"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்"






"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்
இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன்
இணங்கி ஒருவள் மனுப் போட்டாள்
இயைபு கொண்டு நானும் வரவேற்றேன்"

"இசை போன்ற அழகிய பேச்சில்
இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து
இறைவி நேரே வந்தது போல
இதயம் மகிழ பாடம் தொடங்கினாள்"

"இலக்கியம் கொஞ்சம் எடுத்துக் காட்டி
இரு வரி திருக்குறள் கூறிக்காட்டி
இயல் இசை நாடகம் சொல்லிக்காட்டி
இயற்றமிழ் தொல் காப்பியம் இயம்பினாள்"

"இரட்டைக் கிளவி பயிற்சி தந்து
இலக்கணம் ஐந்துக்கும் விளக்கம் கூறி
இடைச்சொல் கூறி கயல் விழியாள்
இடை வளைவு குலுங்க புன்னகைத்தாள்"

"இலக்கியம் சொல்லா குறுநகை அழகில்
இதயம் பறிகொடுத்து கிட்ட நெருங்க
இளமையும் வனப்பும் மாறா ஆசிரியை
இரண்டு இமையும் மூடித் திறந்தாள்"

"இருசொல் இணைதல் புணர்ச்சி என்று
இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி
இங்கிதமாய் விளக்க என்னை தழுவி
இணங்கு தன் ஏக்கத்துக்கு என்றாள்"

"இலக்கணம் மறந்து இலக்கியம் படைக்க
இதயத்தை வருடும் மெல்லிய நளினத்துடன்
இதுவரை படித்தது காணும் என்று
இதமாக கூறி அருகில் வந்தாள்"

"இச்சை கொண்டு நானும் நெருங்க
இறுக்கி தழுவி தோளில் சாய்ந்து
இதழ்கள் பதித்து எதோ உளறி
இனியும் வேண்டுமா இலக்கணம் என்றாள்"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, September 14, 2020

    இசப்பிடாதே என் ஏக்கத்தை என்றாள்"

    என்ற வரியை

    இணங்கு தன் ஏக்கத்துக்கு என்றாள்"

    என மாற்றவும்

    இசப்பிடாதே ஒரு பிழையான வார்த்தை போல் உள்ளது,

    நீங்கள் ஒருக்கா சரிபாருங்கள்

    நன்றி

    கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

    ReplyDelete