நன்று நல்கும் சித்தரின் நான்கு நாலடி / 03


சிவவாக்கியம் -026
 
வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே.

மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி, புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால் மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது இவ்வுடம்பு என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள்.

சிவவாக்கியம் -027

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே

ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி தம மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம்.

சிவவாக்கியம் -029

பண்டுநான் பறித்து எறிந்த பன்மலர்களை எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?

தன் வாழ் நாளில் முன்பு வீணாய்ப் பறித்து எறிந்த பன்வகை மலர்கள் எத்தனையோ? மற்றவரை பாழாக்குவதற்கு செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ? இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ? இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள்.

சிவவாக்கியம் -030

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டரிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்டவேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கைஎடுப்பது இல்லையே

அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், அலைந்த அனுபவங்களையும், அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள் காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.
[தொடரும்]

-அன்புடன் கே எம் தர்மா

0 comments:

Post a Comment