உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந்தன்



எல்லாமே விதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து விட்டுக் கடப்பதை நான் பார்த்திருக்கிறேன்ஸ்டீஃபன் ஹொக்கிங்.

கோயில்களின் காலம் முடிந்து விட்டது என்று மு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார். ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கிய ஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர்- செயற்பாட்டாளர் அவர். ஒரு புது மதத்தை முழு மதத்தை அவர் கனவு கண்டார்.

ஈழப் போர்க்களத்தில் எல்லா மதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்ட எல்லாத் தரப்புக்களும் மற்றைய தரப்பின் ஆலயங்களை அல்லது வழிபாட்டிடங்களைத் தாக்கியிருக்கின்றன. இதில் கடைசியாக நடந்த தாக்குதல்களே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களாகும். ஈழப்போரில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளின் பின் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஈழப்போர்க் காலத்தில் பெரும்பாலான எல்லாக் கோயில்களும் பாதுகாப்பை இழந்து காணப்பட்டன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களின் மீது விமானங்கள் குண்டுகளைப் போட்டன. இதனால் கோயில்கள் சேதமடைந்தன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களைப் படையினர் சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்றனர். அல்லது கோயில்களுக்குள் வைத்தே சுட்டுக்கொன்றனர். மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த மக்கள் விடுதலை இயக்கத்தால் கொல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் போதி மரத்தை வணங்கிக் கொண்டிருந்த பக்தர்களும் கொல்லப்பட்டார்கள். தலதா மாளிகை தாக்கப்பட்டது. அதாவது போரில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆலயங்களைத் தாக்கியிருக்கின்றன.

குறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தஞ்சம் புகுந்த பெரும்பாலான கோயில்களில் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல தொடர்ச்சியான பேரிடப்பெயர்வுகளின் போது தமிழ் மக்கள் தமது இஷ்ட தேவதைகளையும் வழிபாட்டிடங்களையும் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிசயங்கள் அற்புதங்கள் நடக்குமென்று நம்பிக் காத்திருந்த மக்கள் மிக மிகக் குறைவு. அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது என்று எக்ஸோடஸ் நாவலில் வருவது ஈழத்து தமிழர்களுக்கும் பொருந்துமா? தமது இஷ்ட தேவைதையை முழுக்க முழுக்க நம்பித் தமது வழிபாட்டிடங்களில் இறுதி வரை தங்கியிருந்த மக்கள் மிகமிகக் குறைவு. அது ஓர் மிக அரிதான தோற்றப்பாடு.

குறிப்பாக 1995இல் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த போது பெரும்பாலான பெருங் கோயில்கள் வழிபாடின்றியும் பூசைகளின்றியும் இருண்டு கிடந்தன. இடம்பெயர்வு நிகழ்ந்து நான்கு நாட்களின் பின் சில நண்பர்களோடு நான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தேன். நல்லூரில் யாரும் இருக்கவில்லை. கோயிற் பிரகாரம் இருண்டு காணப்பட்டது. என்னோடு வந்த ஒரு நண்பர் கூறினார். “இப்படிக் கோயில்களில் விளக்குகள் எரியாத ஒரு காலம் வருமென்று யோகர் சுவாமிகள் முன்னொருமுறை கூறியிருப்பதாக

தமிழ் மக்கள் பேரிடப்பெயர்வுகளின் போது பெரும்பாலும் கோயில்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்தார்கள் அல்லது கோயிற் சுருவங்களையும் தங்களோடு சேர்ந்து இடம்பெயர்த்தார்கள். நாலாம் கட்ட ஈழப்போரின் போது மடுமாதா இப்படி தேவன்பிட்டி வரையிலும் இடம்பெயர்ந்தார். அவர் தொடக்கத்திலிருந்தே அகதி மூர்த்தம்தான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மடுமாதா மாந்தையிலிருந்து அகதியாக மடுவுக்கு வந்தார். மூன்றாங் கட்ட ஈழப்போரின் போது மடுமாதாவின் கோயிற் பிரகாரத்திலேயே பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. தஞ்சம் புகுந்திருந்த பக்தர்கள் கொல்லப்பட்டார்கள்.

நாலாங் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் பெருங் கடலுக்கும் சிறு கடலேரிக்கும் இடையே இருந்த ஒரு சிறு துண்டிற்குள் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்த போது சிறுகடலுக்கு அப்பால் முள்ளிவாய்க்காலைப் பார்த்துக் கொண்டு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கோபுரம் காணப்பட்டது. எனது நண்பர் ஒருவர் கூறுவர் அக்கோபுரமும் ஒரு யுத்த சாட்சி என்று. ஆனால் ஜெனிவாவில் யுத்த சாட்சியம் சொல்ல வற்றாப்பளைக் கோபுரம் வரவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு படைத்தரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாப்பளைக் கோவிலுக்குட் புகுந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத்தரப்பின் பாதுகாப்போடு கடந்த திங்கட்கிழமை வற்றாப்பளை பெருவிழா நடந்திருக்கின்றது.

இப்படியாக ஈழப்போர்க் களத்தில் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆலயங்களும் பாதுகாக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின் மீளக் குடியமர்ந்த மக்களோடு கோயில்களும் பூசைகளும் வழிபாடுகளும் மீளக் குடியமர்ந்தன. உடைந்த அல்லது சிதைந்த கோயில்கள் மீளக் கட்டியெழுப்பப்பட்டன. புதிதாகவும் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியுடன் நடந்தன. தீவுப்பகுதிகளில் ஒரு கோயில் முதலில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவில் திருத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டு கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிடைத்ததையடுத்து முதலில் கட்டப்பட்ட மண்டபம் உடைக்கப்பட்டு புதிதாக வேறொன்று முன்னதை விட பெரியதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் தீவுப்பகுதிகளில் சில பாடசாலைகளில் மாணவர்கள் காலை உணவு அருந்தாமல் படிக்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஒரு மருத்துவர் கூறுகிறார்.

இவ்வாறு 2009ற்குப் பின் கோயில்கள் பெருமெடுப்பில் புனரமைக்கப்பட்டு பல வண்ணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அத்தாக்குதல்கள் குறிப்பாக கோயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. அது கோயில்களுக்கும் உல்லாச விடுதிகளுக்கும் எதிரான ஒரு யுத்தமாகக் காணப்படுகிறது. இதையடுத்து கோயில்களைப் பாதுகாப்பதற்காக அவற்றைச் சுற்றிப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொச்சிக்கடை அந்தோனியர் கோயிற் பகுதி கிட்டத்தட்ட ஒரு கடற்படை வளாகம்போல காணப்படுகின்றது. கடந்த வாரம் நல்லூர் கோயிலுக்கு ஆபத்து என்று வெளிவந்த தகவலையடுத்து கோயில் வெளிவீதி மூடப்பட்டது. மிகச் செறிவாக படையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டார்கள். ஒரு மொட்டைக் கடிதத்தை வைத்து சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. “கடவுளுக்கு இதுவரை நான் எழுதிய கடிதங்களுக்கு அவர் பதில் போட்டத்தில்லை ஆனால் ஒரு மொட்டைக் கடிதத்துக்கு கடவுள் பயப்படுவதாக அரசாங்கம் நம்புகிறதுஎன்று எனது நண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார்.

நல்லூரில் கொச்சிக்கடையில் மட்டுமல்ல பெரும்பாலான பெருங்கோயில்களின் அருகே படைப் பிரசன்னத்தைக் காண முடிகிறது. தேவாலயங்களில் ஞாயிறு பூசைக்கு வரும் பக்தர்களை வாசலில் வைத்து பொலிசாரும் படையினரும் சோதனை செய்கிறார்கள். வற்றாப்பளை பெருவிழா நடந்தது. அதற்கு வரும் பக்தர்கள் என்னென்ன கொண்டு வரலாம் என்னென்ன கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கடைகள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாப் பக்தர்களும் சோதிக்கப்பட்டார்கள். வழமையாக வரும் பக்தர்களில் மூன்றில் ஒரு பங்கினரே திருவிழாவிற்கு வந்திருந்தார்கள்.

இவ்வாறு தமது இஷ்ட தேவையை அல்லது புனிதரை வணங்கச் செல்லும் போது சோதிக்கப்படுவதையிட்டு பக்தர்கள் என்ன கருதுகிறார்கள்? தமது கடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத் தரப்பும் பொலிசும் பாதுகாப்பு வழங்குவதையிட்டு மதகுருக்களும், பூசகர்களும் ஆன்மீக வாதிகளும் என்ன கருதுகின்றார்கள்? கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்தி கடவுளையும் கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா? தன்னையும் தன்னை நம்பி வரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை? உயிர்த்த ஞாயிறு அன்று தன்னை நம்பி வந்த பக்தர்களை ஏன் அந்தோனியார் எதிரிகளிடம் கையளித்தார்?

இதுவிடயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பெருமதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய சபைகளும் பதில் கூற வேண்டும். செபம், தியானம், உபவாசம், தவம் என்று ஆண்டவரோடு உயிர்த் தொடர்பை பேணுவதாக நம்பப்படும் ஊழியர்க்காரர்களால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை ஏன் முன்னுணர முடியவில்லை? ஏன் தடுக்க முடியவில்லை? ஊழியக்காரர்களையும் ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை படைத்தரப்பிடம் ஏன் ஒப்படைத்தார்கள் ? கடவுளை விடவும் படைத்தரப்பு சக்தி மிக்கதா? அப்படியானால் முப்படைகளின் தளபதியான அரசுத்தலைவர் கடவுளைவிட சர்வ வல்லமை பொருந்தியவரா?

எந்த ஒரு படைத்தரப்பு சென் ஜேம்ஸ் தேவாலயத்துக்கு குண்டு வீசியதோ நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு குண்டு வீசியதோ மடுமாதாவின் பிரகாரத்தை யுத்த களமாக்கியதோ வற்றாப்பளை அம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத் தரப்பிடம் பாதுகாப்பு கேட்பது ஏன்? இக்கேள்விகளுக்கு எல்லா மதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசி மினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியது போல ஆலயங்களின் காலம் முடிந்து விட்டதா? அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவது போல அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டதா? அல்லது தமது பக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா? என்று எல்லா மதப்பிரிவுகளும் சிந்திக்க வேண்டும். இடித்த கோயிலை மீளக் கட்டி பூசி மினுக்கி வழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது? யார் இடித்தது? அப்படி இடிக்கப்பட்ட போது கடவுள் எங்கே? அல்லது அங்கே கடவுள் இல்லையா? ஏன்ற கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை? யாந்திரிகமாக, சடங்காக மதங்களையும் மதகுருக்களையும், ஊழியக்காரர்களையும், பின்பற்றும் மந்தைகளா பக்தர்கள்?

இவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனைகளைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றியதால் ரத்தம் சிந்திய ஒருநாடு அந்த ஆயுத மோதல்கள் முடிவடைந்து பத்து ஆண்டுகளின் பின் மற்றொரு மதத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் சிறிய குருட்டு விசுவாசிக் கூட்டம் ஒன்றின் தற்கொலை அரசியலுக்கு இரையாகியுள்ளது.

இலங்கைத்தீவில் நான்கு பெருமதங்களும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் தனது ஒலிபரப்புக்களையும் ஒளிபரப்புக்களையும் மதப்பிரசங்கங்கள் அல்லது மத அனுஷ்டானங்களுடன் தொடங்கும் ஒரு நாடு தனது மதத் தலங்களை படைத்தரப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டதா? இவ்வாறு தனது மத நம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒரு மக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள்? யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கச் செயற்பாட்டாளரான கலாநிதி சிதம்பரநாதன் அடிக்கடி கூறுவார்கிரிட்டிக்கலாகவிமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க அரசியலில் மாற்றம் உண்டாகும்என்று. ஆனால் தனது மத நம்பிக்கைகள் வழிபாடு என்பவற்றைக் குறித்துகிரிட்டிக்கலாகசிந்திக்காத ஒரு சமூகம் சமூகப் பொருளாதார அரசியல் விவகாரங்களில் மட்டும் கிரிட்டிக்கலாக எப்படிச் சிந்திக்கும்?
⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪

1 comments:

  1. 27/07/2019 செய்திகளில் சில...
    👉 திருவிழாவுக்குள் நுழைந்த குழு அட்டகாசம்
    👉 கோபுரத்திலிருந்து குளவி தாக்கி முதியவர் உயிரிழப்பு
    👉 யாழில் ஒரு இந்து ஆலயம் தரைமட்டம்
    இது போன்ற பல செய்திகள் மக்களுக்கு உணர்த்தீயும் ,மக்கள் மாறமாடடார்கள். ஏனெனில் மக்கள் இன்று பேராசை கொண்டு கடவுளை வெறும் கடன்காரனாக உருவகப்படுத்தி அலைகிறார்கள் .ஆனால் ஆலயக்காரருக்கும், அட் டாகாசம் புரிவோருக்கும் தெரியும் அங்கே ஒன்றுமில்லையென்று. அதனாலேயே எதையும் செய்யத் துணிகிறார்கள்.

    ReplyDelete