகள் என்பது பாமர மக்களிடம் மட்டுமில்லை, இன்றைய காலக் கட்டத்தில் மேற்கல்வி பயின்ற பலருக்கும் கூட இருக்கின்றன. பல சமயம் புதிதாக முளைத்துள்ள பல மூட நம்பிக்கைகளும் அறிவியல் முலாம் பூசப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் பழம் நம்பிக்கைகளைக் கூட அறிவியல் விளக்கங்கள் என்ற பேரில் இளம் சமூகத்தினரின் மத்தியில் பரப்பப் பட்டு வருகின்றது. அதுவும் இணையமும், சமூக ஊடகங்களும் வந்த பின் நம்மை வந்தடையும் தகவல்கள் அனைத்தும் எந்தளவுக்கு நம்பகமானது என்பதைத் தீர்மானிக்கவே முடியவில்லை

ஒரு சில நாள்களுக்கும் முன்னர்ப் பேஸ்புக்கில் ஒருவர் பாம்புக்கு பால் ஊற்றுவது, நெற்றியில் திருநீறு அணிவது என்பதற்கு எல்லாம் என்னென்னவோ அறிவியல் முலாம் பூசப்பட்ட போலி விளக்கங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்தக் கொடுமைகள் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, மேற்கத்திய நாடுகளில் கூட உள்ளன. உலகிலேயே அதி புத்திசாலி நாடாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் வலது சாரிகள் ( ஆம் ! கிறித்தவப் பழமைவாதிகள் ) படைப்புவாதம் என்ற பேரில் உலகம் தோன்றி ஆறாயிரம் ஆண்டுகள் தான் ஆகிவிட்டதாகப் பரப்புரை நிகழ்த்தி வருகின்றார்கள். இவ்வாறான அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பள்ளிகளில் படிப்பிக்கவும் முயல்கின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் எவஞ்சாலிசக் கிறித்தவர்கள் தான். இதனைச் சில பல கிறித்தவ அரசியல் வாதிகள் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவும் முயல்கின்றனர்

இன்றைய காலக் கட்டத்தில் நன்கு கல்விக் கற்ற பெற்றோர்கள் பலரும் தான் நவீன மூட நம்பிக்கைகள் பலவற்றையும் நம்பியும், கைக்கொண்டும் வருகின்றார்கள். பல பெற்றோர்கள் நினைக்கின்றார்கள் இளம் பிள்ளைகளுக்கு இசையைப் பாடல்களைக் கேட்கச் செய்வதன் மூலம் அவர்கள் உலக மகா இசை மாமேதையாக உருவாக்கி விட முடியும் என நினைக்கின்றனர்.

அது உண்மையா ! நிச்சயம் கிடையாது. ஊடகங்களும், அறிவியல் தகவல்கள் குறித்த அறிவின்மையால் எழும் ஒரு மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஜான் பிரோட்ஸ்கோ, ஜோசுவா அரோன்சன், கிளான்சி பிளார் ஆகியோர் எழுதிய ஒரு முழு ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி புகட்டுவோர்கள், திட்ட வகுப்பாளர்கள் எனப் பல தரப்பட்டவர்களிடம் இருந்து திரட்டப்பட்ட பல்வேறு ஆய்வுகள், கருத்தறிக்கைகள் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களைத் தொகுத்தும் அளித்திருந்தனர்.

ஒரு குழந்தையின் புத்திக்கூர்மையைத் தீட்ட முடியுமா, ஊடகங்களில், சமூகத்தில் பலரும் பல விதமாக முன் வைக்கும் ஆலோசணைகள் அனைத்தும் பயனுள்ளவை தானா என்பதையும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.

ஒரு குழந்தையின் அறிவுத் திறனைக் கணக்கிடும் காரணக் கூற்றுக்கள் செய்யும் முறைகள், மருத்துவக் கல்வி தலையீடுகள், சீரற்ற கட்டுப்பாட்டுச் சோதனை முறைகள் போன்றவற்றின் ஊடாகச் சுமார் 70 ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளையும் இணைத்து இந்த ஆய்வினை அவர்கள் மேற்கொண்டார்கள்.

அவ் ஆய்வினை உற்று நோக்கும் போதும் பல வியக்கத் தக்க முடிவுகளை அவர்கள் எடுத்து வைத்தார்கள்.

அவற்றில் முக்கியமான ஒன்று பல வைட்டமின்கள்
( MULTIVITAMINS) உட்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் கிடைக்கும் என்ற வாதம் பிழையானது என்பது தான். ஆனால் கர்ப்பிணி தாய்மார்கள், பால் சுரக்கும் தாய்மார்கள், இளம் குழந்தைகள் ஒமேகா – 3 கொழுப்பமிலத்தை உட்கொள்வது பயன் தரக் கூடியதாக உள்ளதாம்.
அதே போலக் குழந்தைகளுக்கு நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதால் மட்டும் பிள்ளைகள் புத்திசாலிகளாக மாற மாட்டார்கள். மாறாக அவர்களோடு இணைந்து பெற்றோர்கள் வாசித்துக் காட்டுவது, ஊடாடும் வாசிப்புக்களை மேற்கொள்வதன் மூலம் நான்கு வயதுக்கு உட்படக் குழந்தைகளின் IQ அறிவுத்திறன் ஆறு புள்ளிகள் வரை அதிகரிக்குமாம்.

அதே போலக் குழந்தைகளுக்கு அதிக இசைக் கேட்கச் செய்வதன் மூலம் குழந்தைகளின் இசைத் திறன், அறிவுத் திறன் அதிகமாகாது. ஆனால் இளம் வயதில் இசையை முறைப்படி பயிற்றுவிப்பதன் மூலம் அறிவாற்றல் திறன்கள், மூளை வளர்ச்சி ஏனையோரை விடச் சற்றுக் கூடுதலாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

ஆய்வுக் கட்டுரையில் உளவியல் திறன்கள், அன்பான குடும்பச் சூழல் போன்றவை குழந்தைகளின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கூறவில்லை. இருந்த போதும் குறைந்த வருமானம் உடைய வீடுகளில் உள்ள குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த உதவிகள், ஊக்கங்கள் வசதியான வீட்டு குழந்தைகளை விட அதிகமாகக் கிடைக்கின்றன எனவும். அறிவுத் திறன், மொழியாற்றல்களை ஊக்குவிக்கக் கூடிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் கிடைக்கும் பட்சத்தில் குறைந்த வருமானமுடைய குடுமத்து வீட்டுப் பிள்ளைகளின் மூளைத் திறன் IQ அளவு 7 புள்ளிகள் வரை கூடுதலாக இருக்குமாம்.

வசதி நிறைந்த வீடுகள் பலவற்றிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளோடு நேரங்களைச் செலவழிப்பது இல்லை, விளையாட்டு, வாசிப்புத் திறன்களைப் பயிற்றுவிப்பதும் இல்லை, அது தான் முக்கியக் காரணமாக இருக்கும் என அறியப்படுகின்றது.

இந்த ஆய்வு முடிவுகளைத் தேச கொள்கை வகுப்பாளர்கள் கருத்தில் கொள்வார்களா என்பது தெரியாது ? ஆனால் அறிவியல் ஆய்வுகளின் பக்கச்சார்ப்பற்ற கூற்றுக்களைப் பெற்றோர்களும், சமூகத்தினரும் கருத்தில் கொள்வது மிகவும் நல்லது. முக்கியமாகப் பாலகர் வகுப்புக்களில் வெறும் ஏட்டுக் கல்வியை, இறுகலான தனித் திறன்
வளர்க்கும் வகுப்புக்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல், ஊடாடடும் பங்கப்பற்றும் விளையாட்டு, வாசிப்புச் சார்ந்த கல்வி முறைகளே ஒரு குழந்தையை நல்லதொரு புத்திசாலியாக மாற்றும். அதை விட்டு விட்டு காலை 5 மணி தொடங்கின் டுயுசன் வகுப்புக்கள், இசை வகுப்புக்கள், கராத்தே, மிருந்தங்கம், விளையாட்டு என உலகில் உள்ள அனைத்து விடயங்களையும் ஒரே குழந்தையின் தலையில் மீது கட்டிவிட்டுவதும், வைட்டமின் மாத்திரைகள் உட்பட ஒரு மினி பார்மசியையே அவர்கள் வாயில் தள்ளிவிடுவதும், பின்னர்க் காலை 8 – 5 வரை புத்தகப் புழுக்களாக மாற்றும் பள்ளிக் கல்வியைப் பச்சைக் குழந்தைகளின் தலையில் வைத்துத் தேய்ப்பதும் மூளை வளர்ச்சியைப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை.

இன்னம் பல நவீன மூட நம்பிக்கைகள் மற்றும் பழம் மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசப்பட்டு நம்மிடையே பரப்பப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு நாடு, மொழி, கல்வி வாழ்க்கை முறை என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் எதோ ஒன்றை சிலர் கேள்வியின்றி நம்பத் தொடங்குகின்றனர். அதுவும் சமூக ஊடகங்கள், செவி வழிச் செய்திகள், நம்பகமற்ற மதவாதிகள், புத்தகங்கள், பேச்சாளர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்வது முறையான ஒன்றல்ல.

நன்றிகள் : தானியா லொம்புரோச

0 comments:

Post a Comment