"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:08

திராவிடர்கள் மற்றும் பல பண்டைய சமூகங்கள் மத்தியில்,தாய் அல்லது அன்னை தெய்வ வழிபாடு மிகவும் தொன்மையானது. பெண்களை தாய்மையின் வடிவமாகவும்,வளமையின் குறியீடாகவும் சக்தியின் வடிவமாகவும் மக்கள் பார்த்தமையினால் தாய்த் தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம்.எனினும் சில பிற்கால மதங்கள் ஆண் தெய்வத்தை முதனிலைப்படுத்தி,பெண்ணின் தலைமைத்துவ பங்கை அங்கு இல்லாமல் ஒழிக்க முயன்றாலும்,இவைகளை தாண்டி இன்னும் இந்த மரபு தொடர்கிறது.உதாரணமாக,திராவிட பண்பாட்டில்,கி.மு மூன்றாம் மில்லென்னியத்தில், சுமேரிய பெண்கள்,ஆலய கட்டிடத்திற்கு தமது கணிசமான பங்களித்து,சமூக நடவடிக்கைகளில் தாம் ஈடுபட  தமக்கு அங்கு சுதந்திரமான பொருளாதார நிலையும் அரசியல் உரிமையும் இருந்தன என்பதை வெளிக்காட்டியுள்ளனர்.அவர்களின் பெயர்களுடன் 'ama' என்ற பின்னொட்டு சேர்ந்து இருந்தன.'ama' என்பது தமிழில் அம்மா ஆகும்.இந்த சுமேரிய காலத்தில்,பெண்ணின் சரியான பெயரின் ஒரு பகுதியாக வந்த இன்னும் ஒரு சொல் ' anna ' ஆகும்.உதாரணமாக,ஏண் உடு அன்னா/ஏண் உடு  அண்ணா? (Enhudu Anna) வை எடுத்துக் கொள்ளலாம்.இந்த பெயரின் பொருள்,
பெரிதும் மதிப்பிற்குரிய (ஏண்> வேண் > வேள்) வானத்து (அன்னா) விண்மீன் (உடு) ஆகும்.எது எப்படியாயினும்,இந்த சுமேரிய சொல் அன்னா[anna], ஒருவளின் பெயரில் அப்படி ஏற்படும் போது,பழந் தமிழில் aNNaa வை அல்லது இன்றைய தமிழில் அன்னையை குறிப்பதாக இருக்கலாம் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.மேலும் சுமேரியா,தந்தைவழி ஆட்சிக்கு உட்படமுன்பு,அங்கு கண்டு எடுக்கப்பட்ட நூல்கள் மூலம் அங்கு தாய்வழி சமயம் இருந்தது உறுதிப்படுத்தப்படுகிறது.உதாரணமாக,லகாஷ் நகர தாய் தெய்வம் நன்ஷே[Nanshe],"அனாதைகளை அறிந்தவள்,விதவைகளை அறிந்தவள்,ஏழைக்கு நீதி வழங்குபவள்,நலிந்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பவள்" என அங்கு அவள் வழிபடப்பட்டாள்.அத்துடன் புது வருட தினத்தன்று அவளே எல்லா மனித இனத்திற்கும் தீர்ப்பளிப்பவர் ஆவார்.அது போலவே தாய் தெய்வம் நியாப[Niaba]வும் போற்றப்பட்டார். ஆனால்,செமிட்டிக் இனமாகிய  அக்காத்தியர்,அசிரியர் மற்றும் பபிலோனியர் சுமேரியரை வென்று மெசொப்பொத்தேமியாவை ஆளுகையில், தந்தைவழி பண்பாடு அங்கு சமயத்தை ஆட்சி செலுத்தியது.உதாரணமாக,பிந்திய சுமேரியர் காலத்தில்,ஆண்
தெய்வங்கள்,தமது மனைவி,பெண் தெய்வங்களை விட  பலமும் அதிகாரமும் வாய்ந்ததாக இருந்தது.அதே நேரத்தில்,ஆண் வர்க்கத்தால்.பெண்வர்க்கமும் ஒடுக்கப்பட்டன.அங்கு கண்டு எடுக்கப் பட்ட, நெறிப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் இதை நிரூபிக்கிறது.சுமேரியாவில் தான்,நாம் உண்மையில் முதல் முறையாக,முழுமுதற் கடவுள் என்ற தகுதியில் இருந்து குறைந்த தகுதிக்கும் பங்கிற்கும் பெண் அல்லது தாய் தெய்வம்,ஆண் தெய்வத்தால் தள்ளப்படுவதை காண்கிறோம்.இதன் தொடர்டபாக,பெண்களின் நிலையும் சமூகத்தில் பின்தள்ளப்பட்டதுடன்,பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்தன. உதாரணமாக,கி மு 2000 ஆண்டு அளவில்,தாய் தெய்வம் நுன்லில்[Nunlil] கற்பழிக்கப்படுகிறாள்.மேலும் பெண் தெய்வமும் பெண் மத குருவும் பல அதிகாரங்களைக் தொடர்ந்து வைத்திருந்தாலும்,கி மு 450 ஆண்டு அளவில்,பாபிலோனிய நகர ஆலயங்கள்,ஆண் பூசாரிகளின் அதிகார வரம்பின் கீழ்,தேவதாசிகள் மூலம்,விபச்சார இடமாக மாற்றப்பட்டன.தேவதாசிகள் இன்பம்-அளிப்பவர்களாகவும்,அதே வேளை,பக்தர்ககளுக்கும் தெய்வத்திற்கும் இடையில் இடைத்தரகர்களாகவும் தமது பணியை மேற்கொண்டனர்.மேலும் ஆலய விலைமாதுகளின் வருமானம்,ஆண் மதகுரு நிர்வகிக்க்கும் இந்த ஆலயத்தின் வருவாயையும் கூட்டியது.

சைவ மதம் பிராமண இந்து மதத்திற்குள் உள் வாங்கப்பட்ட பின்,வடமொழியில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணத்தின் சில பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்பே கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணம் ஆகும்.இந்நூல் பெண்ணின் பங்களிப்பு இன்றி பிறப்பு உருவாவதாகக் காட்டுகிறது.அதாவது பார்வதிதேவியின் துணை இல்லாமலேயே சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளின் மூலமாக முருகனைப் பெற்றெடுப்பதாக கதை பின்னப்பட்டுள்ளது.படைப்பு என்பது பெண்ணுக்குரியது என்பதனை மறுதலிக்கும் வகையில் பிரம்மன் படைப்புக் கடவுளாக கட்டமைக்கப்பட்டுள்ளார்.இத்தகைய உருவாக்கங்கள் பிறப்பினை மேற்கொள்ளும் செயலால் உயர்ந்தவளாகப் பார்க்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான உருவாக்கங்களாகவே காணமுடியும்.இதுமட்டுமன்றி சிவன்,சக்தி பற்றிய கதையாடல்கள் ஆண்,பெண் இருவருக்கு மிடையே ஏற்பட்ட அதிகாரப் போராட்டத்தின் விளைவே ஆகும்.தில்லையில் சிவனுக்கும் சக்திக்கும் ஏற்பட்ட நாட்டியப் போட்டியில் சிவனே வெற்றி கொள்கிறார்.இந்தப் போட்டிகளுக்குப் பிறகே ஏதோ ஒரு சமரசப் போக்கு ஏற்பட்டுள்ளது,சிவன் தன் ஒரு பகுதியாக பார்வதியை ஏற்றுக்கொள்கிறார்.எனினும் புராணங்கள் பொதுவாக ஆண் அதிகாரம் வலுப்பெற்ற நிலையினைக் காட்டும் கதைகளாக வெளிப்பட்டு நிற்கின்றன.அவை இன்று தமிழரின் புராணமாக திணிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சைவ சமயம் இந்த வியப்புக்குரிய உலகத்தை பெண்ணாக,சிவனின் சரி பாதியாக,பார்க்கிறது.இதுவே சிவனும்,சக்தியும் சரி பாதியாக காட்டும், "அர்த்த நாரீஸ்வரர்" உருவமாகும்.அபிராமி அந்தாதி-பாடல் 18 இதை அழகாக "வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும்" என உரைக்கிறது.அதாவது,உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும் என்று கூறுகிறது.இதுவே,சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. "சிவனின்றி சக்தி இல்லை.சக்தி இன்றி சிவன் இல்லை." என்ற தத்துவமும் அப்போது தோன்றியது.அதாவது இங்கு சக்தி புவனேஸ்வரியாக பார்க்கப்படுகிறது.அதன் பொருள் உலகின் தாய் [Goddess of earth /World Mother].எனினும் சிவனை (சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் இன்று பொதுவாக இல்லை.சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டம் மாறி விட்டது.இன்றுள்ள சைவர்கள், பிராமண-இந்து மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடப்பதால் நிலைமை மாறிவிட்டது.ஈனன்னா [In-anna /ஈன்அன்னா/ஈன்-அன்னை] வின்
உட்குறிப்பாக இந்த கருத்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது தமிழில் ஈன்-அன்னை,என்றால் எல்லா வெளிப்பாடுகளையும் பிறப்பிக்கும்/தோற்றுவிக்கும் பெண் ஆகும்.தமிழில் ஈன் அல்லது ஈனல்,ஈனுதல்,ஈன்றல்,என்பது பிள்ளைபெறல் என்பதை குறிக்கும்.ஈனன்னா, முதன்மை சுமேரிய பெண் தெய்வம் ஆவார்.இவர் உருக் நகரத்தின் காப்பாளராகவும்,பெண் தெய்வமாகவும் இருந்தார்.இவரின் மற்றும் ஒரு பெயர் இஷ்தார்[Ishtar] ஆகும்.இவர் போர்,காதல் தெய்வமும் ஆகும்.ஏண் உடு அன்னா (அண்ணா?) ஒரு பெண்குரு,எழுத்தர்,பெண் கவிஞர், இளவரசி ஆவார்.இவரின் தந்தை பேரரசன் சார்கோன்(Sargon) ஆகும்.‘உளுகள் அண்ணா’[Lugal-Ane] எனும் ஒருவன் வஞ்சித்து ஏண் உடு அன்னா (அண்ணா?) வை சிறையில் தள்ளினான்.அப்பொழுது,ஈனன்னையின் அருளை வேண்டிப் பாடிய பாடலே The Exaltation of Inanna /ஈனன்னை சீர்பியம்[ஈனன்னா B] ஆகும்.இதன் காலம் கி.மு 2300 ஆண்டு ஆகும்.வேத காலத்திற்கு ஓர் ஆயிரம் ஆண்டுகள் முறப்பட்டதாகும்.இதன் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்பட்டுள்ளதை முன்பு நாம் எடுத்துக் கூறினோம்.மேலும் அதன் முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.இப்ப இதன் முதல் இரண்டு வரிகளைப் பாருங்கள்.

1]nin-me-sar-ra u-dalla-e-a
Lady of all the me's resplendent light
நின் மெய் சர்வ உள் தெள்ளிய
2]mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a
Righteous woman clothed in radiance,beloved of heaven and earth
மை-சீ மேளம் கூறு காங்க வான் ஊரஸ்ய

[Nin/நின்:உயர்ந்து நிற்றல்,Me/மெய்:தத்துவம்,சத்தி,ஆற்றல்,Ul/உள்: > ஒள்> ஒண்< ஒளி,Dalla-e-a/தெள்ளிய:சுத்தமான,அழுக்கற்ற தூய]

இவள்,அன்னையாகிய நின்னா,சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும்.சீர் மிகு பெண் என்பதொடு தூய வெள்ளொலியையே அணிந்திருப்பவள் என்றும் பூவுலகாலும் வானுலகாலும் விரும்பப்படுகின்றவள் என்றும் பொருள் படும்.

‘சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்றும் ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை”[The Divine Energy of Siva] அல்லது சிவசக்தி என்றெல்லாம் கூறலாம்.  
சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்று கூறும் போது,அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே கண்களுக்கு காட்சி தந்துள்ளது என்பது மெய்யாகிறது.இதுவே நின்னாவை அழகு மிக்கவளாக,ஆகவே உலகிலும் விண்ணிலும் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவளாகவும் ஆக்குகின்றது.எல்லா தத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூய வெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை எல்லோரும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்?இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களிடமும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.இதனையே சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூலர் நான்காம் தந்திரத்தில்,பாடல் 889 இல்.மேலும் இங்கு கொற்றவையே 'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம்,பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும்,பின்னர் சிவாவுடன் இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள்.அத்துடன்,அஸ்கோ பர்போலா[Asco Parpola.] என்ற அறிஞர் தமது புத்தாகத்தில் துர்காவிற்கும்[காளிக்கும்] ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார்.தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும் அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதன் பொருள் எல்லா சக்திகளினதும் தலைவர் என்பது[Siva,as lord of all powers] ஆகும்.
"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர் உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே"

சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும்.‘உள்(ஒள்) தெள்ளிய” என்பதும் அதுதானே.‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும் ‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே?அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது,தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும் தராதலமாக அமைகின்றாள்.[தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து]

"துமுழி" (Dumu Zi/அல்லது "தம்முசி" அல்லது தம்முஸ்/Tammuz)) என்ற சுமேரிய தெய்வத்தின் கதை,சுமேரிய பழங்குடியியினர் மத்திய ஆசியாவிற்கு பரவி,பின் தமிழ் நாகரிகமாக மாறியதை எடுத்துக் காட்டுகிறது.திராவிட மொழியின் ஒலிப்புவிதி[the phonetic laws],துமுழியில் இருந்து-துமுழி, தம்முசி,தம்முஸ்-என்றெல்லாம் மாறிய சொல்,தமிழ் ஆகியிருப்பதற்கான வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்கிறது.அது மட்டும் அல்ல,சிவ ஆலயங்களில்,இனவிருத்தி ஆற்றல் மற்றும் செழிப்பு வேண்டி,அன்னை பார்வதியின் கல்யாணமும்[மீனாட்சி கல்யாணம்] இதை திறம்பட உறுதிப்படுத்துகிறது.இந்த கல்யாணம்,துமுழி-ஈனன்னா புனித கல்யாணத்துடன் ஒப்பானதாக உள்ளது.தெலுங்கர் திராவிடரை/தமிழரை அரவாலு அல்லது இரைச்சல் போடுபவர்கள் என்று கூறுவர்.பாபிலோனியாவில்,தம்முஸ் தெய்வத்தின் இறப்பை,அவரின் சரித்திரத்தை பாடி ஒப்பாரி வைப்பது போன்று,இன்றும் தமிழர்களின் செத்த வீடுகளிலும்,இறந்தவரின் நற்பண்புகளை,செயல்களை குறிப்பிட்டு ஒப்பாரி வைக்கும் மரபு உண்டு.அந்த ஒப்பாரி இரைச்சல்,இப்படி அவர்கள் கூற காரணமாக இருக்கலாம்?ஆகவே சுமேரிய தெய்வம் துமுழி,தமிழர்களின் மதிப்புக்குரிய, உயரிய மூதாதையராக
இருக்கலாம்?இவரே சிவன் என்ற பெயரில் மாற்றப்பட்டிருக்கலாம் என சிலர் சிவா-பார்வதி கல்யாணத்தை ஒப்பிட்டு வாதிட்டாலும்,வேறு சிலர் இவரை,தம்முஸ் தெய்வத்தின் உருவம் "முருகனை" போலவே இருப்பதாலும்,மேலும் தம்முஸ் சொல் திரிவடைந்து தமிழ் என்ற சொல் ஏற்பட்டவாறே,முருகனை தமிழ் கடவுளாக அழைப்பதாலும்,இவர் தமிழ் கடவுள் முருகனே என வாதிடுகின்றனர்? ஈராக்கில் இருந்து இந்தியா நோக்கி குடிபெயர்ந்த தமிழர்கள்,அங்கிருந்த சிவபெருமானையும் அல்லது முருகனையும் தம்மோடு காவிக் கொண்டு வந்து விட்டார்கள் போலும்.இவர் தொடக்கத்தில் உருக் நகரத்தின் அரசனாகும்."ஈனன்னா துமுழியின் களவொழுக்கம்" [’courtship of Inanna and Dumuzi’ ] என்ற கதையே பிற்பாடு கி மு 700 முதல் கி பி 300 வரையான சங்க இலக்கியத்தின்,ஆணும்,பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு,காதலித்து,மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய அகம் பாடல்களுக்கு வித்திட்டு இருக்கலாம்.இங்கு இந்த தெய்வங்கள் தலைவன் தலைவியாக மாற்றப்பட்டு இருக்கலாம்?

தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில்,473 புலவர்களால் எழுதப்பட்ட காதல்,போர்,வீரம்,ஆட்சியமைப்பு,வணிகம் போன்ற நடப்புகளை எடுத்துரைக்கும் 2381 பாடல்களைக் கொன்ட செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற இயற்கை வழிபாட்டு முறைகளே, சங்க காலத்திற்கு முன் இருந்தோரின் அல்லது எம் முன்னோரின் வழிபாட்டின் தொடக்க நிலையாக அமைந்திருந்தன என நாம் கருதலாம். அத்துடன்  இவ்வியற்கை வழிபாட்டு முறைகள்,காலந்தோறும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுவாக அன்பின் அடிப்படையிலும்,அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது எனலாம்.இந்த முன்னைய சங்க காலத்தில் பிறையைத்[சந்திரனை] தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,

‘‘வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’-என்று குறுந்தொகை - 307 கூறுகிறது. 

அதாவது,கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் என்று குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது.இதனால் நமது முன்னோர்கள் இயற்கை ஆற்றலை தெய்வமாக வழிபட்டார்கள் என்பது தெளிவாகிறது.அது போல மரம்,கல்,நீர்,நட்சத்திரம்,கிரகங்கள் வழிபடப்பட்டுள்ளன.மேலும்,"சமய உணரை்வயும் தமிழையும் பிரிக்க முடியாது" என்ற உண்மையை முதல் முதல் எடுத்து இயம்பியது தொல்காப்பியம் ஆகும்.தூய ஆன்மிக நெறியோடும்,பக்தி உணர்வோடும்,கடவுள் வழிபாட்டு வழியை,நாட்டின் நிலப்பகுப்போடு இணைத்து, கிழ்கண்டவாறு,காட்டுகிறது இந்த தொல்காப்பியம் 

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்"

என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.அதாவது தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சங்ககாலப்பாடல்கள் இயற்கையின் சித்திரங்களையே தங்கள் கவித்துவத்துக்கான ஆதாரமாகக் கொண்டவை.சங்கப்பாடல்களில் பொதுவாக,இயற்கையே மனிதமனமாக தோற்றம் அளிக்கிறது.சங்ககாலத்து விழாக்கள் இறைவனுடன் நேரடியாக தொடர்புடையவையாக இல்லை,அவை  இயற்கையுடன் தொடர்புடையவை ஆகும்.இயற்கை தமிழரின் முக்கியமான வழிபடுபொருள் என்பதை இன்றும் தமிழரின் மதவழிபாட்டு முறைகளைக் கொண்டு சொல்லிவிட முடியும்.நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய திட்டைகளாக இருந்திருக்கின்றன.அங்கிருந்து தான் அவை பேராலயங்களாக எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பி கு/NB:இணைத்த படங்கள்/Pictures attached:அன்னை தெய்வம்,அர்த்த நாரீஸ்வரர்,ஏண் உடு அன்னா,ஈனன்னா+ துமுழி,தம்முஸ்[துமுழி],இயற்கை வழிபாடு,மெசொப்பொத்தேமியா தேவதாசிகள் /Mother Goddess,Ardhanarishvara,'Enhudu Anna,In-Anna and Dumuzi,Tammuz[Dumu-zi],nature worship and mesopotamian temple prostitutes 

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 09 தொடரும் 

0 comments:

Post a Comment