தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:06


மனிதனுக்கும் தெய்வீகத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகளை வரையறுக்கும்,நம்பிக்கைகள்,உணர்வுகள்,கோட்பாடுகள்,மற்றும் நடை முறைகள் கொண்ட ஒரு அமைப்பு அல்லது அல்லது மனித நேயத்துடன் ஆன்மீகத்தையும்,சிலவேளை தார்மீக மதிப்புகளையும் தொடர்புபடுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட நம்பிக்கை அமைப்புகள்,பண்பாட்டு அமைப்புகள், மற்றும் உலக கருத்துக்கள் கொண்ட ஒரு நெறி சமயம் ஆகும். அத்துடன் '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும்,ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை (நற்செய்கை களைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல்) அமைத்துக் கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கோட்பாடு என்றும் கூறலாம்.அப்படியான ஒரு சமயத்தை முதல் முதல் இந்த உலகில்-மேலே நாம் கூறியவாறு முறையானதும் ஒழுங்கு படுத்தியதுமான ஒரு ஆன்மீக நடைமுறைகளில் தம்மை ஈடு படுத்தியவர்கள் அல்லது கடைபிடித்தவர்கள்-இந்த பண்டைய சுமேரியர்களே ஆகும்.மேலும் பல முதலாவது கண்டுபிடிப்புகளின் படைப் பாளிகளும் சுமேரியர்களே ஆகும்.அவர்களே முதல் முதல் பெரிய அளவிலான நீர்ப்பாசன வேளாண்மை செய்தவர்கள்;அவர்களே முதல் முதல் மக்கள் நிறைந்த நகர்ப்புற அமைப்பை நிறுவியவர்கள்;அவர்களே முதல் முதல் சிறப்பு தொழில் அடிப்படையில்,படிநிலை கட்டமைப்புகள் கொண்ட சமுதாயம் [stratified societies]ஒன்றை அமைத்தவர்கள்;அவர்களே முதல் முதல் நிரந்தரமாக ஒழுங்குபடுத்திய படைகளை பராமரித்தவர்கள்; அவர்களே முதல் முதல் எண்ணையும்[கணிதத்தையும்] எழுத்தையும் மேம்படுத்தியவர்கள்;அவர்களே முதல் முதல் சட்டத்தை விருத்தி செய்து சொத்து பற்றிய கருத்துக்கு ஒரு ஒழுங்கு முறையான விளக்கம் அல்லது வடிவம் கொடுத்தவர்கள் ஆகும்.
இன்று நம்மிடம் பல இயற்கை நிகழ்வுகளிற்கு அல்லது அனர்த்தங்களுக்கு விஞ்ஞான அல்லது அறிவு பூர்வமான விளக்கம் உண்டு.ஏன் சூரியன் காலையில் உதிக்கிறான்,மாலையில் மறைகிறான் என்பது எமக்கு தெரியும்.அது போல எமக்கு எது மழையை தூண்டுகிறது,ஏன் இடி புயல் நேரிடுகிறது என்பதும் எமக்கு தெரியும்.ஆனால் பண்டைய சுமேரியர்களுக்கு,பல மர்மமான இயற்கை நிகழ்வுகளிற்கு உண்மையான அல்லது விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அல்லது விளக்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்று இருக்கவில்லை.எனவே,தங்களால் புரிந்து கொள்ள முடியாத அந்த நிகழ்வு,ஒரு பெரும் சக்தியால் நிகழ்வதாக சுமேரிய முனிவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர்.ஆகவே அவர்கள் இயற்கை சக்திகளை உயிருள்ள ஒன்று என முடிவு எடுத்தார்கள்.அவர்களை பொறுத்த வரை இடி முழக்கம் ஒரு உயிருள்ள ஜீவன்.அது போல சூரியன்,மழை,காற்று எல்லாமே ஒரு உயிருள்ள ஜீவன்கள் என நம்பினார்கள்.இப்படியான அவர்களின் நம்பிக்கை காரணமாக பண்டைய சுமேரியர்கள் பல இயற்கை சக்திகளை கடவுளாக வழிபடத் தொடங்கினார்கள்.நிலம் நீர் காற்று என இயற்கையைப்
போற்றினார்கள்.அவர்கள் ஒரு விவசாய சமுகம் என்பதால்,தமது உயிர் வாழ தேவையானவற்றுடன் தொடர்பு உடைய தெய்வங்களை முதலில் வழிபட்டார்கள்-நீர் கடவுள்,மழை கடவுள்,சூரிய கடவுள்,சோளக் கடவுள் என பல கடவுள்களை வழிபடத் தொடங்கினார்கள்.ஒவ்வொரு இயற்கை சக்தியும் கடவுள் என திடமாக நம்பினார்கள்.அது மட்டும் அல்ல,மெசொப்பொத்தேமியாவின் கால நிலையும் அதன் மதத்தின் உருவாக்கலில் பெரும் பங்கு வகுத்தது.பண்டைய எகிப்தின் நைல் ஆற்றின் போக்கினை முன்கூட்டியே அறியத்தக்கதாக இருந்தது.இதனால்,வெள்ளத்தை எதிர்நோக்கவும் நீர்ப்பாசனத்தை கட்டுபடுத்தவும் அவர்களால் முடிந்தது.ஆனால்,மெசொப்பொதாமியாவின் டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளும்[Tigris and Euphrates rivers] இவைக்கு முரணாக இருந்தன.அவை எதிர்பாராதவிதமாக விரைவாக வெள்ளத்தை கட்டுக்கடங்காமல் ஏற்படுத்தின.அவை பெரும் சேதங்களை ஏற்படுத்தின.இதன் காரணமாக,இயற்கை ஒரு பயங்கரமானது எனவும் மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது ஒன்று எனவும் கருதினார்கள்,எனவே அந்த இயற்கை கடவுள்களை கௌரவித்து அதன் ஆதரவை பெற முயன்றார்கள்.அந்த கௌரவம் தான் கடவுளையும் மதத்தையும் உண்டாக்கியது என நாம் கருதலாம்.ஆகவே இயற்கை வழிபாடே அவர்களின் சமயத்தின் மூலமாக இருந்தது.சங்க கால தமிழர்கள் கூட இயற்கையையே முதலில் வழிபட்டார்கள்.ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இயற்கை சக்திகளை அப்படியே சக்திகளாகவே அவர்கள் முதலில் வழிபட்டார்கள். எப்படியாயினும், நாளடைவில் காலம் செல்லச் செல்ல மனித உருவம் இந்த சக்திகளுடன் இணைக்கப்பட்டன.இந்த மனித உருவ கடவுள்,இயற்கை சக்திகளை கட்டுப்படுத்துவதாக இப்ப அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.அவர்களின் உலகம் முழுவது ஆண்-பெண் கடவுள்கள் பல பல நிரம்பின.சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் எல்லாமே கடவுள் ஆகின.தங்களை சுற்றி வளரும் நாணலை,தருவது பெண் தெய்வம் நாணல்[goddess of the reeds] என நம்பினார்கள்.அது போல தாம் வடிக்கும் பியரை தருவது பெண் தெய்வம் பியர் [goddess of the beer]என நம்பினார்கள்.

மெசொப்பொத்தேமியா தவிர,இன்னும் ஒரு இரண்டாவது நாகரிகம்,வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில்,நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில்,கி மு 3000 ஆண்டளவில் தளைத்தோங்கின.ஆனால்,நாம் முன்பு குறிப்பிட்டவாறு,அங்கு இருந்த ஆறுகளின் வேறுபட்ட நடைத்தைகளால்,இவ்விரண்டு மதங்களுக்கும் இடையில் முக்கிய வேறுபாடு காணப்பட்டது.மெசொப்பொத்தேமியாவில் இயற்கை சக்திகள் ஒழுங்கற்றதாகவும்,வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவு ஒன்றை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தன.இதனால்,அவர்களின் கடவுள்களின் நடத்தையை முன்னறிந்து கூறமுடியாததாகவும் அத்துடன் அந்த கடவுள்கள்,அசாதாரண சக்தி படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.இதனால்,அவர்களை மத குருமார் அமைதிப்படுத்தி மகிழ்வூட்ட வேண்டியும் இருந்தது.அங்கு மக்கள் கடவுளின் தயவில் இருந்தார்கள்.எனவே,கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றி,அவர்களை மகிழ்வித்தலே மனித வர்க்கத்தின் கடமையாக இருந்தது.இதற்கு மாறாக,எகிப்தில்,இயற்கை இடையூறு குறைவாகவும் இதனால் அழிவு குறைவாகவும் இருந்தன. ஆகவே கடவுள்கள் பாசமிக்கவராகவும்,தயாள உணர்வுள்ளவராகவும் இருந்தனர்.அத்துடன்,பொதுவாக,மனித இனத்தின் மேல் கருணைகாட்டு பவராகவும் இருந்தார்.மேலும் சுமேரிய பெண் தெய்வம் ஈனன்னா,திராவிட [தமிழ்] பெண் தெய்வம் காளியுடன் பல பல அம்சங்களில் ஒத்துப் போகிறார்.அத்துடன் தமது எல்லா பயத்தில் இருந்தும்,காளி தம்மை மீட்பாள் என இன்றும்,அவளை வணங்குபவர்கள் நம்புகிறார்கள்.காளி ஆரியருக்கு முந்திய சிந்து சம வெளி பெண் தெய்வம் என கருதப்படுகிறது.ஏனென்றால்,வேத கால ஆரியர்கள் என்றும் பெரும் பெண் தெய்வம் வைத்திருக்கவில்லை,அது மட்டும் அல்ல,அவளின் கருத்த உடல்,கட்டாயம் அவள்,திராவிடரின் சிந்து சம வெளியை ஆக்கிரமித்த வெள்ளைத்தோல் ஆரியருக்கு முந்தியவள் என்பதை காட்டுகிறது.அத்துடன்,மத்திய கிழக்கு நாடுகளிலே தோற்றம் பெற்ற,ஆபிரகாமிய சமயங்கள்["Abrahamic religions"] என அழைக்கப்படும்,  யூதம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற உலகின் முதன்மை சமயங்கள்,மோசே[Moses] என்னும் இறைவாக்கினரால் உருவாக்கப்பட்ட ஐந்து நூல்களின் தொகுப்பான தோரா (Torah) கடவுளால் அவருக்கு வழங்கப்பட்டதாக நம்புகிறார்கள்.மேலும் மோசே கிறிஸ்தவ,இஸ்லாம்,யூத,சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார்.அத்துடன்  கிறிஸ்தவம்,யூத மதங்களில் முக்கிய நபராகவும்,இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் இருப்பவர் ஒரே நபரான,ஆபிரகாம்[Abraham] ஆவார்.என்றாலும்,வரலாற்றில் அடிக்கடியும்,இன்றும் கூட இந்த வாரிசுகள் தமக்குள் மோதுகிறார்கள்.இவர்கள் எல்லோரும் மோஸஸின் புத்தகம் என்று சொல்லப்படும் தோராவை புனித நூலாக தமக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.இது ஒன்றே அவர்களுக்கு இடையேயானஅனைத்து வேறுபாடுகளையும் மறக்க உதவும். இப்படியான,இந்த தோராவில்,பகுதியளவிலாவது சுமேரியரின் செல்வாக்கை காணலாம்.சுமேரிய வெள்ளத் தொன்மத்திற்கும் (Sumerian flood myth),ஆபிரகாமிய சமயங்களின் நோவா ஊழிவெள்ளத்திற்கும்[Noah's flood] இடையில் ஒற்றுமைகள் இருப்பதையும் நாம் காணலாம்.இதை விட வேறு சுமேரிய புராண [தொன்மவியல்] குறிப்புகளும் சுமேரியரின் செல்வாக்கை அத்தாட்சிப்படுத்துகின்றன.அதே போல பிராமண இந்து சமய மச்ச புராணத்திலும் மற்றும் தமிழ் சங்க இலக்கியத்திலும் இப்படியான ஊழிவெள்ளம் பற்றிய குறிப்புகள் உண்டு.உதாரணமாக கலித்தொகை 104:"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்படப்..." ,முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது.ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை.அருகிலுள்ள சேர,சோழ நாடுகளை வென்று புலிக்கொடி,வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது.

எது எப்படியாயினும்,இன்று நாம் புதினப்பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் வாசித்தும்,பார்த்தும் கேட்டும் அண்மைக்கால செய்தி எம்மை கவலையடைய வைக்கிறது.இன்றைய ஈராக்கில் இருந்த அன்றைய பண்டைய மெசொப்பொதாமியாவின் தொல்பொருள் தளங்கள் ஆண்டவனின் பெயரால் அல்லது சமயத்தின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டும் மற்றும் அழிக்கப்படுவதும் தான் அந்த செய்தி. மனித வரலாற்றினை,உலகின் முதலாவது நாகரிகத்தை,எமக்கு எடுத்துக்காட்டும் சான்றுகளாக அமைந்தது இந்த தொல்பொருள் தளங்கள் ஆகும்.இங்கு தான் முதலாவது நகர அரசும்,முதலாவது சமய அமைப்பும் உருவாகியது!
                                                                 [ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 07.......... அடுத்த வாரம் தொடரும்.

1 comments:

  1. சுமேரியரில் தொடங்கும் வழிபாட்டு முறைகளின் வளர்ச்சியும் இன்றைய நிலை என்பதற்குள் கால் பதித்த கட்டுரை தொடர உள்ளது. இயக்கைகளின் அறிவு அறியாத சுமேரியர்கள் இயற்கையை இறைவன் என்று வழிபட்டனர். அவர்கள் அறியாமலோ அன்றி அறிந்த....
    இன்று விஞ்ஞானம் இயற்கையை அறிந்துள்ளது. அதனால் என்ன பயன். உள்ளது உள்ளபடி தானே. இயற்கையை ஆக்கவோ அன்றி அழிக்கவோ விஞ்ஞானத்தால் முடியுமா? ஆகவே மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி என்ற ஒன்று உண்டு. அது தான் இறைவன். மனிதன் வாழ இறைவனின் படைப்புகள்.

    ReplyDelete