சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05

 



சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 038 -

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோஉடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ,  'சிவசிவஎன வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம். 
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -039

கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.

வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால்அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததாகடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததாஅணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -040

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே

பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடாஅவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசைதோல்எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதிஅவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறது?  பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.

*************அன்புடன் கே எம் தர்மா

0 comments:

Post a Comment