மனிதனா!இயந்திரமா!-[செல்வதுரை,சந்திரகாசன்]
உலகம் நம்பமுடியாத அளவில் மனிதன், தானியங்கி மனித வடிவ  இயந்திரங்களை முழு  அளவில் உபயோகிக்கும் அளவிற்கு தொழில் நுடபத்தில் முன்னேறிக்கொண்டே இருக்கின்றான்.

'வருங்கால தொலைநோக்கு'  என்ற தலைப்பில் நான் 2011 இல் எழுதிய விரிவான கட்டுரையின் ஒரு பகுதி:

"புதிய பரம்பரை மனித இயந்திரங்கள்[Humanoid Robot]
2040 களில் பலவிதமான மனித கருமங்களைச் செய்யத் தொடங்கிவிடும். அத்தோடு 2050 இல் 500 கி.மீ. வேகத்தில் தானே இயங்ககூடிய வான்ஷூட்டர்கள் வந்துவிட்டதால் மனிதன் பிரயாணம் செய்வது மேலும் குறையும்"  ........

"மனிதன் தன்னுருவில், நற்குணம் கொண்ட, ஆனால் உலகின் சகல அறிவு நுட்பங்களும் கூடிய இயந்திரங்களை உருவாக்கி, இதுவரை காலமும் தான்  செய்து வந்த, செய்ய முடியாத, செய்ய அஞ்சிய, செயல்களை எல்லாம் இந்த மனித இயந்திரங்களிடம் விட்டு விடுவான். இவர்கள் - இந்த இயந்திரங்கள்- படுபயங்கர வேக வேலைக்காரர்கள் மட்டுமல்ல, பிழையே விடாத, ஓய்வே தேவையற்ற, கீழ்ப்படிவான ஊழியர்கள். உபகரணங்கள் ஏதாவது திருத்த  வேண்டிவரின், தங்களுக்குள்ளேயே கருத்துப் பரிமாறிச் சில வினாடிகளிலேயே சரிபார்த்து விடுவார்கள்." .....

"கடைசியில், உலகில் தொழிலாளர், விவசாயிகள், ஓட்டுனர்கள், பொறியியளார்கள், வைத்தியர்கள், தாதிகள், சுத்திகரிப்பாளர்கள், அரசாங்கங்கள்,  கச்சேரிகள், தொழிலகங்கள், கடைகள்  எல்லாமே இவர்கள் வசம்தான். அதே நேரம், மனிதனோ, தனது தலையில் பொருத்தப்பட்ட நுண் சிம்புவின்  கட்டளைகளுக்கு அமைய ஒரு இயந்திர மனிதன்போல அங்கும் இங்கும்  உலாவி  வருவான்."......

கடந்த காலங்களில் சினிமாப படங்களில் மட்டும் கற்பனையாகக் காட்டப்பட்ட இந்த robot  கள் தற்சமயம் பல துறைகளிலும்  உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில:

* நாசா தனது சர்வதேச விண்வெளி நிலையத்திலும், மேலும் சந்திரன், மற்றும்  கிரகங்களில் நடந்து திரிந்து மாதிரிப் பொருட்களை பொறுக்குவதற்கும் உருவாக்கிய ரோபோட்.

* ஜப்பான் தயாரித்து, கூகிள் வாங்கிய ரோபோட்  மிகவும் சக்தி வாய்ந்தது. ஏணி, மலை, பள்ளம், கிடங்கு, முடங்கு, குப்பை, கூளம் எங்கும் பயணிக்கக்ககூடியது.

* கூகிள் தயாரித்த கூரிய பார்வையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்ட ரோபோட் வாகனங்களைத் தானே ஒடடக்கூடியது.

*நீண்ட கைகளிடைய தண்டவாளத்தில் ஓடும் ரோபோட்கள் தேவையென்றால் எழுந்து தமது கொழுக்கிகளைப் பாவித்து மேல்புறமாக ஏறவும் வல்லன.

* காலிழந்து அசைவற்று இருக்கும் போலீஸ் போன்றவர்கள் தொடர்ந்து கடமையில் ஈடுபடுவதற்கு 360 பாகையிலும் பார்க்கக்கூடிய சக்திவாய்ந்த கேமராவுடன் கூடிய, சிறிய உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய ரோபோட்கள்.

* போர்வீரர்கள் எதிரிகளுக்கும் புகுந்து சென்று உளவு பார்த்துத் தகவல் வழங்கும் சின்னச் சிறிய ரோபோட்கள்.

* போர்வீரர்களின் பெரும் சுமைகளையும் காவிக்கொண்டு, கஷ்டமான பிரதேசத்தில் பயணம் செய்து, விழுந்தாலும் எழும்பிப் பயணம் தொடரக்கூடிய ரோபோட்கள்.

* எதிராளியை உளவு பார்க்க அனுப்பக்கூடிய சிறு உளவு பார்க்கும் பறக்கும் ரோபோட்கள்.

* வீட்டில் சகல வேலைகளையும் செய்து, வீட்டுக் காவலையும் புரிந்து, தேவைப்படின் வீட்டுக்காரருக்கு போனில் தகவல் கொடுக்கும் ரோபோட்கள்.

*தொலைந்தவர்களை அடர்ந்த காட்டுக்குள்ளேயோ, அல்லது தப்பி ஓடிய கைதிகளையோ தேடிப்பிடிக்கும் ரோபோட்கள்.

கடந்த காலங்களில் ரோபோட் என்றால் ஒரு உலோகப் பொருள் போன்று தோற்றம் அளித்தது. இனிமேல், புதிய பரம்பரை ரோபோட்கள் அச்சடித்தாப்போல மனித உருவத்திலும், மனிதன் போலவே பார்க்கவும், உணரவும், நடவடிக்கைகளில் ஈடுபடவும்கூடியதாக, கண் வெட்டு, வாய்ப்பேச்சு, மூக்கு சுவாசம், முடி அசைவு, இதயத் துடிப்பு  போன்ற எல்லாமே மனிதன் போலவே இருக்கும். செல்லப் பிராணிகள்கூடி ரோபோட்களாய் இருக்கும்!

2050 ஆம் ஆண்டிலே, 90% மான மனித வேலைகளை எல்லாம் ரோபோட்கள்தான் செய்யும். என்றால், பல துறைகளிலிலும் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாது போய்விடும் என்ற பயம் உண்டாகும். ஆனால், சரித்திரம் அப்படி சொல்லவில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் மனிதனோ நாம் இப்போது அறிந்திருக்காத வேறு பல துறைகளில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பான். உதாரணமாக, 200 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 80% மானவர்கள் விவசாயம் செய்தார்கள். இப்போது இயந்திரமயமாக்கப்பட்ட்தால் 2% மானவர்கள்தான் அதே தொழிலைச் செய்து மேலதிகமாகவும் தானியம் கிடைக்கின்றது. மிகு 78% மானவர்கள் வேலை இல்லாமலா இருக்கின்றார்கள்? மேலும் இன்னும் பிஸியாக்கவல்லவா  மாறிவிடடார்கள்! அதே போல வரும் காலத்தில் மனிதன் சும்மா இருக்கமாடடான். எதோ சில புதுவித தொழில்கள் உருவாகும்.

தற்சமயம், நாம் எந்தத்துறையிலும் நவீன தொழிநுடபக் கருவிகளை உபயோகிக்கும்போது- உதாரணமாக, பிரயாணத்தின்போது நவிகேற்றர்கள் அல்லது என்ஜினியர் ஒரு பாலம் டிசைன் பண்ணும்போது கணனிகள்  - அக்கருவியோ, கணணியோ தரும் விடையை யோசிக்காமலேயே சரி என்று ஒத்துக்கொண்டு மேலே செல்கின்றோமே! வருங்காலத்தில் இத்தகைய சார்புத்தன்மை 100% நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். 

வரு காலத்தில், மனிதன் பிறக்கும்போதே, அவன் உடம்பில் பொருத்தப்படும்  சிப்ஸ் மூலம், மனிதன் ஒவ்வொரு கணமும் செய்யவேண்டிய கருமங்களை பற்றிய அறிவுறுத்தல்கள் மூளைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்க, அதை  அவன் அப்படியே ஆமாம் போட்டுத் தலை ஆட்டிச் செய்துகொண்டு திரிவான். அவனை இப்போது உள்ள மனிதன் பார்த்தால் ஒரு ரோபோட் போல நடமாடும் மனிதன் (Robotic Human ) என்றுதான் நினைப்பான்.

மொத்தத்தில், வெளியில் போனால் உங்கள் குறுக்கே வந்து போனது மனித வடிவ இயந்திரமா (Humanoid Robot ) அல்லது இயந்திர வடிவ மனிதனா ( Robotic Human) என்று கண்டு பிடிப்பது என்பது மிகவும் இலகுவான காரியமாக இருக்க மாடடாது என்றுதான் சொல்லவேண்டும்!

இக்காட்சியைக் காண்பதற்கு நான் இருக்கமாடடேன்; தற்போதைய குழந்தைகள் நிச்சயம் காண்பார்கள்!
                                                                                                                            

2 comments:

 1. சேரன் பிரபுSunday, November 13, 2016

  மிகவும் அழகாக வரையப்படட நிஜமான கற்பனை. மிக விரைவில் இப்படி எல்லாம் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவர் குறிப்பிடட பழைய கட்டுரைகளை படிக்க ஆவல். அவை அங்கொன்றும், இங்கொன்றுமாய் தீபத்தில் இருந்து கண்டு பிடிக்க சிரமமாய் இருக்கிறது.
  திரும்பவும், ஒரே பக்கத்தில் பிரசுரிக்க முடியுமா? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முடியும்.எதிர்பாருங்கள் நன்றி

   Delete